Chillzee KiMo Books - மௌனம் விழுங்கிய ராகங்கள் - முகில் தினகரன் : Mounam vizhungiya ragangal - Mukil Dinakaran

(Reading time: 2.75 - 5.5 hours)
மௌனம் விழுங்கிய ராகங்கள் - முகில் தினகரன் : Mounam vizhungiya ragangal - Mukil Dinakaran
 

மௌனம் விழுங்கிய ராகங்கள் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

 

அத்தியாயம் (1)

 

            சிவகங்கை மாவட்டம்.

 

          திருபுவனத்தை விட்டு வெளியேறி, கரு நாகம் போல் படுத்துக் கிடக்கும் தார் சாலையில், மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த அந்த டாடா சுமோ, வைகை ஆற்றின் மேல் நீ………..ளமாய்ப் படுத்திருந்த அந்தப் பாலத்தைத் தொட்டதும், சற்று வேகம் மட்டுப்பட்டது.

 

          'டேய்…விஜி…வண்டியை நிப்பாட்டுடா!” குணா அடித் தொண்டையில் கத்தினான்.

 

          'க்ரீச்”சென்ற சப்தத்துடன் சடன் பிரேக்கிட்ட விஜய், 'என்னடா?...என்ன ஆச்சு?” பதட்டமாய்க் கேட்டான்.

 

          'ஒண்ணுமில்லைடா…இந்த லொக்கேஷன் படு சூப்பராயிருக்கு….அதான்…கீழிறங்கி…நாலஞ்சு போட்டோஸ் எடுத்திட்டுப் போகலாம்னு..நிப்பாட்டச் சொன்னேன்!” என்றான் குணா படு காஷூவலாய்.

 

          'த்தூ…இதுக்குத்தான் அப்படிக் கத்தினாயா?...நான் கூட என்னமோ…ஏதோன்னு பயந்துட்டேன்!” என்றபடியே வண்டியை ஆஃப் செய்து கீழிறங்கினான் விஜய்.  நடிகர் பிரசாந்த் போன்ற தோற்றம். நிறம் மட்டும் கொஞ்சம் மட்டு.

 

          குணாவும் கேமராவை கழுத்தில் தொங்க விட்டபடி இறங்கினான்.

 

          இருவரும் பாலத்தின் கைப்பிடிச் சுவரருகே வந்து நின்று, கீழே சுழித்துக் கொண்டோடும் வைகை ஆற்றையும், அதில் துள்ளி விளையாடும் மீன்களையும் ஒரு வித ரசனையுடன் பார்த்தவாறு நின்றனர்.

 

     “ஆஹா...மீன்களைப் பார்த்தாலே நாக்குல ஜலம் ஊறுது...இதுல ஒரு பத்து மீனைப் பிடிச்சு...மசாலா தடவி அப்படியே எண்ணைப் போட்டுப் பொரிச்செடுத்தா” எச்சிலை உறிஞ்சினான் குணா.

 

     “டேய்...டேய்..சாப்பாட்டு ராமா...உன் புத்தி ஏண்டா எப்பவுமே திங்கற விஷயத்திலேயே சுத்துது?” அவன் பின் மண்டையில் லேசாய்த் தட்டிய அப்போதுதான் ஞாபகம் வந்தவனாய், 'டேய்…அவனுக ரெண்டு பேரும் எங்கேடா?” கேட்டான்.

 

          'முருகனும்...ஆனந்த ராஜுமா?…வண்டிக்குள்ளார வாயைப் பொளந்துட்டு தூங்கிட்டிருக்கானுக…நேத்திக்குப் போட்டது இன்னும் எறங்குல போலிருக்கு!” என்றான் குணா.

          'ச்சை!.இவனுகளோட இதே ரோதனையா போச்சு...ராத்திரி பூராவும் மூக்கு முட்டக் குடிக்கறது!...பகல்ல படுத்துத் தூங்கறது!...கர்மம்...கர்மம்!” என்று தலையிலடித்துக் கொண்ட விஜய், “போடா…போய் .அவனுகளை எழுப்பிக் கூட்டிட்டு வாடா?” குணாவுக்கு ஆணையிட்டான்.

 

          'ப்ச்…விடுடா…அவனுக அங்கியே கெடந்து உருளட்டும்!” என்ற குணாவை முறைத்துப் பார்த்த விஜய்,  “இப்ப நீ போறியா?...இல்லை உன்னோட காமிராவைப் பிடுங்கி வைகை ஆத்துக்குள்ளார போடவா?” என்று மிரட்ட, குணா வேண்டுமென்றே மெதுவாக நடந்தான்.

 

     அவன் கள்ளத்தனத்தைப் புரிந்து கொண்ட விஜய், தானே ஜீப்பிற்குச் சென்றான்.

 

          மல்லாந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்த முருகனின் கால்