Chillzee KiMo Books - கஜா - சுபஸ்ரீ முரளி : Gaja - Subhashree Murali

(Reading time: 1.5 - 3 hours)
கஜா - சுபஸ்ரீ முரளி : Gaja - Subhashree Murali
 

கஜா - சுபஸ்ரீ முரளி

கஜா துடிதுடிப்பான இளைஞன்.

அவன் மனதைக் கவர்ந்தவள் பொன்னி.

தன்னவளுக்காக அபாயமான முயற்சியில் இறங்குகிறான்.

அப்போது அவன் எகிப்து நாட்டு மர்மம்  மற்றும் அதன் அரசி கிளியோபட்ராவைப் பற்றி அறியும் விசித்திரமான நிகழ்வுகள்,

அவை அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இக்கதை.

படித்து மகிழுங்கள்

சுபஸ்ரீ முரளி

Chillzee Reviews

Check out the Gaja story reviews from our readers.

  

 

 

கஜா

  

1

  

“கஜா . . கஜ்ஜஜா” என்று குரல்கள் காதை அடைத்தன. கண்ணை கூசிய சூரிய ஒளியை இடது கையால் மறைத்தபடி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தான் கஜா.

  

“அண்ணாத்த . . நைனா” என கூவியப்படி நான்கு இளசுகள் அவனை தூக்கி கொண்டாடின.

  

“டேய் இவன் என்ன பெரிய சுதந்திரப் போராட்ட தியாகியாட “கஜா கஜானு” சத்தம் போடீறிங்க. எவனாவது இங்க நின்னு கூப்பாடு போட்டிங்க உள்ள தள்ளிடுவேன் மவனே . . போங்கடா” என லத்தியை தரையில் தட்டி மிரட்டினான் புழல் சிறையில் வெளியே நின்ற காவலன்.

  

“வரேன் சார்” என சலாம் வைத்தான் கஜா

  

“இதென்ன உன் மாமியார் வீடா வரேன்னு சொல்ற . . போறேன்னு சொல்லுவியா . . இனிமேயாவது இங்கெல்லாம் வராம உருப்படற வழிய பாருடா. இங்கெல்லாம் வந்து கேவலப்படாத” என சலுகை விலையில் பாசம் காட்டினார்.

  

“நீங்க தெனிக்கும் வரீங்க  . . அது மட்டும்?” என முடிக்காமல் விட . . 

  

கடுப்பான காவலனிடம் முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது. சிரித்து மழுப்பி அங்கிருந்து நண்பர்களுடன் அகன்றான் கஜா. 

  

“அண்ணாத்த நீ இல்லாம தொழிலு படுத்திடுச்சி” என்றான் விசா. 

  

“ சரி வுடு அடுத்த ரவுண்டு பாத்திடுவோம்” என தட்டிக் கொடுத்தான். கஜா அவனின்  நண்பர்களுடன் கிளம்பினான். 

  

“கஜா இளச்சிட டா” என்றான் அக்கறையாக கிச்சா

  

“தோடா . . ஜெயில்ல வாரத்துக்கு ஒரு தபா கறி சோறு உண்டு தெரியுமா?” என்றான். என்றுமே தன்னை பார்த்து யாரும் இரக்கப்படக் கூடாது என நினைப்பவன் கஜா.

  

“தெனாவட்ட பாரு” கிச்சா பெரும மற்றவர்கள் ஆமோதிக்க . . கிண்டலும் கேலியுமாய் கிளம்பினர்.   

  

கஜா வீடு சேர்வதற்குள் அவனை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். திருவண்ணாமலையை சேர்ந்த இருபத்தி ஐந்து வயது இளைஞன். மெலிந்த கருத்த தேகம். கூரிய கண்கள் ஆளை பார்த்தே அவன் கையில் வைத்துள்ள காசை கரெக்கிட்டாக சொல்லிவிடுவான். பீடி ஊதி ஊதி கருப்பான உதடுகள். எண்ணை வைக்காத கருப்பும் பழுப்புமான பரட்டை தலை. 

  

கையில் காசும் மனதில் சோகமும் ஒருங்கே கூட்டணி அமைத்த நேரத்தில் மட்டும் சரக்கு அடிப்பான். அப்பொழுதெல்லாம் அவனிடமிருந்து பொன் மொழிகள் பவுண்டனாக பீய்ச்சி சிதறும்.

  

கஜாவின் அப்பா அவனுக்கு ஐந்து வயது இருக்கையில் வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவன் அப்பாவின் முகம்கூட அவனுக்கு சரியாக நினைவில் இல்லை. எல்லாமே அம்மாதான். நாலு வீட்டில் பாத்திரம் கழுவி வயிற்றை கழுவினாள்.

  

குடிசை வீட்டில் வறுமையின் பிடியில் தன் ஒரே மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். ஆனால் படிப்பில் அவனுக்கு  சிறிதும் நாட்டமில்லை.