(Reading time: 7.25 - 14.5 hours)
கஜகேசரி - சசிரேகா : Gajakesari - Sasirekha
 

கஜகேசரி - சசிரேகா

முன்னுரை

குமரி கண்டம் (லெமூரியா கண்டம்) அல்லது குமரி நாடு இருந்த காலகட்டத்தில் இக்கதை நகர்கிறது.

இயற்கை சீற்றத்தினால் கடலுக்கடியில் மூழ்கிப்போன கண்டத்தில் பல அதிசய மிருகங்கள் இருந்துள்ளன. அதில் யாளியும் ஒன்று. அக்குமரி கண்டத்தில் வாழ்ந்து அழிந்துப்போனதாகச் சொல்லப்படும் யாளியை வைத்தும் சில பல கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தும் எழுதியிருக்கிறேன்.

இக்கதை முற்றிலும் கற்பனையே.

 

பாகம் 1.

குறிப்புகள்.

1)யாளி என்பது முதலில் யானை உருவத்துடன் மிகப்பெரியதாக இருந்தது. கருமையாக இருந்தது நன்றாக அகன்று விரிந்திருந்தது.

2)யாளியை சிற்பங்களாக கோயில்களில் வடித்திருந்தார்கள். மண்டபத் தூண்களிலும், கைபிடிச் சுவர்களிலும், கோயில் கோபுரத்திலும் சிற்பமாக செதுக்கினார்கள்.

3)யாளி என்பது பழங்கால விலங்கு, 16 ம் நூற்றாண்டை சார்ந்த கோயில்களில் இதன் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தது. யானை, சிங்கம், புலியை வேட்டையாடும் அளவு பலம் வாய்ந்தவை, இதை புராதான விலங்காக கூறுவர், இதைப்பற்றி தெளிவான ஆதாரங்கள் எங்கும் இல்லை. ஆனால் தமிழ் இலக்கியங்களில், கோயில்களில் யாளியை பற்றிய விவரங்கள் உண்டு

4)பயமுறுத்தும் விலங்காக கருதப்படும் இது கடவுள்களின் வாகனமாக கருதப்படுகிறது. அதாவது அக்காலத்தில் மக்களை ஆண்ட மன்னனை கடவுளாக பார்த்தார்கள் அதிலும் யானையை அடக்குபவனை வீரனாக கருதினார்கள், யானையை அடக்கும் அளவு வீரமும் பலமும் அக்கால தமிழர்களிடம் நிறையவே இருந்தது. அதை விட யாளியை அடக்கி ஆண்டவர்களை கஜகேசரி என்றார்கள், அவனை தங்களின் மன்னனாகவும், கடவுளாகவும் வணங்கினார்கள். கஜகேசரியாக இருந்தவன் மக்களையும் யாளிகளையும் ஆண்டு வந்தான்.

குமரி கண்டம் அல்லது குமரி நாடு

குமரி நாட்டை அப்போது வாழ்ந்த திருவிற் பாண்டியன் மன்னன் சிறப்பாக ஆட்சிப் புரிந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர், பண்டமாற்ற முறைகள் மூலம் வர்த்தகமும் மேலோங்கியிருந்தது. ஒரு குறைகூட பாண்டிய மன்னனின் மீது கூற முடியாது அந்தளவு அவனது ஆட்சி நடைபெற்றது, பெரும் நிலப்பரப்பு கொண்ட குமரி நாட்டில் இயற்கை வளம் கொட்டிக் கிடந்தது. இயற்கை அன்னையின் பார்வை தாராளமாகவே குமரியின் மீது விழுந்திருந்தது போலும், எங்கு நோக்கினும் பசுமையே, நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களின் சக்தியில் அந்த நாட்டின் வளமை குன்றி போகாமல் இருந்தது.

குமரி நிலத்தில் பல்வேறு மரங்களும், செடி, கொடிகளும், புழுக்கள், பூச்சிகள், பலவகையான விலங்குகள் என தனது வாழ்வாதாரத்தை பெருக்கியிருந்தது.

நீர்நிலையானது குமரி நிலப்பரப்பில் தங்கு தடையி்ல்லாமல் தனது ஆட்சியை செலுத்தி நிலத்தை பசுமையாக்கியிருந்தது. கால் வாசி மக்கள் தொகை என்றால் மீதி முக்கால் வாசியை மலைகளும், காடுகளும், அருவிகளும், ஆறுகளும், கடலும் ஆட்கொண்டது.

மலைகளிலும் காடுகளிலும் பல இடங்களிலும் காற்று தடையில்லாமல் சென்று வந்தது.

சரியான காலகட்டத்தில் மழையின் வரவால் குமரி கண்டம் பசுமை செழிப்பில் மற்ற கண்டங்களைக் காட்டிலும் சிறந்து விளங்கியது.

குமரிக் கண்டத்தில் சில இடங்களில் எரிமலைகள் இருந்தது. குமரி நாட்டில் சில சதுப்பு நிலங்களும் உண்டு, பண்பட்ட நிலங்களும், விவசாய நிலங்களும் அதிகளவில் இருந்தது, இது போல காடுகள் அதிகம் இருந்தது, வெயிற் காலங்களில் காற்றில் ஏற்படும் திடீர் தீயினால் காட்டின் அழகு குறையத் தொடங்கியது அதை விட காட்டில் வாழ்ந்த சின்ன சின்ன உயிரினங்கள் முதல் பெரிய பெரிய மிருகங்கள் வரை தீக்கு இரையானது.

நாட்டிலும் காட்டிலும் பலவகையான மிருகங்கள் வாழ்ந்தன. குதிரைகள், யானைகள், பசுக்கள் போன்றவற்றை நாட்டு மக்கள் தங்களின் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

பெரும் நிலப்பரப்பைக் கொண்ட குமரி நாட்டை பாண்டிய மன்னன் சிறப்பாக ஆட்சி செய்ததால் அந்நாட்டின் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் பாண்டிய மன்னனின் புகழ் பாரெங்கும் பரவியது. ஈடு இணையற்ற பல வீரர்களை தன் வசம் வைத்திருந்தான். அப்படை வீரர்களை குமரி நாட்டின் நான்கு புறமும் அனுப்பி எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தினான்

தலைநகரத்தில் வாழும் பாண்டியனுக்கு குமரி கண்டத்தின் எல்லையில் நடப்பது தெரிய வேண்டும் என்றும் அண்டைய நாட்டைச் சார்ந்தவர்கள் யாரேனும் தனது நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா என பார்க்கவும் அப்படை உதவியது, கூடவே மக்களில் யாரேனும் சிறந்த அறிவாளர்களாகவும், கலைகளில்