சிவா, அபிலாஷ், தீபக் மூவரும் நெருங்கிய நண்பர்கள். சிறுவனாக இருந்தப் போது சந்தித்த மன அதிர்ச்சியினால் சிவா பொதுவாக பாதுகாப்பற்ற உணர்வுடனே இருக்கிறான். இதனால் அபிலாஷ், தீபாக் தாண்டி யாருடனும் சிவா நெருங்கி பழகுவதே இல்லை.
அப்படிபட்டவன் மேனகாவை பார்த்த உடன் காதல் வசப்படுகிறான். மேனகாவும் அவனை விரும்புகிறாள்.
ஆனால், சிவாவின் மன சிக்கலை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறான் கோபால்.
கோபாலின் சதி வெற்றிப் பெற்றதா? அல்லது சிவா - மேனகா காதல் வெற்றி பெறுமா?
என்னுயிரே நீதானோ?
அத்தியாயம் 01
காணும் திசை எல்லாம் பச்சை பசலேன காட்சி தரும் மேல்மருதூரின் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி. அவர் பரம்பரை பணக்காரர். அந்த ஊருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக தான் பஞ்சாயத்து தலைவர் என்ற பதவியையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஒரே மகள், பெயர் மேனகா. அவரது மருமகள் அப்சராவும் மேனகாவிற்கு துணையாக அவர்களுடனே அந்த வீட்டில் தங்கி இருக்கிறாள். மேனகா, அப்சரா இருவரும் பெயருக்கு ஏற்ப அழகிகளாகவே இருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை ராமசாமிக்கு கடந்த சில மாதங்களாகவே எழுந்திருந்தது.
அதற்காக அவருக்கு தெரிந்த புரோக்கர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் செய்தி சொல்லி வைத்திருந்தார்.
இது வரை அவருக்கு பிடித்ததுப் போல எந்த வரனும் அமையவில்லை.
ராமசாமி அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தப் போது, அந்த வீட்டில் பல வருடங்களாக வேலை செய்யும் கேசவன் தன் எஜமானனை தேடி வந்தார்.
ராமசாமி எந்த பந்தாவும் இல்லாமல் அவரை நண்பர் போல வரவேற்றார்.
“என்னப்பா கேசவா அந்த சென்னை பசங்க சோலார் பேனல் போட்டு முடிச்சுட்டாங்களா? எல்லாம் வேலை செய்யுதா?”
“நான் அங்கிருந்து கிளம்பினப்போ கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சுங்க. அந்த தம்பி சிவக்குமார் தங்கமானவர். அவ்வளவு பெரிய கம்பெனியோட முதலாளி, அவரே அப்படி எல்லாத்தையும் எடுத்து செய்றார்! “
“நானும் கவனிச்சேன் கேசவா. நல்லவரா தான் தெரியுறார். வேலை முடிஞ்ச உடனே நம்ம வீட்டுக்கு வர சொன்னீயா?”
“சொல்லிட்டேங்க. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க. அதான் நான் முன்னாடி வந்து சொல்ல வந்தேன்.”
“நல்ல வேலை செய்த கேசவா. சமையல்காரங்க கிட்ட சொல்லிட்டீயா?”
“காலைலேயே சொல்லி வச்சிருந்தேங்க. இப்போவும் எல்லாம் ரெடியா வைக்க சொல்லி இருக்கேன்”
“இந்த சிவக்குமார் கூட இருக்க பசங்க எப்படி? அவனை போல நல்லவங்களா? வீட்டுக்குள்ளே நம்பி சேர்க்கலாமா?”
“தீபக் தம்பியும் சிவக்குமார் மாதிரியே நாணயமானவர் மாதிரி தாங்க தெரியுது. அவங்கவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க. பேருக்கு கூட பொண்ணுங்களை வேடிக்கை கூட பார்த்தது மாதிரி தெரியலை. இந்த காலத்து பசங்க பத்தி எல்லோரும் எவ்வளவோ சொல்றாங்க. ஆனா இவங்க யாரும் அப்படிப்பட்டவங்களா தெரியலை.”
“அப்படியா? அதிசயமா இருக்கு!”