வழி காட்டும் விண்மீன்கள்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்
காதலும் குடும்பமும் இரு கண்கள் போன்றவை. காதலுக்காக பெற்றவர்களை விட முடியாது. அதே நேரம் இதயத்தில் வாழும் காதலியை மறக்கவும் முடியாது.
நாரயணன் என்னும் இளைஞன் அது போன்ற ஒரு சூழலில் என்ன செய்கிறான்?
காதலால் அவன் குடும்பம் அழிந்ததா? இல்லை குடும்பத்துக்காகக் காதலை விட்டானா?
அவனது ஒன்று விட்ட சகோதரனின் தொல்லைகளை எப்படி சமாளித்தான்? அவை எல்லாம் எளிதில் நடந்ததா? எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் அவன்? ஆனாலும் மனம் தளரவில்லேயே நாராயணன்?
வழி காட்டும் விண் மீன்கள். காதலும் குடும்பமும் கலந்து எழுதப்பட்ட சமூக நாவல். இன்றைய இளைஞர்களின் பொறுப்பும், அன்பும் அக்கறையும் அழகாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.
படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
அத்தியாயம் 1.
அழகான சூழலில் அந்தக் கிராமம் அமைந்திருந்தது. கிராமத்தின் தென்பகுதியில் ஓங்கி உயர்ந்த பொதிகை மலையும் அதிலிருந்து வெள்ளிக் கோடாக விழும் அகத்தியர் அருவியும் காணக் கண் இரண்டு போதாது. நெல்லை மாவட்டம் தென் கோடியில் அமைந்துள்ள கிராமமான ஆழ்வார்குறிச்சி தான் அது. அங்கு பண்ணைத் தெரு என்று சொல்லப் படும் தெருவில் பெரிய வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தான் நாராயணன். களையான முகம், கூர் நாசி பார்த்தாலே எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகாதவன் எனத் தெரியும் தோற்றம். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை தவறாமல் செய்பவன் என்பது அவனது கட்டுடலைப் பார்த்தாலே தெரியும்.
அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் தான் அவனது ஒன்று விட்ட தம்பி ரங்கன். எல்லாவற்றிலும் நாராயணனுக்கு நேர் எதிர். அழகும் இளமையும் இருந்தாலும் கன்னா பின்னாவென்று சாப்பிட்டு உப்பிய வயிறு, உடற்பயிற்சி என்றால் என்னவேன்றே தெரியாத உடல்வாகு என்று இருந்தான். இருவரும் மாமா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள். மூத்தவனுக்கு வயது 27, இளையவனுக்கு 26. இருவரின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள். ரங்கனுக்கு எப்போதுமே நாராயணன் மீது லேசான பொறாமை உண்டு. எல்லாரும் நாராயணனை மட்டுமே பாராட்டுவதாகத் தோன்றும் அவனுக்கு. தன்னை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்ற தேவையில்லாத தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதன் பலன் தான் இது. நல்லவேளை மாமனுக்கு மகள் இல்லை என்று நினைத்துக் கொள்வான் அவன். இருந்தால் நிச்சயம் நாராயணனுக்குத்தான் கட்டி வைத்திருப்பார். யார் செய்த புண்ணியமோ அவருக்கு ஒரே ஒரு மகன் தான். அவனும் இப்போது தான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கிறான்.
சில பெண்கள் தெருவில் குடம் சுமந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களது அழகான இடுப்பில் குடம் ஜம்மென அமர்ந்திருந்தது. இயல்பாகப் பேசிக் கோண்டே அவர்கள் நடந்து செல்லும் அழகை ரசித்தான் ரங்கன்.
"ஏ! இந்தா பொண்ணு! உன் குடத்துலருந்து தண்ணி கீழே கொட்டுது! கொஞ்சம் பாத்துத்தான் போயேன்" என்றான் ரங்கன் கிண்டலாக.
"எங்க குடத்தில இருந்து ஒண்ணும் ஒழுகல்ல! உங்க வாயிலைருந்து தான் ஜொள்ளு கொட்டுது. தொடச்சிக்கங்க" என்று சொல்லி விட்டு அவள் போய் விட்டாள்.
ஹோஹோவெனச் சிரித்தான் நாராயணன்.
"என்னடா! செமையா மொக்க வாங்குன போல இருக்கே? உனக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வம்பு? ஊருக்கு வந்தோமா? இயற்கையை ரசிச்சோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு இப்படிப் பேசி அவமானப்பட்டியே!" என்று மேலும் சிரித்தான்.
"ஆமா! இவுரு காதல் மன்னன். பேசுன ஒடனே பொண்ணுங்க மடிஞ்சிடுமாக்கும். அதோ ஒரு பொண்ணு வருது பாரு டாக் டாக்குன்னு அது கிட்டப் போயி நீ பேசிட்டியானா நான் ஒத்துக்கறேண்டா நீ பெரிய ஆளுன்னு" என்றான் ரங்கன்.
"என்னை நீ பெரிய ஆளுன்னு ஒத்துக்கணும்னு நான் எதுக்கு அவமானப்படணும்? முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்க கூட நான் பேச மாட்டேன். உனக்கு ஆசையா இருந்தா நீ போய்ப் பேசு" என்று முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி விட்டான் நாராயணன். சப்பென்று ஆனது ரங்கனுக்கு.
காலை பலகாரம் சாப்பிட அத்தை அழைத்தார். மாமாவுடன் அமர்ந்து இருவரும் சுவையான ஆப்பம், தேங்காய்ப்பாலை ஒரு பிடி பிடித்து விட்டு வாசலுக்கு வந்தனர். பின்னாலேயே வந்தார் மாமா.
"டேய்! உங்க கூடக் கொஞ்சம் பேசணும்டா! இங்க வேண்டாம்! நம்ம கீழத் தெரு கோயில்ல திண்ணை பெரிசா இருக்கும் அங்க போயிப் பேசலாம் வாங்க" என்று