என்னுயிரே என்னை காதல் செய்வாய் - சசிரேகா
முன்னுரை
பாட்டியைத் தேடி திருவனந்தபுரம் வரும் கதாநாயகி சந்திரிகா, அவளின் பாட்டி ஆதித்யன் வீட்டில் இருப்பதை அறிந்து அவளும் அங்கு தங்குகிறாள். ஆதித்யனோடு எற்படும் சண்டை நாளடைவில் காதலான பிறகு ஏற்படும் சின்ன கருத்து வேறுபாட்டால் அவர்களின் காதல் தோல்வி ஏற்படுகிறது. ஆதித்யன் தன்னுடைய மன உளைச்சலை போக்க சென்னை வருகிறான். அங்கு தனது உண்மையான கடந்த கால வாழ்க்கையை அறிந்த ஆதித்யன் விக்ரமனாக தஞ்சாவூருக்குச் சென்று தனக்கு நேர்ந்த அநீதிக்கு உரிய தண்டனை வாங்கித் தருகிறானா? மீண்டும் ஆதித்யனாக திருவனந்தபுரம் வந்து தனது காதலி சந்திரிகாவுடன் குடும்ப வாழ்க்கையில் இணைகிறானா? என்பதே இக்கதையாகும்.
பாகம் 1
வருடம் 2017
மே மாதம்
திருச்சி அரசு பொது மருத்துவமனை இரவு மணி 3.00
”டாக்டர் இப்ப அவன் எப்படியிருக்கான்” என கண்ணீருடன் கேட்டார் நடராஜன், அருகில் அவரது மனைவி சித்ராவும் இருந்தார்.
“அவுட் ஆஃப் டேன்ஜர், இருந்தாலும் தலையில பலமான அடி, 24 மணிநேரம் அப்சர்வேஷன்ல வைச்சிருக்கோம், இன்னும் அவர் ஒரு மணி நேரத்தில கண்விழிச்சா போதும் இல்லைன்னா கோமா ஸ்டேஜ்தான்” என டாக்டர் சொல்ல நடராஜன் கண்கலங்கினார் அதைக்கண்ட டாக்டர் அவரிடம்
”கவலைப்படாதீங்க, இவ்ளோ பெரிய விபத்தில மாட்டி இவர் உயிர் பிழைச்சதே பெரிய விசயம் ஆமா இவர் கூட வந்த இன்னொருத்தர் யாரு” என விசாரிக்க அதற்கு நடராஜனோ
”ஏன் அவனுக்கு என்னாச்சி” என பதட்டமாக கேட்க அதற்கு டாக்டரோ
“பலமான அடி, ஸ்பாட்லயே இறந்துட்டாரு, அதான் அவரோட சொந்தங்கள் பத்தி உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பாடியை ஒப்படைச்சிடலாம்”
”அவனுக்கு யாரும் இல்லை சார்” என்றார் வெறுப்புடன்
“அப்படியா சரி சரி, போலீஸ் வேற வந்திருக்கு, ஆக்சிடென்ட் கேஸாச்சே கேஸ் பதிவு பண்ணுவாங்க, போய் போலீசை பாருங்க” என சொல்ல அவரும் அதற்குச் சரியென்றார்.
நேராக போலீசிடம் சென்ற நடராஜன் கைகூப்பி
”சார் என் பையன் அங்க இருக்கான் சார், கண்ணை திறக்க மாட்டேங்கறான் சார்” என சொல்லி கண்ணீர்விட
”சார் புரியுது சார் ஆனா, இது ஆக்சிடெண்ட் கேஸ் ஆமா எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சி இங்க கொண்டு வந்தப்பவே அவர்கூட இருந்த இன்னொருத்தர் இறந்திருக்காரே”
“சார் எனக்கே இங்க வந்தபின்னாடிதான் எல்லாம் தெரியும். பைக்ல ரெண்டு பேரும் போயிருக்காங்க எதிர்ல வந்த லாரியில இடிச்சி விபத்தாயிடுச்சின்னு ஒருத்தவங்க சொன்னாங்க சார்”
“உங்க பையன் பேரு என்ன”
“ஆதித்யன் சார்”
“சரி கூட வந்தவன் பேரு”
“விக்ரமன் சார்”
“அவனும் உங்களுக்குத் தெரிஞ்சவனா”
“ஆமாம் சார்”
“இப்ப யார் இறந்தது ஆதித்யனா விக்ரமனா”
“விக்ரமன் சார், என் பையன்தான் உள்ள வார்டுல உயிரோட படுத்திருக்கானே சார்” என நடுக்கத்துடன் சொல்லவும்
”சரி சரி அந்த விக்ரமனுக்கு யாராவது இருக்காங்களா”
“அவன் ஒரு அநாதை சார், மார்கெட்ல காய்கறி வியாபாரம் செய்றவன்”
”சரி சரி இதுல கையெழுத்து போடுங்க” என சொல்லி ஒரு பேப்பரை நீட்ட கை நடுங்கியபடி பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு வேறு பக்கம் சென்றார் நடராஜன்.
போலீசும் யாருக்கோ போன் செய்து
”ஹலோ நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்”
”அது விக்ரமன்தானா” என மறுமுனையில் இருந்தவன் பேச
”ஆமாம் நீங்க சொன்ன ஆளுதான்”
”உயிர் இருக்கா”
”இல்லை இல்லை அவன் செத்துட்டான்”
”நிஜமாவா ஆமா பாடி எங்க”
“பாடி மார்ச்சுவரியிலதான் இருக்கு அதை என்ன செய்றது”
”அவன் ஒரு அனாதை, அவனை வெளிய எடுத்தா பிரச்சனை அங்கயே எரிச்சிடுங்க”
”அப்படியா சரி சரி, நான் அனாதை பொணம்னு எழுதிட்டேன், இங்கயே எரிச்சிடறேன் ஒண்ணும் பிரச்சனையில்லை, கேஸ் தான் போடனுமா வேணாமான்னு பார்க்கறேன்” என இழுக்க
”கேஸ் போட்டா நான் மாட்டுவேன், ஏன்னா நான்தான் லாரியை வைச்சி அவனைச் சாகடிக்க வைச்சதே, நான் உனக்கு 5 லட்சம் பணம் தரேன், கேஸ் ஒண்ணுமில்லாம முடி, குடிச்சிட்டு வேகமா வண்டியை ஓட்டிட்டுப் போய் அவனுங்களா ரோடு ஓரமா நின்னுட்டிருந்த லாரியில இடிச்சதா சொல்லு”