Chillzee KiMo Books - எனது நிலா கண்ணிலே! - முகில் தினகரன் : Enathu nila kannile - Mukil Dinakaran

(Reading time: 2.5 - 4.75 hours)
எனது நிலா கண்ணிலே! - முகில் தினகரன் : Enathu nila kannile - Mukil Dinakaran
 

எனது நிலா கண்ணிலே! - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

 

அத்தியாயம் – 1

               மொட்டை மாடி.

 

      மேலே பிறை நிலா “தேமே” என்று தொங்கிக் கொண்டிருக்க, சில விடலை நட்சத்திரங்கள் “பளிச்…பளிச்”சென்று கண் சிமிட்டிக் கொண்டிருக்க, பல அம்மாஞ்சி நட்சத்திரங்கள் அமைதியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

 

      வானத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருந்தான் சிவா.முழுப் பெயர் சிவகுமார்தான்.ஆனால், அந்த முழுப் பெயரைச் சொல்லி அவனை அடையாளம் கேட்டால் யாருக்குமே தெரியாது.ஏனென்றால் அந்த “சிவா” என்னும் அழைப்புப் பெயர் அவன் மீது ஆணியடித்தாற் போல் ஒட்டியிருந்தது.

 

      “என்ன மாப்ள?...இப்பவே கனவா?” சற்றுத் தள்ளிப் படுத்திருந்த அவன் தாய் மாமன் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் கேட்க,

 

      “இல்லை மாமா… சும்மா…வானத்தை வேடிக்கை பார்த்திட்டிருந்தேன்” என்றான் சிவா சமாளிக்கும் விதமாய்.

 

      “ஓ…எத்தனை நட்சத்திரங்கள் இருக்கு?ன்னு எண்ணிட்டிருக்கீங்களா?” தானே கேட்டு, தானே “ஹா….ஹா….ஹா” வெனச் சிரித்தார்.

 

      “என்ன மாமா கலாய்க்கறீங்களா?” சிவா கேட்டான்.தாய் மாமன் பாலுவிற்கும் அவனுக்குமிடையில் வயது வித்தியாசம் நிறையவே இருந்தாலும், இருவரும் நண்பர்களைப் போலத்தான் பேசிக் கொள்வார்கள்.பழகுவார்கள்.

 

      “மாப்ள…நான் உன்னோட வயசைத் தாண்டி வந்தவன்…உனக்குள்ளே இப்ப என்ன எண்ணம் ஓடிட்டிருக்கும்?....உன் மனசு இப்ப யாரை நினைச்சுக்கிட்டிருக்கும் எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்”

 

      அப்போது விமானமொன்று பேரிரைச்சலுடன் மேலே செல்ல, அந்த இரைச்சல் அடங்க காத்திருந்து விட்டு, பாலு மாமாவே தொடர்ந்தார். “சிவா!…திருமண நிச்சயதார்த்த விழா…அமர்க்களமா முடிந்த அன்ன்னிக்கு ராத்திரி, விரைவில் மாப்பிள்ளையாகப் போகும் அந்த இளைஞனின் மனசுல என்ன ஓடும்?...எல்லைல சீனாக்காரன் ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தினானே?...அதைப் பற்றிய எண்ணமா ஓடும்?”

 

      “வே…வேறென்ன ஓடுமாம்?” வேண்டுமென்றே கேட்டான் சிவா.

 

      “ம்…வரப் போற புதுப் பொண்டாட்டிய எந்த ஊருக்கு ஹனிமூன் கூட்டிட்டுப் போகலாம்?...அங்க போய் எந்த ஹோட்டல்ல ரூம் போடலாம்?...அப்புறம் ராத்திரி நேரத்துல அவ கிட்ட எப்படியெல்லாம் அசடு வழியலாம்?...அதுக்கப்புறம்….எப்படியெல்லாம்….”

 

      மேற் கொண்டு அவரைப் பேச விடாமல் இடை புகுந்த சிவா, “அய்யோ…மாமா…போதும் போதும்…அத்தோட நிறுத்திக்கங்க உங்க பேச்சை...” வெட்கத்தோடு சொன்னான் சிவா.

 

      அவன் வெட்கத்தைப் பார்த்து பாலு மாமா இன்னும் அதிகமாய் சிரிக்க,

 

      “ஏன் மாமா?...உங்க வயசென்ன…என் வயசென்ன?...ஒரு தாய் மாமன் பேசற மாதிரியா பேசறீங்க?...” பொய்யாய்க் கோபித்துக் கேட்டான் சிவா.

 

      “அடப் போப்பா!…பொதுவா நம்ம ஊர்ல….தாய் மாமனுக எல்லோருமே தங்களோட சகோதரி குழந்தைகளுக்கு…சிம்ம சொப்பனமாய்த்தான் இருப்பாங்க!...அப்பனுக்கு பயக்காத குழந்தைகள் கூட தாய் மாமனைக் கண்டா பயப்படும்க!...ஆனா நான் உன் கிட்டே அப்படியா இருக்கேன்?...அந்த பழக்கத்தையே மாத்தி உன் கூட ஒரு ஃபிரெண்ட் மாதிரித்தானே பழகறேன்!” பாலு மாமா சொல்ல,

 

      “அட சும்மா சொன்னேன் மாமா” அவரைச் சமாதானப்படுத்தினான் சிவா.