Chillzee KiMo Books - என் வாழ்வே உன்னோடுதான் - சசிரேகா : En vazhve unnodu thaan - Sasirekha

என் வாழ்வே உன்னோடுதான் - சசிரேகா : En vazhve unnodu thaan - Sasirekha
 

என் வாழ்வே உன்னோடுதான் - சசிரேகா

முன்னுரை

யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான்.

திருட்டு பழியிலிருந்து தன் கணவனை மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும்.

 

கொடைக்கானல்

”யாமினி எழுடி” என அவளது தோழி காவேரி எழுப்ப தூக்க கலக்கத்தில் எழுந்தவள்

”என்னடி” என கேட்க

”என்னவா எழும்மா கொடைக்கானல் வந்துடுச்சி”

”ஓ அப்படியா” என கண்கள் திறந்தவள் பஸ்ஸின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் வந்தாள்.

கொடைக்கானலின் மொத்த அழகும் அவள் கண்களில் நிறைந்து அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதை எல்லாம் பார்த்தவள் மெதுவாக பஸ்ஸிற்குள் பார்த்தாள்.

அவளின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இந்த மே மாத டூர் அரேன்ஜ் செய்திருந்தார்கள். காவேரியின் வற்புறுத்தலால் யாமினியும் அந்த டூருக்கு வந்தாள். சென்னையிலிருந்து நேற்று நைட் கிளம்பி நேராக கொடைக்கானலுக்கு வந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கும் இடம் வந்துவிடும், சொகுசு பஸ் காரணமாக இருக்கையும் வசதியாக இருந்தது. பஸ்ஸிற்குள் வீடியோவும் இருக்கவே அதில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

10 நிமிடத்தில் அவர்கள் தங்க வேண்டிய ஓட்டல் வரவும் அனைவரும் இறங்கினார்கள். அதில் யாமினியும் காவேரியும் இறங்கி தங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொள்ள அவர்களிடம் வந்தான் நேத்ரன்

”ஹாய் யாமினி கொடு உன் லக்கேஜ் நான் கொண்டுவரேன்”

”நோ தேங்ஸ்”

”இட்ஸ் ஓகே கொடு” என அவளது பேக்கை பிடுங்கவும் அவள் தடுத்தாள்

”நோ நேத்ரன் ப்ளீஸ் நானே கொண்டு வரேன்” என சொல்லவும் காவேரி அவனிடம்

”நேத்ரன் என் பேக் வேணும்னா கொண்டு வாயேன் ப்ளீஸ்” என்றாள் சிரித்துக் கொண்டே

அங்கு யாமினி இருப்பதால் வேறு வழியில்லாமல் விதியே என காவேரியின் பேக்கை வாங்கி சுமந்துக் கொண்டு ஓட்டலுக்குள் சென்றான் நேத்ரன். அவன் பின்னால் இவர்களும் வர அவனும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.

மொத்தம் 15 பேர் கொண்ட குழுவிற்கு ஒருவர் தலைமை தாங்கினார் அவர் அந்த கம்பெனியின் சீனியர் மேனேஜர் தாமோதரன். வருடா வருடம் இப்படி ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்வது வழக்கம் யாமினி அந்த கம்பெனியில் சேர்ந்து 6 மாதம் ஆகியிருப்பதால் இந்த முறை அவளும் டூருக்கு வந்தாள்.

யாமினி கம்பெனியில் ஜாயின் செய்ததிலிருந்து அங்கே ஹெச்ஆராக பணியாற்றும் நேத்ரன் அவள் மீது ஒரு கண்ணை வைத்திருந்தான். அந்த கம்பெனியில் அனைத்து பெண்களிடமும் பழகியவன் யாமினியிடம் மட்டும் அவனது வித்தை பலிக்கவில்லை. அதற்காக அவனும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் விடாமல் அவளை மடக்க பலவிதமாக திட்டங்கள் தீட்டி தீட்டி ஒரு கட்டத்தில் இந்த டூரில் அவளை மடக்க நினைத்தவன் சொந்த செலவில் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்தான்.

நேத்ரன் தாமோதரனிடம் சென்று

”என்ன சார் ரூம்ஸ் கிடைச்சிடுச்சா”

”எங்க சார் நாமளே 15 பேர் இருக்கோம் ஆனா இங்க 3 ரூம்தான் இருக்குன்னு சொல்றாங்க”

”சரி லேடீஸ் 2 ரூம்லயும் ஜென்ட்ஸ் ஒரூ ரூம்லயும் தங்கட்டும். ஜென்ஸைவிட லேடீஸ் அதிகமா இருக்காங்களே”

”ஓகே சார் நான் அப்படியே செய்யறேன்” என சொல்லி அறைகளை புக் செய்து சாவிகளை நேத்ரனிடம் தர அவனும் அனைவரையும் அழைத்துக்கொண்டு அறைகளை நோக்கிச் சென்றான். ஒரு அறைக் கதவை திறந்து அங்கு பாதி பெண்களையும் அடுத்த அறையிலும் பாதி பெண்களையும் தங்க வைத்துவிட்டு கடைசி ஒரு அறையில் தன்னோடு சேர்த்து அனைத்து ஆண்களையும் தங்க வைத்தான்.

யாமினி உடனே ரெடியாக ஆரம்பித்தாள். அவள் பஸ்ஸிலேயே தூங்கிவிட்டதால் மற்றவர்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு பாத்ரூம்க்குச் சென்று குளித்துவிட்டு வேறு ஒரு உடையில் மாறினாள். அவளது உடையைக் கண்ட அந்த பெண்களும்

”என்னப்பா இது இங்கயும் நீ புடவைத்தான் கட்டனுமா”

”என்கிட்ட இருக்கறத்தானே போடமுடியும் ஓகே சீக்கிரமா ரெடியாகி வாங்க, நான் சாப்பிட போறேன்” என்றாள் யாமினி உடனே காவேரி எழுந்து

”ரொம்ப பசிக்குது நான் முதல்ல சாப்பிட போறேன் அதுக்குள்ள மத்தவங்க எல்லாரும் குளிச்சி முடிக்கட்டும் வா யாமினி” என அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

அந்த ஓட்டலில் கீழ் தளத்தில் உள்புறமாக சாப்பிடும் இடமும் இருக்க அங்கு செல்ல அங்கு ஏகப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது

”சீசன்ங்கறதால ஏகத்துக்கும் மக்கள் வந்திருக்காங்க இப்ப என்ன செய்றது ஓகே அங்க மூலையில ஒரு டேபிள் காலியாகுது வா வா” என அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் யாமினி

அந்த டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பிட்டு எழ உடனே இடம் பிடித்துக்கொண்டு அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்த ஓரிரு நொடிகளிலே ஒருவன் வந்து அமர்ந்தான். அவனை இருபெண்களும் வாயை பிளந்து பார்த்தனர்.