நிலவே நீ சாட்சி... - ஸ்ரீஜா வெங்கடேஷ்
நிலவே நீ சாட்சி...என்னும் இந்த நாவல் அருணா என்னும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.
அவளது வாழ்வில் எல்லாமே இருந்தும் தாய் இல்லை என்ற குறை அவளை வாட்டுகிறது. அத்தையும் மாமாவும் ஏன் அவளது தகப்பனுமே அவளது தாயைப் பற்றிப் பேச மறுக்கிறார்கள். உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என எதுவுமே தெரியவில்லை அருணாவுக்கும் அவளது தம்பி விஜய்க்கும். அருணாவுக்குக் காதலும் வர அதனைக் கொண்டாடுகிறாள். ஆனால்?
காதலன் சிவா வீட்டில் தாயறியாத பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தந்தையிடமிருந்து எப்படியாவது தாயைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என பெரும் முயற்சி செய்கிறார்கள் தமக்கையும் தம்பியும். மமனும் அத்தையும் வில்லங்களாக மாற அவர்களைக் கூட தூக்கியெறியத் துணிகிறார்கள்.
அவர்களது தாய் யாரெனத் தெரிந்ததா? தாயன்பு அவர்களுக்குக் கிடைத்ததா? காதல் கை கூடியதா?
அருணாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.."நிலவே நீ சட்சி...".
அத்தியாயம் 1:
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனியான ரூமில் அமர்ந்து அக்கா அருணாவும், தம்பி விஜய்யும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அது ஒரு பழைய திரைப்படம். அதில் தனது மகனுக்காக தாய் உயிரையே தியாகம் செய்வது போலவும், மகன் அதைப் பார்த்து அம்மாவின் அன்பைப் புரிந்து கொள்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தன்னை மறந்து விழிகளிலிருந்து நீர் பெருக அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அருணா. விஜய்க்கும் லேசாகக் கண்ணீர் திரையிட்டது. இருந்தும் அதை மறைத்துக் கொண்டான். படம் முடிந்து விட ரிமோட்டால் ஆஃப் செய்தாள் அருணா.
"சூடா டீ குடிக்கிறியாடா விஜி?" என்றாள் குரலில் அன்பு பொங்க.
"அக்கா! கொஞ்சம் உக்காரேன்! உங்கிட்டப் பேசணும்?'
"என்னடா? காலேஜுல ஏதாவது தகறாரு பண்ணினியா? இல்லை ஏதாவது பொண்ணு விவகாரமா?"
"ம்ச்ச்! அது ஒண்ணு தான் குறைச்சல்" என்றான் விரக்தியாக. அதைக் கேட்டதும் தம்பியை ஏறிட்டு நோக்கினாள் அருணா. கண்கள் சிவந்து தலை கலைந்து ஏதோ வியாதிக்காரன் போல இருந்தான் அவன். அவன் அருகில் அமர்ந்து தலையைத் தடவிக் கொடுத்தாள்.
"உனக்கு என்னடா குறைச்சல் ஏன் என்னவோ போல இருக்க? ஏதாவது பணம் வேணுமா?"
"இல்லை! ஆனா ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஒரு குடைச்சல்! அதுவும் இன்னைக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் அது ஜாஸ்தியாயிடிச்சு!" என்றான் தலையைப் பிடித்துக் கொண்டு. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தது அருணாவுக்கு.
அருணாவும் விஜய்யும் உடன் பிறந்தவர்கள். அருணா எம் பி ஏ படித்து விட்டு நல்ல கம்பெனியில் கை நிறையச் சம்பளம் வாங்குகிறாள். தம்பி விஜய் பி ஈ படித்துக் கொண்டிருக்கிறான். அப்பா மனோகரன் அரசு அலுவலகம் ஒன்றில் சாதாரண குமாஸ்தா. அவர்கள் அப்பாவின் அக்கா கனகா வீட்டில் தான் இருந்தனர். அத்தை கனகாவின் கணவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். கண்டிப்பும், கறாரும் அவர் உடன் பிறந்தவை. அத்தைக்குப் பிள்ளைகள் இல்லை.
மக்கள் இருவரும் மனோகரிடம் அம்மா ஏன் நம்மோடு இல்லை? நாம் ஏன் தனியாக வீடு பார்த்துக் குடியிருக்கக் கூடாது? என்று எத்தனையோ தடவை கேட்டாகி விட்டது. இருந்தாலும் சரியான பதில் இன்று வரை கிடைத்ததில்லை. அத்தை வீட்டில் எல்லாச் சலுகைகளும் இருந்தாலும் ஏதோ வேண்டாதவர்கள் போலத் தங்களை உணர்ந்தனர் அருணாவும், விஜய்யும். அவர்களுக்கு அத்தையையும், அவள் கணவனையும் கண்டால் கட்டோடு பிடிக்காது. எந்நேரமும் உம்மென்று சீரியசாக இருக்கும் அவர்களை எப்படித்தான் அப்பா சகித்துக் கொள்கிறாரோ? என நினைப்பார்கள்.
"என்ன விஜி? அம்மா பத்தியா?" என்றாள் அருணா மெல்ல.
"ஆமாக்கா! நம்ம அம்மா சாகல்ல! ஆனா எங்க இருக்காங்க? என்ன செய்யுறாங்கன்னு நமக்கு எந்த விவரமுமே சொல்ல மாட்டேகுறாரே அப்பா? ஏன் அவங்க பிரிஞ்சாங்கக்கா? நீ என்னைக்காவது அப்பா கிட்ட இதைப் பத்திக் கேட்டியா?"
"எத்தனை தடவை கேக்குறது? அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்கலையாம். அதனால கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்களாம். இது ஒரு பதிலா? இதை எப்படி நம்புறது?"