Chillzee KiMo Books - காதல் சடு குடு குடு - பிந்து வினோத் : Kadhal sadu gudu gudu - Bindu Vinod

(Reading time: 30 - 45 minutes)
காதல் சடு குடு குடு - பிந்து வினோத் : Kadhal sadu gudu gudu - Bindu Vinod
 

காதல் சடு குடு குடு - பிந்து வினோத்

 

 

அத்தியாயம் 01.

  

அரவிந்த் இட்லியை வாயில் வைத்த படி மனைவியை பார்த்தான்.

  

சாந்தி அவனின் அம்மாவிற்கு உணவு பரிமாறிவிட்டு, மகன் ப்ரித்வி பக்கம் கவனத்தை வைத்திருந்தாள்.

  

வாயிலிருந்த இட்லியை மறந்து மனைவியை இமைக்காமல் பார்த்திருந்தான்...!

  

எப்போதும் போலவே அவள் அவன் கண்களுக்கு பேரழகியாக தெரிந்தாள். அதிலும் அந்த உதட்டில் எப்போதும் இருக்கும் அந்த சின்ன புன்னகை....!

  

முதல் நாள் பார்த்ததில் மயங்கியவன் தான் இன்றும் மயக்கம் தெளியாமல் இருக்கிறான்...!

  

சாந்தி அவன் பக்கம் திரும்ப கூட இல்லை...

  

மேடம் அவன் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்....! மகனின் பிறந்த நாளுக்கு அவன் வரவில்லை என்று கோபமாம்....!

  

பிரித்விக்கு லேட்டஸ்ட் ozobot வாங்கி கொடுத்து சமாதானப் படுத்தியாகி விட்டது... ஆனால் மனைவியை தான் சமாதானப் படுத்த முடியவில்லை....

  

அவனுக்கு தெரியும் பெயரை போலவே சாந்த சொருபிணியாக முகத்தை வைத்துக் கொண்டு மகனுக்காக கோபம் என்று சொல்லிக் கொண்டாலும், அவளின் உள்ளே படு ‘டெரராக’ சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.

  

அவனை வீழ்த்துவது எப்படி என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்....!

  

அவனையும் மீறி மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் ஸ்மித் திரைப்படம் அவன் கண் முன் வந்து மனதினுள் மெல்லிய திகிலினை ஏற்படுத்தியது.

  

[இந்த ஆங்கில திரைப்படத்தில் சராசரி தினசரி வாழ்க்கை போரடிக்க, கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் assasinஆக மாறுவார்கள். இறுதியில் ஒருவரை ஓருவர் கொலை செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ள படுவார்கள்]

  

இதற்கு முன் இரண்டு முறை சாந்தியின் திட்டங்களை தவிடு பொடியாக்கி இருக்கிறான்.

  

இந்த முறை முடியுமா????

  

கேள்வியின் கூடவே அவன் மீதே அவனுக்கே கோபமும் வந்தது. இதற்கு எல்லாம் காரணமே அவன் தான்.

  

சும்மா இருந்தவளை தொந்தரவு செய்து விட்டு, இப்போது என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறான்.

  

இந்த முறை எப்படி சாந்தியின் திட்டத்தை கண்டுபிடிப்பது? எப்படி அதை முறியடிப்பது?

  

அவன் யோசிக்கும் போதே, சாந்தியின் பார்வை அவன் மீது விழுந்தது!

  

அவ்வளவு தான் அவனின் மூளை சிந்தனையை எல்லாம் கைவிட்டு விட்டு இதயத்துடன் சேர்ந்து டூயட் பாட தயாரானது.