Chillzee KiMo Books - உமார் கயாம் - பாகம் 1 - பாவலர் நாரா. நாச்சியப்பன் : Omar Khayyam - Pavalar NaRa. Nachiyappan - Part 1

(Reading time: 4.25 - 8.5 hours)
உமார் கயாம் - பாகம் 1 - பாவலர் நாரா. நாச்சியப்பன் : Omar Khayyam - Pavalar NaRa. Nachiyappan - Part 1
 

உமார் கயாம் - பாகம் 1 - பாவலர் நாரா. நாச்சியப்பன் - Part 1

 

 
  1. புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்.

  

பழைய நிஜாப்பூர் நகரத்தில், பழைய புத்தகக் கடைகள் நிறைந்த ஒரு பஜார்.

  

புத்தக வியாபாரிகள் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். வீதியில் பெண்கள் தங்க வாத்துகளைப் போல, தண்ணிர் ஜாடிகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள்.

  

ஒரு பழைய புத்தகக் கடையில் ரோஜா மொட்டைப் போல யாஸ்மி உட்கார்ந்திருந்தாள்.

  

யாஸ்மி ஒரு சின்னப் பெண். வயது பனிரெண்டிருக்கும். தலையில் ஒரு சின்ன முக்காட்டைப் போட்டுக் கொண்டு அவளுடைய தகப்பனாருடைய புத்தகக் கடையில் உட்கார்ந்திருப்பாள்.

  

அவளுக்கு ஓர் ஏக்கம். வீதியில் போகிற ஒரு பையன் கூடத் தன்னைக் கவனிப்பதில்லையே என்பதுதான் அது. சில சமயம் அவளுக்குத் தன் வீட்டில் உள்ளவர்கள் மேலேயே கோபம் கோபமாக வரும். வீட்டில் ஏதாவது வேலையாயிருந்தால்தான் அவளைப் பற்றி நினைப்பார்கள். இல்லாவிட்டால் கவனிப்பதேயில்லை. தகப்பனாருக்குப் புத்தகங்களும் அவற்றின் விலை மதிப்பும்தான் பெரிது. பெண் பெரிதல்ல.

  

எல்லோரும் தன்னை அலட்சியப் படுத்துவதற்கு என்ன காரணம்? அவள் அழகாக இல்லையா? இல்லை. அவள் இன்னும் பெரியவள் ஆகவில்லையாம்.

  

அவள் மட்டும் பெரிய முக்காடாகப் போட்டுக் கொண்டு, பெண்கள் வசிக்கும் அந்தப்புரப் பகுதியிலேயே யிருந்தால் அவளை எட்டிப் பார்க்க எத்தனை பையன்கள் ஆசைப்படுவார்கள். இப்பொழுது அவள் தகப்பனாருடைய புத்தகக் கடையில் இருந்துகொண்டு அவருக்கு, அதையிதை எடுத்துக் கொடுப்பதும், உள்வீட்டுக்கும் கடைக்கும் தூது போவதற்கும் உதவியாக இருந்தாள். சும்மாயிருக்கிற நேரங்களிலே, ஏதாவது துணியை எடுத்துக் கொண்டு பூப்பின்னுவாள். அவளிடம் சாம்பல் நிறமான பூனைக்குட்டி இருந்தது. அதனுடன் விளையாடுவதும் உண்டு.

  

அவர்களுடைய புத்தகக் கடையில் எல்லாவிதமான பழைய புத்தகங்களும் இருக்கும். அந்த வீதியிலே புத்தக வியாபாரிகள் அதிகம். காரணம், அந்த வீதியின் கோடியில்தான் பள்ளி வாசலும், அதையடுத்து ஒரு பள்ளிக் கூடமும் இருந்தன. பள்ளிக்கூடம் விட்டதும் பையன்கள் கத்திக் கொண்டே ஓடுவார்கள். இது யாஸ்மிக்குப் பிடிக்காது. சில சிறுவர்கள் புத்தகக் கடைக்கு வருவார்கள். அவளுடைய தகப்பனார், புத்தகங்களின் முக்கியமான பகுதிகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவார். அப்போதெல்லாம் யாஸ்மி அவற்றைக் கவனிப்பாள். ஆனால், புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத எவரெவரையோ பற்றியும் அவர்கள் முன்னே தொங்கும் திரையைப் பற்றியும், இரவு நேரத்திலே ஆகாயத்தில் தோன்றும், அதிசய வாத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியது, ஆடவர்களின் வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அதில் என்ன அக்கறை வேண்டியிருக்கிறது? பெண்ணுக்கு ஆத்மா இல்லையென்று