பொன்னம்மா சக்தி - கோகுலப்ரியா
கோவையில் இருந்து சுமார் இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோலையாம்புத்தூர் என்ற ஊர். இரவு நேரங்களிலும் சாலைகளில் பரபரப்பாய் ஒலிக்கும் வண்டிகளின் ஹாரன் சத்தங்கள், தெருக்கள் எங்கும் மக்கள் நடமாட்டங்கள், அவர்கள் பொருட்கள் சுலபமாய் வாங்குவதற்கு ஏற்றாற் போல் அங்கங்கே பலசரக்கு கடைகள் என்று நகரத்தைப் போல் நவீனமாய் அந்த ஊர் இருந்தாலும், ஒவ்வொரு தெருக்களிலும் சிறு சிறு மரங்கள், செடி கொடிகள், அதிலிருந்து இதமாய் வீசும் குளுகுளு காற்று, வீதி எங்கும் அடுக்குமாடி கட்டிடங்கள் மட்டுமல்லாது அங்கங்கே ஓட்டு வீடுகளும் சில கூரை வீடுகளும், அவ்வீடுகளில் வளரும் கால்நடைகள் என்று முழு நகரமும் இல்லாமல் முழு கிராமமும் இல்லாமல் அளவாய் அமைதியை அமைந்திருக்கும் ஓர் அழகிய ஊர் இந்த சோலையம்புத்தூர்.
அவ்வூரில் செட்டி வீதி முதல் தெருவில் வசித்து வருபவர் பொன்னம்மா. செட்டி வீதியில் தோராயிரமாய் ஏழு எட்டு தெருக்கள் உள்ளது. அனைத்து தெருக்களிலும் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் காலம் காலமாய் வசித்து வருகின்றனர். நாற்பது வயதை கடந்த பொன்னம்மா அத்தெருவில் சுமார் பத்து வருடங்களை தாண்டி ஒரு சிறிய வீட்டில் யார் துணையும் இன்றி வாழ்ந்து வருகிறார்.
அவள் பத்து வருடங்கள் அத்தெருவில் வசித்திருந்தாலும் இதுவரை அண்டை அயலால் யாரிடமும் அரைட்டை அடிக்கும் விதமாய், ஏன் சாதாரணமாக கூட யாரிடமும் அவள் பேசியதில்லை. பொன்னம்மா தனியாக சாலையில் செல்லும் பொழுது, சந்தைக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது, கடைகளில் சாமான்கள் வாங்கும் பொழுது என்று அவள் தினசரி செய்யும் வேளையிழும் யாரிடமும் பேசியதில்லை. அத்தெருவில் உள்ளவர்களும் அவ்வாரே இருந்தனர். அவள் வெளியில் செல்லும் பொழுது அவளையே உற்று பார்ப்பர், அவளை பற்றி அவர்களுக்குள் பேசி கொல்வரே தவிர யாரும் பொன்னம்மாவிடம் பேசுவதற்கு இதுவரை முன் வந்ததில்லை. அதனை நினைத்து ஒரு நாளும் அவள் வருத்தப்பட்டதுமில்லை.