Chillzee KiMo Books - உமார் கயாம் - பாகம் 2 - பாவலர் நாரா. நாச்சியப்பன் : Omar Khayyam - Pavalar NaRa. Nachiyappan - Part 2

(Reading time: 4.5 - 9 hours)
உமார் கயாம் - பாகம் 2 - பாவலர் நாரா. நாச்சியப்பன் : Omar Khayyam - Pavalar NaRa. Nachiyappan - Part 2
 

உமார் கயாம் - பாகம் 2 - பாவலர் நாரா. நாச்சியப்பன்

 

 

25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!

 

கொரசான் பாதையிலே, கூர்டிஸ்தான் மலைப்பிரதேசத்தின் வழியாக அந்த ஒட்டச்சாரி சென்று கொண்டிருந்தது. ஒட்டகங்களின் மணியோசை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. கதிரவனின் வெப்பத்துடன், மண்ணிலிருந்து கிளம்பிய குடும் ஆட்களை அயரச் செய்து கொண்டிருந்தது. ஒரு மட்டக்குதிரையில் சென்று கொண்டிருந்த உமார் அரை குறையாகத் தூங்கிவிழுந்து கொண்டே சென்றான்.

 

இரவு நேரத்தில் தூக்கம் வராத பொழுது, அவன் அக்ரோனோசிடமிருந்து மதுவை வாங்கிக்குடிப்பான். காவல்காரர்களுடன் சென்று பேசிக்கொண்டிருப்பான். இவனைப் பைத்தியம் என்று எண்ணிக்கொண்டிருந்த அவர்கள், மிக மரியாதையாகப் பதில் சொல்லுவார்கள். பேசிக்கொண்டிருக்க வாய்ப்பில்லாத நேரங்களிலே, தூரத்திலே ஆற்றங்கரை மேட்டிலே அடக்கமாகிக் கிடக்கும் யாஸ்மியின் நினைவு-புதை குழியிலே முக்காட்டுத் துணியுடன் பூப்போல் கிடக்கும் அந்த அன்புடையாளின் தோற்றம் அவன் உள்ளத்திலே உருவாகும். அந்த எண்ணம் தோன்றியவுடனே இதயத்திலே நெருப்பு எரியத் தொடங்கிவிடும். அந்த நெருப்பை அணைப்பதற்காக அவன் மதுச்சாடியின் அருகிலே சென்று சிறிது நேரத்திற்கொருமுறையாக விட்டுவிட்டுக் குடித்துகொண்டேயிருப்பான். சமயா சமயங்களில் ஏற்படும் மனக்கவலைக்கு மதுவே மாற்று மருந்தாகப் பயன்பட்டது அவனுக்கு.

 

“அவர் குடித்துக்குடித்து மிகவும்,மெலிந்து போய்விட்டார்” என்று ஜபாரக் அக்ரோனோசிடம் கூறுவான். “தாகத்தோடு இருப்பதை காட்டிலும் குடிப்பது நல்லது” என்று அக்ரோனோஸ் பதில் கூறுவான்.

 

“ஆனால், நாளைக்கு என்ன செய்வது? அதைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கெல்லாம் வழி என்ன?”

 

“அவை வரும்பொழுது, நாம் அவற்றைப் பற்றிச் சிந்திக்கலாம். இப்பொழுது அந்தக் கவலை தேவையில்லை”.

 

இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும் உமார் தன் இருக்கையிலிருந்து, எழுந்து அவர்களைக் கவனிப்பான். “நேற்று என்பதும் நாளை என்பதும் இல்லாவிட்டால் வாழ்வு என்பது எவ்வளவு நன்றாகவும் எளியதாகவும் இருக்கும். நேற்று என்பதிலே போடப்பட்ட மறதி என்ற முக்காடு போட்டபடியே இருந்தால், வருங்காலம் என்பதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரை தூக்கப்படாமலே யிருந்தால், இன்றையபொழுது என்பது என்றும் மாறாமலே இருக்கும்” என்று எண்ணுவான்.

 

“சாந்தி! உனக்கு சாந்தியுண்டாக்கும்!” என்று ஜபாரக் முணுமுணுத்தான்.

 

ஒட்டகச்சாரி, பாலைவனத்து மணல் வெளியைவிட்டுக் கூர்டிய மலைப் பள்ளத்தாக்கின் சிவந்த மண் பூமி வழியாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் பிற்பகலில், அந்த வியாபாரிகள் கூட்டம், ஓரிடத்திலே நின்றது. அந்த இடத்தில், மனிதனின் இடையளவு உயரமுள்ள கற்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. சில கற்களின் தோற்றம் மனிதனின் முகத்தைப்போன்ற அமைப்புடன் விளங்கியது. அந்த வியாபாரிகள் கீழே இறங்கி அந்தக் கற்களை நோக்கிச் சென்றார்கள். தள்ளியும் உருட்டியும் பாதையிலே சிறிது தூரத்திற்கு அவற்றைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.

 

“மலைகளிலிருந்து உருட்டிக் கொண்டுவரப்பட்ட இந்தக் கற்களுக்குப் பயணக் கற்கள் என்று பெயர். அந்தப் பாதை வழியாக வருகின்ற வியாபாரிகள், பிரயாணிகள் அனைவரும், தங்கள் தங்களால் முடிந்த அளவு, அந்தக் கற்களை மெக்காவை நோக்கிச் செல்லும் பாதையில்