காதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா
முன்னுரை
வெளியுலகத்திற்கு கணவன் மனைவியாக தெரிபவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களினால் அவ்விருவரின் வாழ்க்கைப் போக்கு மாறுகிறது. அவ்விருவருக்குள் ஒரு புதிய உறவு உதயமாகிறது. அந்த உறவிற்காக நாயகன் நாயகியின் காதலைப் பெற முயற்சிக்கிறான்.
இறுதியில் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை
பாகம் 1
சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்
இரவு 9 மணிக்கு
ரஞ்சித் ஒரு போலீஸ் அதிகாரி, அவன் தன் நண்பன் கௌதமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தான்.
”டேய் கௌதம் எங்கடா போயிருந்த சொல்லித் தொலையேன், வாயில என்ன வெத்தலையா வைச்சிருக்க பேசுடா” என கௌதமின் நண்பன் ரஞ்சித் எத்தனை முறைக் கேட்டும் பதிலே சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
”உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா, 2 மாசமா நீ காணலை. எப்படியோ உன்னோட கார் நெம்பரையும் உன்னோட போட்டோவையும் தமிழ்நாட்டில இருக்கிற எல்லா ஊர் டோல்கேட்லயும் கொடுத்து வைச்சிருந்தேன். அதனாலதான் உன்னை கண்டுபிடிக்க முடிஞ்சது. போறது போன எங்க போறேன்னு என்கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாம்ல” என ரஞ்சித் கோபமாக கத்தவும் அதற்கும் அவனிடம் பதில் இல்லை
”உன் ஐடி கம்பெனி ஓனர் உனக்கு 4, 5 ப்ராஜெக்ட் ஒர்க் கொடுத்திருந்தாராமே, அதைக் கூட அடுத்த மாசம் முடிக்கனுமாம் உன்னை நம்பிதான் வேலையில இறங்கினாராம். திடீர்ன்னு நீ காணாம போகவும் பாவம் அந்தாளுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சி தெரியுமா. அந்த ப்ராஜெக்ட் வேலை, ஐடி கம்பெனி ஓனர் இதை எதையுமே நீ நினைச்சி பார்க்கலையா, அப்படியே அம்போன்னு விட்டுட்டு கண்காணாத இடத்துக்குப் போயிடுவியோ, அப்படி உனக்கு என்னடா நடந்து போச்சி” என கேட்டான் ரஞ்சித்
நம் கதையின் கதாநாயகன் கௌதம், ஐடி கம்பெனியில் வேலை செய்பவன், மாதம் லட்சம் ரூபாய் சம்பளம், அப்பா அம்மா இருவரும் சுனாமியில் இறந்து போகவே, தனியாளாகிவிட்டான். அப்பா அம்மாவுடன் அவன் இருந்த வீடு அவர்கள் இறந்த பின்பு அங்கு வாழ பிடிக்காமல் அதை விற்றுவிட்டு வந்த பணத்தை பேங்கில் போட்டுக் கொண்டவன் தன் தந்தையின் நண்பர் ஒருவரது வீட்டில் ஒரு போர்ஷனில் தனியாக தங்கியிருந்தான்.
வேலை என்றாலே அது எப்பேர்ப்பட்ட கடினமாக இருந்தாலும் சரி முயற்சி செய்து முடித்து காட்டிவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு செல்லும் இயல்பு அவனுடையது. வைராக்கியம் மிக்கவன், சட்டென யாரையும் நம்பிவிடும் ஏமாளி. தன்னிடம் யார் அன்பாகப் பேசினாலும் அவர்களுக்காக எதையும் செய்யும் நல்லவன். அவனுக்கென்று இருக்கும் ஒரே சிறுவயது தோழன் ரஞ்சித் மட்டும்தான். அவனுக்கு அப்பா, அம்மா என்ற அழகான ஒரு குடும்பம் இருக்கிறது. திருமணம் இன்னும் ஆகவில்லை. தன் வேலையில் ப்ரோமோஷனுக்காக காத்திருந்தான், ப்ரமோஷன் கிடைத்ததும் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தான்.
ரஞ்சித்திற்கு கௌதம் என்றால் உயிர். அவனுக்காக பல முறை சிக்கலில் மாட்டியிருந்தாலும் அதற்காக கௌதமின் நட்பை இழக்காமல் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தான். கௌதமிற்கும் வேலை செய்யும் இடங்களில் நண்பர்கள் இருந்தாலும் அவர்களுடன் இல்லாத நெருக்கம் ரஞ்சித்திடம் மட்டுமே உண்டு. தன் வாழ்க்கையின் அனைத்து ரகசியங்களையும் ரஞ்சித்திடம் சொல்லி வைத்திருந்தான். இந்த உலகத்தில் தனக்கு அடுத்து அவன் நம்பும் ஒரே ஜீவன் ரஞ்சித் மட்டுமே. தோள் கொடுப்பான் தோழன் என்பது போல கௌதமிற்கு ரஞ்சித் இருந்தான். இருவரின் நட்பை கண்டு அனைவரும் பொறாமைப்படுவார்கள். அப்பேற்பட்ட உயர்ந்த நட்பு.
கௌதமிற்கு சிக்ரெட், தண்ணி போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அவனது லட்சியமே சொந்தமாக ஒரு ஐடி கம்பெனி உருவாக்குவது, தன்னைப் போல படித்தவர்களுக்கு வேலை தந்து உதவும் எண்ணம் அவனிடம் இருந்தது. அதற்காகவே பணத்தை செலவு செய்யாமல் பத்திரப்படுத்தினான். கம்பெனி தொடங்குவதற்காகவே நிறைய ப்ராஜெக்ட்களை செய்து தன்னை வேலையில் மேம்படுத்திக் கொண்டான். அவனது திறமை அனைவரும் அறிந்ததே. அவன் அந்தக் கம்னெியில் இருக்கிறான் என்றாலே போதும் அவனை தேடி ப்ராஜக்ட் ஒர்க்குகள் குவியும்.
அவனது கம்பெனி ஓனரும் அவன் செய்த ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனால் அவனது சம்பளத்தையும் 10 சதவீதம் உயர்த்துவார். 5 வருடங்களாக ஒரே கம்பெனியில் கிட்டத்தட்ட 600 ப்ராஜெக்ட்களை செய்து முடித்தான். தனக்காக யாரிடமும் உதவி கேட்டு சென்றதில்லை, பிறர் அவனிடம் உதவிகளை கேட்கும் முன்பே செய்துவிட்டு வருபவன். அதற்காக பலமுறை அவன் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தனியாகவே பல வருடங்கள் இருப்பதால், புது கம்பெனி தொடங்கியதும்