காதலடி நீயெனக்கு!! - பத்மினி செல்வராஜ்
அன்பான வாசகர் தோழமைகளே!!!
எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
எனது முந்தைய கதைகளான உன்னை விடமாட்டேன்...என்னுயிரே, அழகான ராட்சசியே வரிசையில் அடுத்ததாய் ஒரு கலகலப்பான, ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை இது.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எனது கற்பனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
அத்தியாயம்-1
The All England Lawn Tennis Club, London:
லண்டன் விம்பிள்டன் ல் அமைந்துள்ள அந்த டென்னிஸ் கிளப் ன் அரங்கம் பல்லாயிர கணக்கானோரின் கைத்தட்டல்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்து கொண்டிருந்தது.
இன்னும் சில விநாடிகளில் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் விம்பிள்டன் கோப்பை வழங்கப் பட இருக்கிறது. அதை வாங்குவதற்காக ஆவலுடனும் த்ரீல்லிங் மற்றும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தான் அந்த நெடியவன்...நம் கதையின் நாயகன் விஷ்வா... விஷ்வேஷ் சந்திரசேகர்..!
சந்தோஷத்தில் அவன் இதயம் எகிறி குதித்து கொண்டிருந்தது. அவனையும் மீறி அது வெளியே குதித்து விடும் போன்ற அளவுக்கு உள்ளுக்குள் சந்தோஷ ஊற்று பொங்கிக் கொண்டிருந்தது.
அதை கட்டுபடுத்தும் விதமாய் தன் கைவிரல் நகங்களை கடித்து தூப்பிக் கொண்டிருந்தான். கிட்டதட்ட எல்லா விரல்களிலும் நகங்கள் தீர்ந்து போயிருக்க, அடுத்ததாய் கழுத்தில் ஊசல் ஆடிக் கொண்டிருந்த திடமான தங்கச் சங்கிலியை எடுத்து அவ்வபொழுது வாயில் வைத்துக் கொண்டான்.
பின்ன... எத்தனை வருட கனவு அது. டென்னிஸ் ஐ உயிர் மூச்சாக போற்றுபவன்... தும்மும் பொழுது கூட டென்னிஸ் என்றுதான் தும்முபவன். இந்த விம்பிள்டன் கோப்பையை வாங்குவதே தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணி போராடியவன்.
இன்று அதை சாதித்து விட்டான். தன் லட்சியத்தை அடைந்து விட்டான். அவனுடைய கனவை நனவாக்க போகிறான். அதனால் தான் அவன் உள்ளம் சந்தோஷத்தில் எகிறி குதித்து கொண்டு இருந்தது. அவன் ஆவலோடு எதிர்பார்த்த தருணம் இதோ வந்துவிட்டது.
இந்த வருடத்திற்கான விம்பிள்டன் சேம்பியன் அறிவிக்கப்பட்டு அவன் பெயர் உரக்க அழைக்கப்பட, சந்தோசத்துடன், துள்ளலுடன் முகத்தில் மெது மெதுவாய் பூத்த மலர்ந்த புன்னகையுடன் மெதுவாய் ஓடிச் சென்று அந்த சிறப்பு விருந்தினர் அருகில் நின்றான்.
அதே நேரம் வி..வி....விஷ்வா... வி..வி....விஷ்வா... என்று ரசிகர்களின் உற்சாக குரலால் அந்த அரங்கமே அதிர்ந்து கொண்டிருந்தது.
அதில் அதிக குரல் வந்தது, அவன் விளையாடிய மேட்சை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து லண்டன் பயணித்து வந்திருந்த அவனுடைய நட்பு வட்டங்களின் குரல்கள் தான்.
அவர்களின் ஆரவார கைத்தட்டல்கள், விசில் சத்தம் எல்லாமே அது லண்டன் என்பதை மறந்து, அவர்கள் இருப்பது சென்னை போல பாவிக்க வைத்து விட்டது.
அத்தனை அத்தனையாய் ஆர்ப்பரிப்பு...சந்தோஷக் கூச்சல்கள் அங்கே... அதையெல்லாம் பார்த்ததும் விஷ்வாவிற்கு இன்னுமே துள்ளிக் குதித்தது அவன் மனம்.
தானும் அங்கே குத்தாட்டம் போட்டு ஆட வேண்டும் போல இருந்தது. ஆனால் இது நம்ம ஊரு அல்ல. அவன் வாங்கும் கோப்பையும் குத்தாட்டம் போட்டு வாங்கும் கோப்பை அல்ல என்பதை மனதில் கொண்டு அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான்.
அந்த அறிவிப்பாளர் நீளமான உரையை வாசித்து இறுதியாய் சிறப்பு விருந்தினர் அந்தக் கோப்பையை அவனிடம் கொடுக்க, அவர் கொடுக்கும் முன்னே கிட்டத்தட்ட அவர் கையில் இருந்து அதை பிடிங்கி இருந்தான் விஷ்வா.
அந்த அளவுக்கு அவனுக்கு அந்த கோப்பை மீது ஆசை. ஆசை என்பதை விட தீராத காதல்...வெறி...இன்று நேற்றல்ல.. சிறு வயதில் இருந்தே இந்த விம்பிள்டன் கப் ஐ வாங்க வேண்டும் என்ற பேராசை.
இப்பொழுது அவனுடைய ஆசை நிறை வேறி இருக்க, அந்த கோப்பையை வாங்கியதும்... இல்லை இல்லை பிடுங்கியதும் தலைக்கு மேலே தூக்கி அங்கு இருந்த அனைவருக்கும் காட்டி பெரிதாய் பெருமிதமாய் வெற்றி சிரிப்பு சிரிக்க மீண்டுமாய் ஒரு பெரிய கரகோஷம். விசில் சத்தம் அனல் பறந்தது அங்கே.
அந்தக் கோப்பையை தன் மார்போடு அணைத்து கொண்டவன் அடுத்ததாய் அந்தக் கோப்பைக்கு அழுந்த முத்தமிட்டான்.
அப்படியே தன் காதலியை கட்டி அணைத்து, ஆரத்தழுவி முத்தம்