(Reading time: 2.5 - 5 hours)
என் மேல் விழுந்த மழைத்துளியே! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : En mel vizhuntha mazhaithuliye! - Srija Venkatesh
 

என் மேல் விழுந்த மழைத்துளியே! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதல் கலந்து சொல்லப்பட்ட நாவல் இது.

இரு இளம் மருத்துவர்கள் விக்னேஷும், சுமதியும். இருவரது கண்ணோட்டங்கள், லட்சியங்கள் எல்லாமே முற்றிலும் மாறானவை. விதி இவர்கள் இருவரையும் திருமணம் என்ற பந்தத்தில் இணைக்கிறது.

இருவரது ஈகோவும் முட்டிக்கொள்கிறது. அவற்றை ரகு என்னும் கயவன் விசிறி விடுகிறான். தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சுமதியை தன்னுடையவளாக்கிக் கொள்ள என்னென்ன உண்டோ அத்தனையும் செய்கிறான். ஒரு கட்டத்தில் சுமதி அவன் விரித்த வலையில் நன்றாகவே சிக்கிக் கொள்கிறாள்.

அவள் மீண்டாளா? விக்னேஷ் சுமதி திருமணம் நிலைத்ததா? இருவரில் யார் நல்ல மருத்துவர் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?

படித்துப் பாருங்கள் "என் மேல் விழுந்த மழைத்துளியே!" நாவல்!

 

அத்தியாயம் 1.

 

டாக்டர் விக்னேஷ் காலை ஒன்பது மணிக்கு சரியாக தன் கிளினிக்கில் நுழைந்தான். கம்பவுண்டர் சபாபதி வரிசையாக டோக்கன் கொடுத்து விட்டு உட்கார்ந்திருந்தான்.  உள்ளே நுழைந்து அம்மா ,  அப்பா படத்தை வணங்கி விட்டு.  ஸ்டெத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு முதல் பேஷண்டை அழைத்தான். வந்தது ஒரு ஆள். அவருக்கு மூன்று நாளாகக் காய்ச்சல். அவன் பார்த்து மருந்து கொடுத்து ஊசி போட்டு அனுப்பினான். அவர் பணம் கொடுத்து விட்டுப் போனார்.

 

பின்னர் வந்தது குழந்தையுடன் ஒரு இளம் தாய். குழந்தைக்கு இருமல் காய்ச்சல் அதோடு நெஞ்சில் கபம் வேறு. மூச்சு விட முடியாமல் திணறியது. அழக்கூடத் தெம்பில்லை. தாயோ பித்துப் பிடித்தவள் மாதிரி  குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

"ஏம்மா? நிலைமை இத்தனை  மோசமாற வரைக்கும் ஏன் வெச்சுக்கிட்டு இருக்கீங்க? ரெண்டு நாள் முன்னாடியே கூட்டிக்கிட்டு வந்திருக்கக் கூடாது?" என்றவன்  "சபாபதி ! அந்த பிரீத்திங்க் கிட்டை ரெடி பண்ணு , இஞ்செக்ஷனுக்கு ஏற்பாடு பண்ணு , " என்று உத்தரவு பிறப்பித்தான்.

 

குழந்தை மூக்கில் அந்த மருந்து கலந்த சுவாசத்தை வைத்ததும் அது கொஞ்சமாக மூச்சு விட ஆரம்பித்து அழ ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச நேரம் எமனோடு போராடி அந்தக் குழந்தையை மீட்டான் விக்னேஷ்.

 

"ஐய்யா! நீங்க தெய்வம்யா! எப்படியோ என் குழந்தையைக் காப்பத்திட்டீங்க! நான் உங்களை என் உசிரு இருக்கறவரை மறக்க மாட்டேன். என் உசிரையே நீங்க திருப்பிக் குடுத்துருக்கீங்க" என்றாள் அந்தத் தாய்.

 

"ஏம்மா! இவ்ளோ விவரமாப் பேசற இல்ல? கொஞ்சம் சீக்கிரமே கூட்டிட்டு வரக் கூடாது? அது குழந்தை எனக்கு இன்னது செய்யுதுன்னு அது வாய் திறந்து உங்கிட்ட சொல்லுமா? லேசா ஃபீவர் வந்த ஒடனே டாக்டர் கிட்டக் காமிக்க வேண்டாம்?"

 

தலை குனிந்து கொண்டாள்.

 

"நான் என்ன சார் செய்வேன்? இவங்கப்பா ஊர்ல இல்லை. என் கையில சுத்தமாக் காசு இல்ல சார்! இன்னிக்கு ஒருத்தங்க கிட்ட கடன் நூறு ரூவா கடன் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன் சார்."

 

"ஏம்மா அப்ப உங்கிட்ட நூறு ரூவா தான் இருக்கா?"

 

"ஆமாம் சார்! உங்களுக்கு ஃபீசு நூறு தானே?"

 

"அது சரிதான். எனக்கு இப்ப இருக்கற ரூவாயக் குடுத்துட்டீன்னா அப்புறம் குழந்தையோட மாத்திரை மருந்து செலவுக்கு என்ன பண்ணுவ? அதெல்லாம் குடுக்கலைன்னா குழந்தைக்கு மறுபடியும் சீரியசா ஆயிடுமே?"

 

விழித்தாள் அவள்.

 

அவளைக் கனிவோடு பார்த்தான்.

 

"இதப்பாரும்மா! எனக்கு  ஃபீசு வேண்டாம். நான் எழுதிக் குடுக்கற மாத்திரையைக் கரெக்டாக் குடு. எல்லாம் சரியாப் போயிடும்"

 

விக்னேஷ் காலிலேயே விழுந்து விட்டாள் அந்தப் பெண்.

 

"ஐயா! இந்தக் காலத்துல உங்களை மாதிரியும் டாக்டருங்க இருக்காங்களா? என்னை மாதிரி ஏழைங்களுக்கு யாரு சார் இத்தனை கருணை காட்டுவாங்க? நீங்க உண்மையிலேயே தெய்வம் தான் சார்" என்று அழுது விட்டாள்.