Chillzee KiMo Books - அபிதா - லா.ச.ராமாமிர்தம் : Abitha - La.Sa.Ramamirtham

(Reading time: 2.25 - 4.5 hours)
அபிதா - லா.ச.ராமாமிர்தம் : Abitha - La.Sa.Ramamirtham
 

அபிதா - லா.ச.ராமாமிர்தம்

 

 

அபிதா - 1

 

 

 

 

வண்டியின் கதிவேகத்தில் எதிர்வண்டிகள் மேலேயே சரிந்து விடும் போல் கடந்தன. மில்களின் ராக்ஷஸப் புகைப் போக்கிகள், மில் காம்பவுண்டில் நிலக்கரி மலைகள், ரயில் திடீரென இறங்கும் பள்ளத் தாக்குகள், உடனே தொத்திக் கொண்டு ஏறும் சரிவுகள், மலைகள், மலையைக் குடைந்து சுரங்கங்கள், சுரங்கத்துள் நுழைந்ததும் ஓட்டச் சத்தம் அன்றி மற்றனைத்தும் அதனுள் மூழ்கிப் போன காரிருள், சுரங்கத்தினின்றும் வெளிப்பட்டதும் கண்ணை உறுத்திக் கொண்டு பெருகும் ஒளி வீழ்ச்சி, அகன்ற மைதானங்கள், அடர்ந்த காடுகள், காடுகளில் மேயும் மான் கூட்டங்கள் தலை நிமிர்கையில் மேலே கிளை பிரிந்த கொம்புகள், கட்டான் கட்டானாய் வண்டி வேகத்தில் முகம் திரும்பும் வயல்களில் பயிர்களின் பச்சை நடுவில் சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் உதாவுமாய் ஆண் பெண்களின் ஆடைகள், கூந்தல் முடிச்சுகள், கொண்டைகள், வானில் பகல் பூரா சூர்யசக்கரம் உழுது உருண்ட பாதையில் முளைத்துப் பழுத்துப் பல ரங்குகளில் சாய்ந்த ஒளிக்கதிர்கள், புலவியில் பூமியைக் கவ்விக் கடித்து மேல் கவிந்த வான்கவானில் சிந்திய விந்துவெனக் கட்டிய நக்ஷத்ரக் கூடுகள், நேரம் முதிர்ந்து எழுந்து தோப்புகளிடையே எங்களுடன் கூடவே குதித்து ஓடிவரும் நிலா திடீரெனக் கிளைகளின் சிக்கலினின்று விடுபெற்று ஆகாய வீதியில் உருண்டதும் பாலத்தடியில் உருவிவிட்ட ஜல ஜரிகையின் தகதகப்பு, 'திடும் திடும்' என அதிர்ந்து கொண்டு எங்களைக் கடக்கும் பாலங்களின் இரும்புத் தூலங்க -

 

- இத்தனையும் கோத்து ஊடுருவிய உள்சரடாய் வண்டியின் பெருமூச்சு; ஒரு சமயம் அதன் ஊதல் உவகையின் எக்காளம்; ஒரு சமயம் வேகத்தின் வெற்றிப் பிளிறு; மறுசமயம் அது இழுத்துச் செல்லும் சிறு உலகத்தின் சுமை கனத்தினின்று இழுத்த பாகாய், அது செல்லுமிடம் சேரும் வரை, அதன் கர்ப்பத்தில் தாங்கிய அத்தனை மக்களின் அவரவர் விதியின் தனித்தனி சஞ்சலங்கள், பிரிகள் ஒன்று திரித்த ஓலக்குரல் தீனக்குரல் -

 

சாவித்ரி முகம் பூரா விழிவட்டம்.

 

முந்தாநாளிரவிலிருந்தே பச்சைக் குழந்தை மாதிரி ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டாள்.

 

அவளைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது. அடக்கிக் கொள்கிறேன். வலது பொட்டில் அடை நரை தோய்ந்திருக்கிறது. (நரையை ஒப்புக் கொள்ள மாட்டாள். "பூசணிக்காய் நறுக்கிய கையோடு நினைவு மறதியா தொட்டுண்டுட்டேன்." இன்னொரு சமயம் அதுவே தேனைத் தொட்ட கையாக மாறிவிடும்.) கொஞ்ச நாளாகவே இடது கண்ணில் நீர் வடிகிறது. கண்ணாடி போட்டுக் கொள்ள மறுக்கிறாள். முகம் கெட்டு விடுமாம்.

 

"அப்படி ஒரு கண் அவிஞ்சு போனால் இன்னொண்ணு இருக்கு. அதுவும் போச்சுன்னா, கையைப் பிடிச்சு, அழைச்சுண்டு போய், 'இதுதாண்டி தாஜ்மஹால்',

'இதுதான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்', 'இதுதான் அகண்ட காவேரி', 'இதுதான் நம் பூர்விகம், சொந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கோ, வாயில் கூட கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கோ'ன்னு அப்புறமாவது இடம் இடமா அழைச்சுண்டு போய்க் காண்பிக்க நீங்கள் இருக்கேள். இல்லையா? அப்படி ஒரு கொடுப்பினை இல்லாட்டாலும் போறது. காலடியில் கல் தடுக்கினால் பிடிச்சுக்க மாட்டேளா? ஏன் சும்மாயிருக்கேள்? 'ஆஹா அதுக்கென்ன?'ன்னு மெப்புக்கேனும் சொல்லக் கூட வாயடைச்சுப் போச்சா? புருஷாளே இப்படித்தான்" - என்று எங்கேனும் கொண்டு போய் முடித்து, மூக்கைச் சிந்தி, உறிஞ்சி, சிடுசிடுத்து அடுத்தாற்போல் சிரித்துத் தானே ஓய்ந்துவிடுவாள்.

 

"ஆமாம், நான் இப்படியெல்லாம் இல்லாட்டா நீங்கள் எனக்குக் கட்டியிருக்கும் அசட்டுப் பட்டத்தை எப்படி நிலை நாட்டிக்கறது?"

 

பாவம், அவள் ஆத்திரப்படுவதில் ஆச்சர்யமில்லை. நானாவது வியாபார நிமித்தமாய் சுற்று வட்டாரம் போய் மீள்வதுண்டு. பிரயாணத்துக்கே அவளுக்கு வாய்ப்பில்லை. எங்களுக்கு உறவுகள், வேண்டியவர் வேண்டாதவர் எல்லோரும் எங்களைச் சுற்றியே இருந்துவிட்டார்கள். அத்தனை பேரும் அவளைச் சார்ந்தவர்களே. பிழைப்பைத் தேடி தூரதேசம் வந்துவிட்ட இடத்தில் எனக்கென்று தனியாகத் தாயாதிகளை முளைக்க வைக்க முடியுமா?

 

கண்டதே காக்ஷி

கொண்டதே கோலம்

வந்ததே லாபம்

இன்று இப்படிப் போச்சா?

நாளை என்னவாகுமோ?