மனதில் உறுதி வேண்டும் - சசிரேகா
மகளிர் தின ஸ்பெஷல் சிறுகதை
மதிய வெயில் மண்டையை சுட்டெறிக்கும் நேரத்தில் மனதில் கவலையுடன் பொறுமையாக நடந்தபடியே எதையோ பலமாக யொசித்துக் கொண்டே வந்தார் அன்பரசு. அவரின் கவனம் அக்கம் பக்கம் செல்லவில்லை, பெரிய பிரச்சனை அதனால் உருவான கவலை அவரின் முகத்தில் தாண்டவமாடியது.
மனதுக்குள் எதைஎதையோ நினைத்து புலம்பிக் கொண்டே சென்றுக் கொண்டிருந்தார். அவரைக் கண்டபடி எதிர்புறம் வந்தவர் சட்டென அவரிடம் சென்று பேசினார்
”அன்பரசு என்னப்பா அமைதியா வர்ற, முகம் முழுக்க கவலையா இருக்கு என்ன பிரச்சனை” என கேட்க அவர் பேசவே கஷ்டப்பட்டார், வருத்தம் அவரின் தொண்டை வரை அடைத்து இருந்தது கண்கள் கூட சற்று கலங்கிப் போயிருந்தது, அதைக்கண்ட வந்தவர்
”என்னப்பா கண்ணெல்லாம் கலங்குது என்னாச்சி ஏதாவது பிரச்சனையா சொல்லுப்பா” என கேட்க அவரோ பதில் சொல்லாமல் கவலையில் தலையை இல்லை என்பது போல் ஆட்டி வைக்க வந்தவர் விடவில்லை
”அட உன்னைப் பார்த்தாலே தெரியுது, என்ன பிரச்சனை சொல்லுப்பா ஒரே ஊர்க்காரன் நானு உன் பிரச்சனை என் பிரச்சனை மாதிரி பார்க்க மாட்டேனா சொல்லுப்பா என்னாச்சி சொல்லு” என கேள்வி மேல் கேள்வி கேட்க அவரோ பேச முடியாமல் கஷ்டப்பட்டபடியே
”ரங் ரங்க ரங்கசாமி” என திக்கி திக்கி பேசி வைக்க வந்தவர் அதிர்ச்சியில் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டான்
”என்னப்பா சொல்ற ரங்கசாமியா யாரு கடன் தரானே அவனா” என கேட்க அவரும் ஆம் என்பது போல் தலையாட்டி வைக்க வந்தவர் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டு அவரிடம் கலவரமாகப் பேசினான்
”எவ்ளோ பணம் வாங்கின”
”5 லட்சம்”
”போச்சி” என வந்தவரோ கத்திவிட அவருக்கு என்னமோ போலானது.
”எதுக்கு கடன் வாங்கின என்ன அவசரம் வந்துச்சி உனக்கு, உன் பொண்ணு மலர்கொடி இன்னும் படிச்சிக்கிட்டுதானே இருக்கு அது இன்னும் படிச்சி முடிச்சி கல்யாணம்னா கூட எப்படியும் 5 வருஷமாகுமே பள்ளி கூடம் படிக்கற பொண்ணுக்காக கடன் வாங்கினியா”
”இல்லை”
”வேற என்னத்துக்கு இவ்ளோ பணம் வாங்கின”
”நம்ம ஊர் ஏரியை இந்த முறை குத்தகை ஏலம் எடுக்க நினைச்சேன், 5 லட்சம் வரை இழுத்து விட்டிச்சி கையில அந்தளவுக்கு பணம் இல்லை 2 லட்சம்தான் இருந்தது சரி வேற வழியில்லை மீனை எடுத்து வித்து பணத்தை கொடுக்கலாம்னு நினைச்சி ரங்கசாமிகிட்ட 5 லட்சம் பணம் கேட்டேன் கொடுத்தான் கையில இருந்த 2 லட்சத்தையும் சேர்த்து ஆளுங்களை வைச்சி மீனை பிடிச்சி விக்க முடிவு பண்ணேன் ஆனா இப்ப இப்ப” என பேச முடியாமல் திக்க வந்தவனுக்கு புரிந்து விட்டது
”தப்பு பண்ணிட்ட அன்பரசா போயும் போயும் உனக்கு வேற யாருமேவா கிடைக்கலை, அவனே ஒரு கிறுக்கன் அவன்ட்ட போய் பணத்தை வாங்கிட்டியே” என குறை கூற அந்த வழியாக சென்றவரின் காதில் இச்சொற்கள் விழவும் என்ன ஏதுவென விசாரிக்க வந்தார். அன்பரசனை சுற்றி சுமார் 10 பேர் நின்றுக் கொண்டு என்ன நடந்தது என விசாரித்துவிட்டு துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்
”பாவம்பா அன்பரசு இவனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரனும்”
”ஆமாம்பா இத்தனை வருஷமா அந்த ஏரியில மீன் நிறைய இருக்கும், இந்த முறை மழை வேற சரியா பொழியலை இருக்கற தண்ணியில மீனும் அதிகளவா இல்லை நஷ்டமாயிடுச்சி 7 லட்சம் நஷ்டம், எல்லாம் போச்சி”
”அந்த ரங்கசாமி லேசுப்பட்டவன் இல்லை எவ்ளோ கஷ்டப்படுத்துவானோ தெரியலையே”
”ஆயிரம் ரூபாய் வாங்கினாலே வட்டி மேல வட்டின்னு சொல்லி மூணாயிரத்துக்கு இழுத்து விடுவான் இதுல 5 லட்சம்னா எப்படி சொல்றது 7 லட்சம்ல கேட்டு வைப்பான் இப்ப எப்படி”
”அன்பரசுக்கு பையன் இருந்திருந்தாலாவது பரவாயில்லை, அப்படி இப்படின்னு ஏதாவது வேலை பார்த்து கடனை அடைப்பான் பொண்ணால பிறந்துடுச்சி அதால என்ன செய்திட முடியும்”
”அதானே வீட்டுக்கு ஒரு பையன் அவசியம் இருக்கனும்பா நாளைக்கு பிறகு ஏதாவது பிரச்சனைன்னா பையன்தானே வரிஞ்சிக்கட்டிக்கிட்டு முன்னாடி வந்து நிப்பான் பொண்ணால முடியுமா என்ன”
”நம்ம பக்கத்து வீட்டுக்காரன் கந்தசாமி பையன் இருக்கானே பெரிய படிப்பு படிச்சிட்டு டவுன்ல பெரிய உத்யோகம்ல பார்க்கறான், சம்பாதிக்கற பணத்தை அப்படியே அப்பன் கையில கொண்டாந்து கொடுக்கறான் அதை வைச்சி இங்க வீடே கட்டிக்கிட்டு