Chillzee KiMo Books - கனவுப் பூக்கள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kanavu pookkal - Srija Venkatesh

(Reading time: 2 - 3.75 hours)
கனவுப் பூக்கள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kanavu pookkal - Srija Venkatesh
 

கனவுப் பூக்கள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

எத்தனை பேர் எப்படிச் சொன்னாலும் அலுக்காத விஷயம் காதல். கனவுப்பூக்கள் என்ற இந்த நாவல் கூட காதலைத்தான் பேசுகிறது.

ஆனால் இது கண்மூடித்தனமான, சுயநலமான காதல் இல்லை. கடமைக்காவும், தாயன்புக்காகவும் காதலை விட்டுக்கொடுக்க முன் வரும் நாயகி அகிலா.

அனாதையான தனக்கு தாயன்பு கிடைக்க வேண்டும் என மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெண்மணிகளுக்காக இல்லம் நடத்தும் நாயகன் ஆனந்த். தனக்கென ஒரு குடும்பம், மனைவி, அழகான குழந்தை என வாழ ஆசைப்படும் அவன் கனவு.

இந்த இரு வித்தியாசமான இளைஞர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது கனவுப்பூக்கள் நாவல்.

அகிலாவின் தாய் ராதாவுக்கு என்ன பிரச்சனை? அவள் ஏன் காதல் என்றாலே வெறுக்கிறாள்? பயப்படுகிறாள்? அகிலாவின் தந்தை ஏன் அவர்களை விட்டுப் போனார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது கனவுப்பூக்கள் நாவல். படித்து விட்டு உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

 

கனவுப் பூக்கள்...

  

அத்தியாயம் 1.

  

வண்ணக் கனவுகள் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த வீட்டு வாசலில் பெரிதாகக் கத்திக் கொண்டிருந்தான் ஆனந்த். நல்ல களையான முகம் இப்போது கோபத்தில் சிவந்திருந்தது. அவன் விழி வீச்சுக்குப் பயந்து வேலை அங்கு வேலை செய்யும் ராமுவும் , பாபுவும் பதுங்கியிருந்தார்கள்.

  

"ராமு அண்ணே! எங்க போயிட்டீங்க? கால் மணியாக் கத்திக்கிட்டு இருக்கேன். இங்க நான் முதியோர் இல்லம் நடத்துறேனா இல்லை ஹாஸ்டல் நடத்துறேனா? இது வீடு மாதிரி பாத்துக்கணும்னு சொல்லியிருக்கேன் இல்ல? இப்ப எதுத்தாப்புல வரப்போறீங்களா இல்லை வேலையை விட்டுத் தூக்கவா?"

  

மெதுவாக கழுத்தை நீட்டிப் பார்த்தான் பாபு.

  

"என்ன தம்பி ஏன் கத்திக்கிட்டு இருக்கீங்க?"

  

"இப்பக் கேளுங்க! ஏன் உங்களுக்குத் தெரியாதா? இன்னிக்குக் காலையில டிஃபன் சரியில்லைன்னு சொல்றாங்க? எங்க ராமு அண்ணன்?"

  

"இதோ இங்க இருக்கேன் தம்பி" என்றபடி நொண்டி நொண்டி நடந்து வந்தார்.

  

"இன்னிக்குக் காலியில என்ன டிஃபன் போட்டீங்க?"

  

"உப்புமா! நேத்து கரண்டு கட் ஆனதுல மாவு அரைக்க முடியல்ல! நாளைக்கு இட்லி போட்டுடறேன் தம்பி"

  

"ஏன் உப்புமாவை இப்படி வேகாமப் போட்டீங்க? பாருங்க இங்க தங்கியிருக்கறவங்கள்ல சில பேருக்கு ஒத்துக்காம உடம்பு சரியில்லாமப் போயிட்டுது. நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இங்க இருக்கறவங்க எல்லாம் வயசானவங்க! நல்ல சத்துள்ள சாப்பாடா குடுக்கணும்னு?"

  

"இன்னிக்கு ஒரு நாள் மன்னிச்சுக்க தம்பி! நாளையிலருந்து நான் சரியாச் செய்யறேன்" என்றதும் உள்ளே போனான் ஆனந்த். அவன் தலை மறைந்ததும் பேச அரம்பித்தான் ராமு.

  

"ஆமா! இங்க தங்கியிருக்கறவங்க எல்லாரும் பெரிய ஆளுங்க பாரு. புருஷன் இல்லாததும் , மகனால கைவிடப்பட்ட கேசும் தான் வருது. அவங்க கெட்ட கேட்டுக்கு இந்த சாப்பாடு போதாதோ? உப்புமா வேகலைன்னு புகார் பண்ணியிருக்காங்க! இருக்கட்டும் இருக்கட்டும் ! இன்னிக்குக் காப்பியில உப்பை அள்ளிப் போடறேன்"

  

அதைக் கேட்டவாறு நின்றிருந்தாள் சாந்தா மாமி. நேரே ஆனந்திடம் விரைந்தாள்.

  

"தம்பி! இங்க பாருங்கோ! நீ ஏதோ வயதான ஆதரவில்லாத பெண்களுக்கு முதியோர் இல்லம் நடத்திண்டு வரே! ஆனா இந்த ராமு ! எங்களை எல்லாம் மதிக்காம கன்னாபின்னான்னு பேசறான். இங்க இருக்கறவாளுக்கு சமைச்சுப் போட ஆள் எதுக்கு? நாங்க பண்ண மாட்டோமா?"

  

"இல்லை மாமி! நீங்க காசு குடுத்துத்தான் சேரறீங்க! நான் எப்படி உங்களை சமைக்கச் சொல்றது? அது நல்லாயிருக்காது."

  

"போனாப்போறது ஏதாவது பொம்பளையை சமைக்கப் போடப்படாதோ? உனக்கு இந்த ராமு தான் கெடச்சானா? நான் ஒண்ணு சொல்றேன் கேக்கறியா?"

  

"சொல்லுங்க மாமி! "

  

"எனக்கு ஒரு தங்கை இருக்கா! அவ பாவம் பிள்ளையாத்துல கஷ்டப்பட்டுண்டு இருக்கா. கையில காசும் இல்ல! அதனால அவளை இங்க வரச் சொல்றேன். அவ சமைக்கட்டும். நானும் கூட மாட ஒத்தாசை பண்றேன். அவ பாக்கற வேலைக்கு