Chillzee KiMo Books - புயலுக்குப் பின்... - பிந்து வினோத் : Puyalukku pin... - Bindu Vinod

(Reading time: 5.75 - 11.5 hours)
புயலுக்குப் பின்... - பிந்து வினோத் : Puyalukku pin... - Bindu Vinod
 

புயலுக்குப் பின்... - பிந்து வினோத்

Second edition.

புயலுக்குப் பின்... எனும் இந்த கதை நான் சமீபத்தில் படித்து மாற்றங்கள் செய்த என்னுடைய முதல் கதை.

ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றி பேசுகிறது "புயலுக்குப் பின்...".

இந்தக் கதை எனக்கு 'motivation' கொடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை :-) .

 

 

புயலுக்குப் பின்... – பிந்து வினோத்

 

அத்தியாயம் 1

  

காலை அலாரம் சிணுங்கியது. சாந்தி அதை அணைத்து விட்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் அவளது மூன்று வயது மகள் கவிதாவும், கணவன் அரவிந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

  

அரவிந்திற்கும் சாந்திக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. பெற்றோர் பார்த்து நிச்சயித்து நடந்த திருமணம். அவர்கள் மகள் கவிதாவிற்கு இரண்டரை வயதாகிறது. இந்த வருடம் தான் பாலர் பள்ளிக்கு போகிறாள். அரவிந்த் சாந்தி இருவரும் பொறியியல் பட்ட படிப்பு படித்தவர்கள். சாந்தி கணிப்பொறி துறையில் பட்டம் பெற்று இருந்தாள், அரவிந்த் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்று இருந்தான்.

  

அரவிந்த் சமிபத்தில் தான் தன் தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவி இருந்தான். கவிதா இண்டஸ்ட்ரீஸ் பல இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்தது. புதிய நிறுவனம் என்பதால் அரவிந்த் பல நிறுவனங்களுக்கும் சென்று அலைய வேண்டி இருந்தது. நேற்றும் மிக தாமதமாக தான் வீடு வந்து சேர்ந்தான்.

  

சாந்தி ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை செய்தாள். ஒவ்வொரு மாதமும் கை நிறைய சம்பளம் கிடைத்தது. ஆனால் அவளுக்கு இப்பொழுதெல்லாம் முன்பு போல் வேலையில் ஆர்வம் இருக்கவில்லை, வேலையை விட்டு விட்டு குழந்தையையும் கணவனையும் கவனிக்கவே விரும்பினாள். அரவிந்த் தன் வேலையை ராஜினாமா செய்து கவிதா இண்டஸ்ட்ரீஸ் ஆரம்பித்ததும் அவளுக்காக தான். அவளின் ஆசையை போல் அவள் வீட்டில் இருக்க வேண்டுமென்றால் அவனின் வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவே தான் அவன் இந்த பரிசோதனையில் இறங்கியதே. அவனுக்கு அவளின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை. அவளின் ஆசைகள் எல்லாம் மிக பெரியவை. நினைக்கும் பொழுது அவளுக்கே சிரிப்பு வந்தது.

  

அவளுக்கு சிறு வயதில் இருந்தே பெரிய பங்களா வாங்க வேண்டும், மெரூன் கலர் மெர்சிடஸ் பென்ஸ் வாங்க வேண்டுமென்று ஆசை. ஒரு நாள் விளையாட்டாய் அதை சொல்ல போக அதையெல்லாம் வாங்கி தந்தே தீருவேன் என்று அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அவை அனைத்தையும் வாங்க முடிகிறதோ இல்லையோ, மனைவியின் ஆசையை நிறைவேற்றுவேன் என்று அவன் சொன்னதே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அன்பான கணவன் முத்தான ஒரு குழந்தை வேறு எதுவும் வேண்டும் என்று அவளுக்கு இப்போது தோன்றவில்லை.

  

புன்னகையோடு திரும்பியவள் கடிகாரத்தை பார்த்து திடுகிட்டாள். நேரம் அதற்குள் 5 . 45 ஆகி இருந்தது. அவளின் கம்பெனி பஸ் 6 .30 வந்து விடும். அவசர அவசரமாக எழுந்தாள். பல் துலக்கி, டிபனுக்கு இட்லியும் மதியத்திற்கு தேங்காய் சாதமும் செய்து விட்டு குளித்து வந்தவள், உறங்கி கொண்டிருந்த கணவனை மகள் விழிக்காத வண்ணம் எழுப்பினாள். பாதி தூக்கத்தில் விழித்தவன் மனைவியின் அவசரத்தை கண்டு நேரமாகி விட்டதை உணர்ந்தான். பத்து நிமிடத்தில் இட்லியையும் சாதத்தையும் டிபன் பாக்ஸில் அடைத்து விட்டு, தலை வாரி பவுடர் இட்டு கிளம்பினாள். அதற்குள் அரவிந்தும் முகம் கழுவி பைக்குடன் தயாராயிருந்தான். தினமும் காலையில் மனைவியை பஸ் ஸ்டாப்பில் பைக்கில் கொண்டு விடுவது அரவிந்தின் வேலை. அவர்களுக்கு கல்யாணமாகி 5 ஆண்டுகள் ஆன போதும், தினம் தினம் நடக்கும் வாடிக்கை இது. கணவன் வருவதற்குள் கவிதா தூக்கத்தில் இருந்து எழுந்தால், அவளை கொஞ்சம் பார்த்து கொள்ளுமாறு அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு சொந்தகாரரின் மனைவியிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.