எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே - சசிரேகா
சசிரேகாவின் புதிய குறுநாவல்.
தஞ்சை
தன் வீட்டு முற்றத்தில் குமரன் கைகளை கட்டிக் கொண்டு அவனது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என நால்வரின் முன் ஒரு குற்றவாளி போல நின்றிருந்தான். அவன் செய்த தவறே ஒரு பெண்ணை காதலித்ததுதான்
அது ஏதோ தேச துரோக செயல் போல எண்ணி அனைவரும் அவனை குற்றம் சாட்டி நடு வீட்டில் நிப்பாட்டினார். அவனும் ஏதும் பேசாமல் தன் தவறை ஒப்புக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான். தாத்தாவோ தீர்க்கமான ஒரு பார்வையை அவன் மீது விசியவர் மெதுவாக பேசலானார்
”குமரா நீ செஞ்சது தப்பு, காதலிக்க கூடாதுன்னு நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருந்தேன், சத்தியமும் வாங்கிட்டேன் இது நடந்து பல வருஷங்கள் ஆனாலும் நான் மறக்கலை நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நம்பறேன், உனக்காக நான் ஒரு பொண்ணை பார்த்து வைச்சிட்டேன், நல்ல குடும்பம், நம்ம அந்தஸ்துக்கு நிகரான குடும்பம், கோடீஸ்வரி, இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு ஏத்த பொண்ணு அவள்தான், அதனால நீ காதலிக்கற பொண்ணை மறந்துட்டு நான் சொல்ற பொண்ணை நீ கல்யாணம் செஞ்சிக்க அதான் என் ஆசை, என் முடிவும் கூட
இல்லை நான் காதலிச்சவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா நாங்க யாருமே ஒத்துக்க மாட்டோம், குடும்பத்தை எதிர்த்து ஊருக்கு முன்னாடி அவமானப்பட்டு வாழப் போறியா இல்லை நான் சொல்றதை கேட்டு நடந்துக்கப் போறியா” என கேட்க குமரனிடம் பதில் இல்லை கண்கள் கலங்கி நின்றானே தவிர சரி என்றோ வேண்டாம் என்றோ கூற வில்லை
சிறுவயதில் இருந்து தாத்தாதான் அவனை பாசத்துடன் வளர்த்திருக்கிறார், வீட்டில் உள்ள அனைவருமே அவனை பாசமாக வளர்த்திருந்தார்கள், அவர்களின் அன்பை குறை கூற இயலாது, அவனிடம் தாத்தா சத்தியம் வாங்கியது மறக்கவில்லைதான் ஆனாலும் அவன் காதலித்து விட்டான், அவளை மறக்க இயலாமல் தவிக்கிறான், இதில் புதிதாக ஒரு பெண்ணை விருப்பமின்றி திருமணம் செய்துக் கொள்ளவும் அவன் மனம் ஒப்பவில்லை
அவன் பக்கம் பேசுவோர் அங்கு யாரும் இல்லை, யார் வருவார்கள் தாத்தாவை எதிர்த்து பேச யாருக்கும் துணிவில்லை. வேறு வழியின்றி வழக்கம் போலவே குமரன் தாத்தா சொல்பேச்சை கேட்பான் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால், குமரனின் அசாத்திய அமைதி தாத்தாவையே மனதுள் நடுங்க வைத்தது.
தன்னை மீறி குமரன் எதையும் செய்ய மாட்டான் என்று அவர் கொண்ட நம்பிக்கை வீணாகிடுமோ என நினைத்து கலங்கினார். பாட்டியோ குமரனிடம்
”குமரா என்னப்பா அமைதியா நிக்கற, தாத்தா சொல்றது உன் காதுல விழலையா பதில் சொல்லாம அமைதியா நின்னா என்ன அர்த்தம், ஏதாவது சொல்லுப்பா இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயம், நீதான் முடிவு எடுக்கனும் ஆனா, முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி இந்த குடும்ப கௌரவத்தையும் நீ மனசுல நினைச்சி பாரு, தப்பான முடிவு எடுத்தா அதனால வரபோற அவமானம் உன்னோட போயிடாது,
இந்த குடும்பத்துக்கும் அவமானம் வந்து சேரும், அப்படி ஆகாம இருக்கனும்னுதானே உன் தாத்தா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காரு, குடும்பத்துக்காக உன் காதலை தியாகம் செய்ய மாட்டியா உன் தாத்தா சொன்னதுக்கு சரின்னு சொல்லுப்பா” என சொல்ல குமரனோ தாத்தாவிடம் தன் கருத்தை சொல்ல முடியாது சொன்னாலும் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார், பாட்டியாவது தன் விருப்பத்தை கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் அவரிடம்
”இல்லை பாட்டி எனக்கு அவள்தான் வேணும், நான் அவளை உயிருக்குயிரா காதலிக்கிறேன், என்னால அவளை மறந்துட்டு இன்னொருத்தியை கல்யாணம் செஞ்சி வாழ முடியாது பாட்டி, அதுக்கு வாய்ப்பே இல்லை இந்த ஜென்மத்தில அவள்தான் என் மனைவின்னு நான் முடிவு பண்ணி வாழவே ஆரம்பிச்சிட்டேன், திடீர்ன்னு அவளை விட்டுடச் சொன்னா எப்படி பாட்டி என்னால சத்தியமா முடியாது பாட்டி”
”அப்ப இந்த குடும்பத்தோட மதிப்பு மரியாதை போனா உனக்கு சந்தோஷமா” என அவனின் தந்தை கேட்க அதற்கு அவனோ
”இல்லைப்பா அப்படியில்லை அவள் ரொம்ப நல்லவள்பா, அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா வாழ்வேன், நம்ம குடும்ப கௌரவம் முக்கியம்தான் ஆனா என்னோட சந்தோஷம் உங்க யாருக்குமே முக்கியமா தெரியலையாப்பா”
”தப்பு பண்ற குமரா இந்த வீட்டோட நல்லதுக்காகத்தான் எல்லாருமே சொல்றாங்க, பெரியவங்க பேச்சை கேட்டு நடக்கனும் ஒழுங்கா தாத்தா