பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - பாகம் - 1 - பிந்து வினோத்
பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிந்து, புதிதாய் ஒரு பந்தத்தை கொடுக்கும் திருமணம், எல்லோருடைய வாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் தான்!
அப்படி சாதாரண சந்திப்பில் தொடங்கி, காதலாக மாற்றம் கொண்டு, கல்யாணத்தில் இணைந்து, குடும்பமாய் தொடரும் மஞ்சு - மனோஜின் கதையின் முதல் பாகம் இது.
நாவலின் இரண்டாம் பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். இந்த முதல் பாகம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
Episode 01
பதினைந்தாவது திருமண நாள்!!!!!
மனம் முழுவதும் சந்தோஷ சாரல் அடிக்க கண் மூடி தன் இஷ்ட தெய்வமான சிவபெருமானிடம் நன்றி சொல்லி விட்டு, அனைவரும் நலமுடன் இருக்க கேட்டு வேண்டினாள் மஞ்சு.
அமெரிக்க மாநிலமான நியூஜெர்சியில் இருக்கும் பிரிட்ஜ்வாட்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் இருந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்தாள்.
நேரம் எடுத்து பொறுமையாக முழு மனதுடன் கடவுளை தரிசித்து வணங்கி விட்டு, பிரசாதத்துடன் வெளியே வந்தாள்.
படிகளில் இறங்கி காலனி வைக்கும் இடத்தில் இருந்து தன் செருப்புகளை எடுத்து அணிந்துக் கொண்டு, ஃபுட் கோர்ட் நோக்கி நடந்தாள்.
திருமண நாள் என்பதால் மஞ்சு அன்று சேலை அணிந்திருந்தாள்... நேர்த்தியாக அவள் சேலை கட்டி இருந்த பாங்கும், அவளின் முகத்தில் இருந்த மலர்ச்சியும், அவளை பளிச்சென்று எடுத்துக் காட்டியது.
எப்போதுமே எதிர் வீட்டு பெண் போல பார்த்த உடன் மனதில் பதிபவள், இன்று எக்ஸ்ட்ரா- ஸ்பெஷலாக இருந்தாள்!
பத்து வயதும், ஒன்பது வயதுமான இரண்டு மகன்களுக்கு அம்மா என்று சொன்னால் நம்ப முடியாததை போல ‘சந்தூர்’ விளம்பர நடிகை போல எழில் கொஞ்சும் இளமையுடன் இருந்தாள்.
காலை நேரம் என்பதால் காலியாக இருந்த ஃபுட் கோர்ட்டில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து, மொபைல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன் மனோஜ்.
அவனின் அருகே சென்று,
“ரொம்ப டைம் எடுத்துட்டேனா??? போனை எடுத்து பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க? போர் அடிச்சிடுச்சா??” என்றாள் மஞ்சு.
அவளின் குரல் கேட்டு போனை மூடி வைத்து விட்டு நிமிர்ந்த மனோஜ்,
“ப்ச்... டைம் பத்தி எல்லாம் எனக்கு ப்ராப்ளம் இல்லை... யூ ஆர் ஹாப்பி ரைட்? அதான் எனக்கு வேணும்... கிளம்பலாமா???” எனக் கேட்டான்.
“நீங்களும் கோவிலுக்கு உள்ளே என் கூட வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...” என்று சொல்லியபடி, கையில் வைத்திருந்த விபூதியை அவனின் நெற்றியில் வைத்து விட்டாள் மஞ்சு.
எந்த தடையும் சொல்லாமல் அவள் விபூதியை வைத்து விட அனுமதித்தவன்,
“எனக்கு நம்பிக்கை இல்லைன்னு உனக்கு தெரியும், அப்புறம் ஏன் இந்த கேள்வி?” என்றான்.
“அப்புறம், விபூதி மட்டும் வச்சுக்குறீங்க?”
“ஹுஹும்... நான் வச்சுக்கலை... உன் நம்பிக்கையை அலோ செய்றேன்... அவ்வளவு தான்... சரி வா, கார்ல போய் பேசுவோம்....”
மனோஜ் சொன்ன ‘உன் நம்பிக்கையை அலோ செய்றேன்’ ற்கு பின்னால் இருக்கும் அன்பு அவளுக்கு புரிந்தது. அவன் எப்போதுமே அவளின் நம்பிக்கைக்கு தடை சொன்னதில்லை...
முகம் மலர அவனுடன் நடந்தவள், அவன் பார்க்கிங் பக்கம் செல்ல இருந்த கதவை அவளுக்காக திறந்து விடவும், வெளியே வந்தாள்...
அங்கிருந்த படிகளில் அவள் இறங்கும் முன்பாக முந்திக் கொண்டு முன்னே சென்றவன், ஏதோ பெரிய மலையில் இருந்து இறங்க உதவுபவனை போல தன் வலது கையை அவள் பக்கமாக நீட்டினான்.
புன்னகைக்க வேண்டும் என்று எழுந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு, அவனின் கையை பற்றினாள் அவள்.
ஆங்கிலேயர்கள் பாணியில் அவளின் கையை தன்னுடன் பின்னிக் கோர்த்த படி, இறங்கினான், அவளும் இறங்க உதவினான்...
இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் மனோஜின் கணவன் மேனரிசங்களில் சில...
இது எல்லாம் சொல்லாமல் சொல்லும் அவனின் அன்பு... அது தான் மஞ்சுவை முழுவதுமாக மயக்கி இருந்தது...
அவளின் கைகளை விடாமலே அவர்களின் BMW அருகே வந்தவன், ரிமோட் வைத்து காரை திறந்து விட்டு, அவள் பக்க கதவை திறந்து
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- Family
- Romance
- Novel
- Tamil
- Drama
- Books
- from_Chillzee