நவரசம் - சசிரேகா
சசிரேகாவின் புதிய சிறுகதை.
காலை மணி 8
அசோக் அப்போதுதான் கண்விழித்து எழுந்தான். எழும்போதே அன்றைய நாளில் நடக்கவிருக்கும் சுபநிகழ்வை எண்ணி மகிழ்ந்தபடியே உற்சாகமாக எழுந்து குளித்து முடித்து அரக்க பரக்க ஹாலுக்கு வர அங்கு அவனது தந்தையோ சாவதானமாக அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார், அதைக்கண்டு வெறுப்பான அசோக்
”அப்பா” என கோபமாக அழைக்க அதற்கு அவரோ மெல்ல தலையை உயர்த்தி என்னவென்பது போல புருவத்தை அசைத்து கேட்க அவனோ
”என்னப்பா பொறுப்பில்லாம உட்கார்ந்திருக்கீங்க, இன்னிக்கு என்ன நாள்ன்னு மறந்துட்டீங்களாப்பா” என கேட்க அதற்கு அவரோ மெல்ல புன்னகைப் புரிந்து
”நான் எதையும் மறக்கலை அசோக்”
”அப்புறம் அமைதியா இருக்கீங்க கிளம்பலையா”
”பொறு இன்னும் உங்கம்மா வரலையே அவள் கோயிலுக்கு போயிருக்கா” என சொல்ல அசோக்கிற்கு இன்னும் கோபம் அதிகமானது.
”இப்ப என்ன கோயில் வேண்டிக்கிடக்கு, எல்லாம் போய் வந்த பின்னாடி செய்யலாம்ல” என கடிந்துக் கொள்ள அதற்கு அவரோ
”அதுக்கில்லை அசோக் முதல் முறையா உனக்கு பொண்ணு பார்க்கப் போறோம், போற இடமே ஓகே ஆகிடனும்னு உங்கம்மா ஆசைப்படறா, அவளுக்கு பொண்ணோட போட்டோ பார்த்ததில இருந்து ரொம்ப பிடிச்சிப் போச்சி” என சொல்ல அதுவரை கோபத்தில் வெறுப்பில் இருந்தவன் பெண் பற்றி பேசவும் தானாக அவனின் கோபம் மறைந்து இதழில் புன்னகை அரும்ப அநியாயத்திற்கு வெட்கப்பட்டான். அவனின் வெட்கத்தைக் கண்டு அவனது தந்தை கலகலவென சிரித்தார் அவரின் சிரிப்பை பார்த்து
”என்னப்பா சிரிப்பு நான் என்ன கோமாளி போலவா இருக்கேன்” என வீராவேசமாக பேச அதற்கு அவரோ
”இப்ப எதுக்குடா இப்படி பொங்கற அமைதியா இரு உன் அம்மா வந்த பின்னாடி நாம 3 பேரும் ஒண்ணா போகலாம்”
”ப்ச் இந்தம்மாவை என்னன்னு சொல்றது” என கோபத்துடன் சொல்ல
”அம்மான்னு சொல்லு“ என அவர் சிரித்தபடியே சொல்ல கோபம் எல்லை மீற அசோக்
”நேரம் ஓடிக்கிட்டே இருக்கு நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணு வீட்டுக்குப் போகனும்ல, நான் வேற பேங்க்ல கேஷியரா இருக்கேன்ஈ என்னோட வேலைக்கு படிச்ச படிப்புக்கு நிறைய பேர் பொண்ணு தர முன்வந்தாங்க, நானும் அழகாதான் இருக்கேன், இருந்தாலும் வேலை சம்பளம் இதைதான் முக்கியமா பார்க்கறாங்க, நான் இப்படி லேட்டா போனா அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்கப்பா”
”அதுக்கு நான் என்னடா செய்ய முடியும், உன் அம்மா வந்தாதானே கிளம்பறதுக்கு அவள் வர்ற வரைக்கும் வேணும்னா நீயும் இந்த நியூஸ் பேப்பர் படியேன் தலைப்பு செய்தியே பரபரப்பா இருக்கு பாரேன்” என சொல்லி பேப்பரை தர அவனும் வெறுப்புடனே அந்த பேப்பரை வாங்கி தலைப்பு செய்தியைப் பார்த்தான்.
பட்டபகலில் நடுரோட்டில் வேடிக்கை பார்த்தபடியே பைக்கை ஓட்டிக் கொண்டு வந்த இளம் வாலிபன் எதிரே வந்த தண்ணீர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது என எழுதியிருக்க அதைப்படித்து இன்னும் அவனின் கோபமே அதிகரித்தது