(Reading time: 8.5 - 16.75 hours)
மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - சசிரேகா : Mathimayangi vizhunthen unnile - Sasirekha
 

மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - சசிரேகா

முன்னுரை
அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

 

பாகம் 1

கும்பகோணம்

கதிர்வேலன் தன் வீட்டிற்கும் தெருவிற்கும் பரபரப்பாக நடை நடந்துக் கொண்டிருந்தார். பட்டு வேட்டி பட்டு சட்டை தோளில் துண்டு சகிதம் யாரோ ஒருவரின் வரவிற்காக கண்களில் எதிர்பார்ப்போடு இருந்தார். அடிக்கடி கைகடிகாரத்தில் உள்ள நேரத்தை வேறு பார்த்துக் கொண்டார்.

”என்ன இன்னும் வரலையே, நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சி, எங்க இருப்பாங்க எப்ப வருவாங்க” என அவர் சதா புலம்பிக் கொண்டே பதட்டமாக அலைவதைக்கண்ட அவரின் மனைவி அபிராமியோ கலகலவென சிரித்தார்.

அவரின் சிரிப்பில் பதட்டமாக இருந்த கதிர்வேலனின் முகம் மாறி செல்ல கோபம் கொண்டார் தன் அன்பு மனைவியிடம்

”என்ன அபி நீயும் இப்படி சிரிக்கற”

”பின்ன என்னங்க, ஏதோ 2 வயசு குழந்தையாட்டம் இந்த ஓட்டம் ஓடறீங்க, இப்ப என்ன நடந்துப் போச்சி, இங்க என்ன ஓட்டப்பந்தயமா நடக்குது, நம்ம பொண்ணுக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க அவ்ளோதானே, அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டப்படறீங்க” என சொல்லி சிரிக்க அந்த சிரிப்பில் அவரின் மூத்த மகள் தாமரை செல்வியும் அவ்விடம் வந்து இவர்களுடன் இணைந்துக் கொண்டு சிரித்தாள். அவளின் சிரிப்பைக்கண்ட கதிர்வேலனுக்கு கூச்சமாகிப் போனது

”அம்மாடி நீயுமா என்னை பார்த்து சிரிக்கற” என செல்லக் கோபம் கொள்ள அதைக்கண்டவள்

”அப்பா நானே இங்க பயமில்லாம இருக்கேன், ரொம்ப ஜாலியா இருக்கேன், நீங்க என்னடான்னா இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க, பொண்ணு பார்க்கத்தான் வராங்கப்பா என்னவோ இப்பவே எனக்கு கல்யாணம் ஆகற மாதிரி டென்ஷனாகறீங்க, கூலா இருங்கப்பா”

”அட என்ன தாமரை இப்படி சொல்ற, வர்றவங்க பெரிய ஆளுங்க தெரியுமா, வரவேற்பு, மரியாதையெல்லாம் பலமா தரனும், அவங்க மனசு நோகாத மாதிரி நடந்துக்கனும், எப்படியாவது இந்த சம்பந்தம் சுபமா முடிவாயிடனும்” என அவர் பரபரப்பாக பேச அதற்கு அபிராமியோ

”ஏங்க நம்ம பொண்ணுக்கு இவர்தான் மாப்பிள்ளையா வரனும்னு விதியிருந்தா அப்படியே நடந்துடப் போகுது, நீங்க பதட்டமா பேசினா மட்டும் நினைச்சது நடக்குமா என்ன, அமைதியா ஒரு இடமா பார்த்து உட்காருங்க வாங்க” என அழைக்க அவரோ

”அடிப்போடி நானே சந்தோஷத்தில என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கேன் நீ ஒண்ணு”

”பொண்ணு பார்க்கதான் வரப்போறாங்க, என்னவோ நிச்சயமே நடக்கற மாதிரி சந்தோஷப்படறீங்க”

”கையோட கையா நிச்சயமும் நடந்துட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்” என சொல்ல அதற்கு தாமரையோ

”அப்பா எனக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேணாமாப்பா” என சொல்ல அதிர்ந்தார் கதிர்வேலன்

”ஏன்மா இப்படி சொல்ற, உனக்கு மாப்பிள்ளையோட போட்டோ காட்டி ஜோசியர்கிட்ட ஜாதகம் எல்லாம் பார்த்து பொருத்தம் நல்லபடியா அமைஞ்சி நீ சரின்னு சொன்னதும்தானே நான் இந்த ஏற்பாட்டுக்கே அவங்களை வரசொல்லியிருக்கேன், இப்ப பார்த்து இப்படி பேசறியேம்மா” என பதட்டமாக பேச அதைக்கேட்ட அபியோ

”என்னங்க அவள் கிண்டல் பண்றாங்க, நீங்க ஒண்ணு, எதுக்கெடுத்தாலும் பதறிக்கிட்டு” என சொல்ல அதற்கு அவரோ தன் மகளைப் பார்த்து

”தாமரை என்னை நம்பும்மா, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைதான் நான் அமைச்சி தருவேன், மாப்பிள்ளை தங்கமானவரும்மா, கலெக்டர் ஆகறதுக்காக படிச்சிக்கிட்டு இருக்காரு, அவர் மட்டும் கலெக்டர் ஆயிட்டா எவ்ளோ பெருமையாயிருக்கும், உனக்கும் மதிப்பு கூடும்” என சொல்ல அதற்கு தாமரையோ

”ஆமாம்பா கரெக்டா சொன்னீங்கப்பா, நான் கலெக்டர்க்கு படிக்காமலேயே செலவேயில்லாம கலெக்டராகப் போறேனே” என்றாள் குதூகலமாக

”என்ன சொல்ற அதெப்படி முடியும்” என வெள்ளந்தியாக கேட்ட தந்தையிடம் தாமரையோ

”இப்ப நான் கலெக்டர் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊர்காரங்க என்னை என்னன்னு சொல்வாங்க”

”என்ன சொல்வாங்க” என வெள்ளந்தியாக கேட்டார்

”கலெக்டரம்மான்னு தானே சொல்வாங்கப்பா” என சொல்லி சிரிக்க அதைக்கேட்ட கதிர்வேலனும் பதட்டத்தைக் குறைத்துவிட்டு கலகலவென சிரித்தார். அவரின் சிரிப்பைக்கண்ட அபிராமியோ

”ஏங்க தமிழும் இப்ப இங்க இருந்தா அவளும் சந்தோஷப்பட்டிருப்பாளேங்க”

என சொல்ல உடனே கதிர்வேலனின் நினைவு தனது இரண்டாவது மகள் தமிழ்செல்வியின் மீது விழுந்தது.

”என்ன செய்றது எக்ஸாம்ன்னு சொல்லிட்டாளே” என தாமரை வருந்த

”இருந்தாலும் இங்க நடக்கறதையாவது அவள்ட்ட சொல்லலாமே அப்புறம் ஏன் எனக்கு தகவல் சொல்லலைன்னு கோச்சிக்கப் போறாங்க” என அபிராமி தன் கணவரிடம் சொல்ல அதற்கு