(Reading time: 10.25 - 20.25 hours)
தாயுமானவன் - சசிரேகா : Thaayumanavan - Sasirekha
 

தாயுமானவன் - சசிரேகா

முன்னுரை
எல்லா கணவன் மனைவிக்குள்ளும் ஏற்படும் கருத்து மோதல்தான் இக்கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஏற்படும் இருவரின் பிரிவும் அதிலும் அந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சனையால் இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும், இதில் கதைக்காக முக்கியமான ஒருவரின் பாத்திரத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன், கதையை படித்துப் பாருங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி
 

பாகம் 1

சென்னை

விஜய் தன் மனைவி ஜனனியுடன் திருமண கோலத்தில் தனது வீட்டு வாசலில் நின்றான். ஜனனி மணப்பெண் அலங்காரத்தில் வெட்கத்துடன் கன்னம் சிவந்து கணவனின் கையை கோர்த்தபடி நின்றாள். விஜயோ மணமகன் அலங்காரத்தில் அதீத மகிழ்ச்சியுடன் தனது காதல் மனைவியை கஷ்டப்பட்டு கரம்பிடித்த நிம்மதியுடன் அவளின் கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான். இருவருக்குள்ளும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. பேசாவிடினும் அவர்களின் மனங்கள் பேசிக் கொண்டன, அவ்வப்போது காதல் மனைவி ஜனனி வீசும் ஓரக்கண் விழிப்பார்வையில் சொக்கித்தான் போனான் விஜய் ஆசையாக தன் மனைவியிடம்

”வெல்கம் மிஸஸ் விஜய்” என அன்பாக அழைக்க அவளுக்கு கூச்சமும் நாணமும் ஒட்டிக் கொண்டது.

சட்டென சொல்லிவிட்டான் ஆனால் இந்த அங்கீகாரத்தை அடைய அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.

வேண்டாம் வேண்டாம், காதல் வேண்டாம், விஜய் வேண்டாம் என சொல்லிய தன் தாய் அமுதாவை சமாளிக்க முடியாமலும் விஜயுடன் திருமணமனால் உன் வாழ்க்கையே நரகமாகிவிடும் என ஜனனிடம் சொல்லிய அவளின் தந்தை கதிரவனின் கோபத்தை கஷ்டப்படுத்தி அடக்கிக் கொண்டும் காதல் திருமணம் செய்தால் நம் வீட்டு மானம் மரியாதை காற்றில் பறக்கும், ஊர் சிரிக்கும் என சொல்லிய அவளின் தம்பி கௌதமின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டும் உற்றார் உறவினர் ஏசிய பேச்சுகளையும் வீசிய கேவலமான பார்வைகளையும் கண்டும் காதலை விடாமல் விஜயை கரம் பிடித்து கர்வத்துடன் இருந்தாள் ஜனனி.

ஜனனியை அடைய பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன் என பல நூறு முறையாவது விஜய் சொல்லியிருப்பான், அவன் சார்பில் எந்தவொரு எதிர்ப்பும் இல்லை காரணம் அவனின் தந்தையும் தாயும் என்றோ இறந்துவிட்டார்கள், தனியாள், சென்னையில் உள்ள பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை, மாதம் பிறந்தால் லட்சத்தில் சம்பளம், பெற்றோர் இறந்தபின்பு  உடன் வேலை செய்பவர்களையே உயிர் நண்பர்களாக நினைத்து அன்பு காட்டும் நல்லவன்.  

விஜயும் ஜனனியும் ஒரே கல்லூரியில் படித்தனர். படிக்கும் போதே இருவரும் நட்பாகி அது சிறிது காலம் கழித்து காதலாகி இருவரும் காதலில் உருகி கரைந்து திளைத்து முழுவதுமாக மூழ்கி முத்தெடுப்பதற்குள் கல்லூரி காலம் முடியவும் அவளின் கரத்தை பிடித்து உரிமையாக மனைவி என்றும் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கவும் தன் படிப்பிற்கேற்ப வேலையை தேடி அலைந்து கிடைத்த வேலையில் ஆர்வமுடன் ஈடுபட்டு பல இன்னல்களை தாண்டி கஷ்டப்பட்டு முன்னேறி இப்போது நல்ல பதவியில் அனைவரும் பொறாமைபடும் அளவு உயர்ந்துவிட்டான் விஜய்.

அதிலும் அவனுக்கு ஜனனி கிடைத்தது பெரிய பொக்கிஷம் என்றே கருதினான். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவது போல அப்படி பார்த்துக் கொண்டான், மனதில் அவளுக்காக ஒரு அரண்மனையை உருவாக்கி அதில் அவளை மகாராணியாக அமரவைத்தான்.

இதோ இப்போது இருவருக்கும் திருமணமாகிவிட்டது, காதல் திருமணத்தை எதிர்த்த வீட்டை விட்டு வெளியேறி தன் காதலுக்காக விஜயின் மீது கொண்ட நம்பிக்கையால் எளிமையாக பதிவு திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த படியை ஏற விஜயின் வீட்டிற்கு வந்திருக்கிறாள் ஜனனி.

விஜயின் காதல் பார்வையை ஜனனியால் புரிந்துக் கொள்ள இயலும், அவன் இயல்பாக பார்த்தால் மனதில் எனன நினைப்பான், அதுவே சற்று இதழில் ஓரமாக புன்னகை புரிந்தபடி கண்கள் சிமிட்டி தலையை ஒரு பக்கமாக சாய்த்து பார்க்கும் போது தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் என அவளுக்கு நன்றாகத் தெரியும், இன்றும் அப்படித்தான் அவளை வாயார மிஸஸ் விஜய் என அழைத்த உடன் பார்த்தானே ஒரு பார்வை அது காதலை கடந்து வேறு ஒன்றை அவளுள் தோன்ற வைக்க அதில் அவள் கரைந்துப் போனாள்.

”போ விஜய்” என சிணுங்கினாளே தவிர அவனின் அந்த நெருக்கத்தை ரசித்தாள், அவனின் பார்வையை உதாசீனப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் ஓரவிழியில் பார்த்தாள்.

விஜயும் அவன் மனதில் எதிர்பார்ப்பதை ஜனனி தருவாளா என்ற ஆசையுடனே அவளையே பார்த்தான், அவளுக்கும் அது புரிந்திருந்தது இருவரும் முதல் முதலில் சந்தித்த நாட்களில் இருந்து திருமணம் ஆகும் நாள் வரை இருவரும் நன்றாக புரிதலுடன் பழகி வந்தார்கள். அவளின் சம்மதம் இல்லாமல் விஜயும் அவளின் நிழலை தொடவில்லை அதை கல்யாணம் வரை நீடித்தான். இன்று விஜயின் அனைத்து கட்டுப்பாடுகளும் நீங்கிவிட்டது. மடை திறந்த வெள்ளம் போல் அவனின் கண்களில் காதலும் முகத்தில் தெரிந்த ஆர்வமும் கைகளில் தெரிந்த நெருக்கமும் அவனின்  அண்மையும் அவளுக்கு புரிந்துவிட்டது.

விஜயும் ஜனனியின் வெட்கப்புன்னகையைக் கண்டும் அவளின் சிணுங்கலைக் கண்டும் உடனே புரிந்துக் கொண்டான். ஏற்கனவே பிரகாசமாக இருந்தவனின் முகம் இப்போது குண்டுபல்பு ஒளி வீசுவது போல ஒளிர்ந்துவிட்டது. மெல்ல அவளிடம் நெருங்கினான். தனது முகத்தை அவளின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றான் அவளுக்கு புரிந்துவிட்டது விஜய் என்ன  செய்வான் என்று அதனால் அவளும் மறுக்கவில்லை, அவனும் விடவில்லை பொறுமையாக அவளிடம்