Chillzee KiMo Books - நெஞ்சினிலே நெஞ்சினிலே - சசிரேகா : Nenjinile Nenjinile - Sasirekha

(Reading time: 7.75 - 15.25 hours)
நெஞ்சினிலே நெஞ்சினிலே - சசிரேகா : Nenjinile Nenjinile - Sasirekha
 

நெஞ்சினிலே நெஞ்சினிலே - சசிரேகா

முன்னுரை

வழிதவறி வந்த நாயகிக்கு அடைக்கலம் தரும் நாயகன் அவளின் அன்பை சம்பாதிக்க போராடுகிறான்.

இதில் நாயகிக்காக அவளின் குடும்பத்தார் வைக்கும் போட்டியில் கலந்துக் கொள்கிறான்.

பல பிரச்சனைகளை கடந்து அவன் போட்டியில் ஜெயித்தானா நாயகியின் கரத்தை பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

பாகம் 1

திருப்பூர்

தாத்தா குலசேகர பாண்டியனின் வீட்டு முற்றத்தில் அவரின் கார்மென்ட்ஸ் மற்றும் சாயப்பட்டறையில் வேலை செய்யும் மூத்த தொழிலாளர்கள் 10 பேர் பவ்யத்துடன் கைகளை கட்டிக்கொண்டு குலசேகர பாண்டியரிடம் புகார் மனுக்களை அளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பக்கத்தில் அவரின் பேரன்களான செந்திலும் குமரனும் இருந்தார்கள்.

”ஐயா இது இன்னிக்கு நேத்து நடக்கிற விஷயம் இல்லைங்க பல வருஷங்களா நடக்குதுங்கய்யா. நாங்களும் எம்புட்டு நாள்தான் பொறுத்துக்கறதுங்கய்யா சின்னவங்க பெரியவங்கன்னு வயசு வித்தியாசம் பார்க்காம சகட்டு மேனிக்கு வார்த்தை விடறது தப்புங்க, எடுத்து சொன்னாலும் கேட்கறதில்லைங்க, யார் மேலயோ இருக்கற கோபத்தை எங்க மேல காட்டறது கொஞ்சம் சங்கடமா இருக்குங்க.” என்றார் ஒருவர் அவர் பெயர் வேலு சாயப்பட்டறையில் சுமார் 30 ஆண்டுகளாக பணிபுரிபவர்.

அவருக்கு அடுத்து அவரது குடும்பத்தில் இருப்பவர்களும் அங்கு வேலை செய்கிறார்கள். சாயப்பட்டறையில் வேலுவுடன் வந்த 5 பேரும் அவரின் பேச்சுக்கு தலையை பலமாக ஆட்டி ஆமாம் என்றார்கள்.

”எங்களை விடுங்க நாங்க 30 வருஷமா இங்க வேலை செய்றோம் ஆனா இப்ப வந்த இளசுகளுக்கு அது ரொம்ப கஷ்டமாயிருக்குதுங்க, பேசலாம் திட்டலாம் ஆனா இப்ப இப்ப கை நீட்டற அளவுக்கு வந்துடுச்சிங்க, அதான் கொஞ்சம் பயமாயிருக்குங்க” என்றார் கார்மென்ட்ஸ்சில் வேலை செய்யும் மூத்த தொழிலாளி சாமி அவருடன் வந்த 5 பேரும் அவரின் பேச்சுக்கு தலையை பலமாக ஆட்டி ஆமாம் என்றார்கள்.

மறுபடியும் வேலுவே தாத்தாவிடம்

”ஐயா நாங்க குத்தம் சொல்றோம்னு நினைக்காதீங்க நாங்க பல வருஷங்களா உங்களையும் இந்த குடும்பத்தையும் இந்த குடும்பத்து பிரச்சனையையும் பார்த்துக்கிட்டு வரோம்ங்க அதனால எங்களுக்கு உங்க கஷ்டம் புரியுதுங்க, இருந்தாலும் சின்ன முதலாளிக்கு வர வர பயங்கரமா கோபம் வருதுங்க, 5 மணி நேரம் 6 மணிநேரம்னு நேரம் போறது கூட தெரியாம நிக்க வைச்சி திட்டறாருங்க. சில சமயம் கையும் ஓங்கி புடறாருங்க.

அதுக்காகவே பணத்தையும் அதிகப்படியா கொடுக்கறாங்க, நாங்க அதை தப்பு சொல்லலைங்க என்ன செய்றது தப்பு அவுங்க மேல இல்லைங்க எங்களை மாதிரி பல வருஷங்களா வேலை பார்க்கறவங்க தாங்கிக்கிறாங்க, ஆனா இப்ப 5 வருஷத்திற்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்தவங்களோ இப்ப புதுசா சேர்ந்தவங்கதான் ரொம்ப கஷ்டப்படறாங்க நிறைய பேர் திட்டு வாங்க முடியாம வேலையை விட்டு போயிடறாங்க இதனால வேலை கெடுதுங்க

அதுக்காக நாங்க சும்மாயில்லைங்க இழுத்து போட்டு இன்னும் அதிக நேரம் கூட வேலை செய்றோம்ங்க, சம்பளத்தை பத்தி நாங்க குறை கூற வரலைங்க சின்ன முதலாளியோட கோபத்தை கொஞ்சம் குறைச்சிகிட்டா அவரோட எதிர்காலம் நல்லாயிருக்கும்ங்க. மத்தப்படி ஒண்ணுமில்லைங்க ஏதோ உங்க காதுல இந்த விசயத்தை போட்டுட்டோம், இனி நீங்களே யோசிச்சி முடிவெடுப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்குங்க, அப்புறம் நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்ங்கய்யா” என சொல்லும் போதே அந்த இடத்திற்கு வந்தாள் சித்தி நிர்மலா.

அவளை பார்த்த அந்த 10 பேரும் கசப்பான பார்வையை வீசினார்கள். அதை எல்லாம் ஓரம் கட்டியவள் தாத்தாவிடம்

”என்ன மாமா இங்க இப்படி கூட்டமா கிடக்கு என்ன சேதி” என கேட்க குமரன் வந்தான்

”அம்மா எல்லாம் உன்னாலதான் ஏன் தினமும் மருது அண்ணாவை திட்டற குறை சொல்ற அதனாலதான் அண்ணாவும் உன் மேல இருக்கற கோபத்தை மத்தவங்க மேல காட்டறாரு இப்ப அவர் மேல புகார் சொல்லி வந்திருக்காங்க பாரு” என கோபப்படவும் அவனை சர்வசாதாரணமாக விலக்கியவள்

”நான் என்னத்தடா அவனை திட்டிப்புட்டேன் உண்மையைதானே சொன்னேன். ஓடிப்போனவளுக்கு புள்ளையா பொறந்தும் ரோஷம் குறையில பாரு அவனுக்கு”

”சித்தி அப்படி பேசாதீங்க” என செந்தில் சொல்லவும்

”வாடா வா, நீ மட்டும் என்ன உன் அப்பனோட வாழாம இன்னொருத்தன் கூட இருந்தவளோட புள்ளைதானேடா நீ, என்கிட்ட குரலை உசத்தி பேசற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு” என கத்தவும் பாட்டியே உள்ளிருந்து வெளியே வந்தார்

“இதப்பாருடி தேவையில்லாம பேசற வேலையை வைச்சிக்காத சொல்லிட்டேன் ஆமா எங்கடி வந்த இந்தப்பக்கம் போடி வெளிய”