Chillzee KiMo Books - இது என்னுடைய காதல் கதை....! - பிந்து வினோத் : Ithu ennudaiya kathal kathai...! - Bindu Vinod

(Reading time: 30 - 60 minutes)
இது என்னுடைய காதல் கதை....! - பிந்து வினோத் : Ithu ennudaiya kathal kathai...! - Bindu Vinod
 

இது என்னுடைய காதல் கதை....! - பிந்து வினோத்

 

நீ காற்று... நான் மரம்...

  

மாலை நேரத்து மெல்லிய ஒளியில் ‘அரவிந்த் கார்ப்பரேட் ட்ரெய்னிங் சொல்யுஷன்ஸ்’ என்ற பெயர் அந்த சிறிய கட்டிடத்தின் வாசலில் இருந்த பெரிய ஃப்ளெக்ஸ் போர்டில் பளிச்சிட்டு கொண்டிருந்தது.

  

கட்டிடத்தின் உள்ளே, சீராக இயங்கும் அலுவலகம் என்பதை பறை சாற்றும் விதமாக வரவேற்பறை எளிமையாக ஆனால் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

  

ஆங்காங்கே இருந்த அறைகளில் இருந்து வெளி வந்த மெல்லிய ஓசைகள் வகுப்புகள் நடந்துக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொன்னது.

  

‘சாந்தி’ என்று தங்க நிறத்தில் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சஞ்சனா.

  

கையிலிருந்த ஃபைலை தன் டேபிளின் மீது கோபமாக போட்டவள், பக்கத்து டேபிளில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்த அகல்யாவிடம்,

  

“கடுப்பா வருது அகல்....” என்றாள்.

  

“ஏன்ப்பா?” அக்கறையாக விசாரித்தாள் அகல்யா.

  

“திரும்ப நம்ம ஹீரோ ஹீரோயின் நடுவே சண்டை போலிருக்கு...”

  

“யாரு சாந்தி மேடமும், அரவிந்த் சாருமா?”

  

“ம்ம்ம்... வேற யாரு இங்கே ஹீரோ, ஹீரோயின்?”

  

“அவங்க ரெண்டு பேரு நடுவே சண்டைன்னு உனக்கு எப்படி தெரியும்?”

  

“நான் அங்கே இருந்த டைம்லேயே ஒரு பத்து தடவை அவர் போன் செய்தார்... மேடம் போனை எடுக்காம கட் செய்துட்டே இருந்தாங்க...”

  

“வேற யாரவது கால் செய்திருபபங்க...”

  

“இல்ல அகல், அரவிந்த் சாருக்காக மேடம் தனி ரிங் டோன் வச்சிருக்காங்க...”

  

”அட ஆமாம்... எனக்கும் தெரியுமே...”

  

“அதே தான்... பொதுவா ஆபிஸ் டைம்ல அரவிந்த் சார் போன் செய்ய மாட்டார்... அப்படி செய்தார்னா கட்டாயம் அவர் ஏதாவது மேடம் கோபப் படுற மாதிரி செய்து இருக்கார்ன்னு அர்த்தம்....”

  

“ஹ்ம்ம்ம்....”

  

“எப்போ பாரு இப்படி ஏதாவது செய்ய வேண்டியது... அப்புறம் இப்படி கால் செய்து, செய்து சாரி சொல்ல வேண்டியது... இதே தான் திரும்ப, திரும்ப செய்றார்... மேடம் ஏன் தான் இதை அக்சப்ட் செய்துக்குறாங்கன்னு தெரியலை... அவங்களுக்கு கல்யாணம் ஆகி இந்த ஆபிஸை அவங்க பார்த்துக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து நானும் பார்க்குறேன்... இதே தான் நடக்குது... ஒரு சேஞ்சும் இல்லை...”

  

திடீரென அலறிய தொலைப்பேசி, அவர்கள் இருவரின் உரையாடலை தற்காலமாக நிறுத்தியது...!

  

ஞ்சனா, அகல்யா பேச்சில் இருந்த ‘ஹீரோயின்’ சாந்தி தன்னுடைய பெரிய ரோலிங் சேரில் அமர்ந்த படி மொபைல் போனில் அரவிந்திடம் இருந்து வந்திருந்த மெசெஜுகளை படித்துக் கொண்டிருந்தாள்...