Chillzee KiMo Books - கலாபக் காதலா - சசிரேகா : Kalaaba kadhala - Sasirekha

கலாபக் காதலா - சசிரேகா : Kalaaba kadhala - Sasirekha
 

கலாபக் காதலா - சசிரேகா

முன்னுரை

இருவேறு குணங்கள் கொண்ட இருவருக்குள் ஏற்படும் திடீர் பரிச்சயமும் அதில் உருவான நட்பும், நட்பில் தொடங்கி உருவான காதல், காதலால் ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் இறுதியில் அவர்களின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே இக்கதையாகும்.

 

பாகம் 1

திருநெல்வேலி

ஓங்கி உயர்ந்த மாளிகையின் அழகை பார்க்க கண்கோடி வேண்டும் மாளிகையை சுற்றி எழுப்பப்பட்ட மதிற் சுவர்களில் கண்களை ஈர்க்கும் படி அழகான வர்ணங்களால் பூசப்பட்டு ஆங்காங்கே பல வண்ண இயற்கையைச் சார்ந்த ஓவியங்களால் அழகு பெற்று இருந்தது.

 வீட்டின் முன் பகுதியில் இருந்த பெரிய இரும்பு கேட்டின் அமைப்பானது வித்தியாசமாகவும் அதேசமயம் இப்படியும் கூடவா என சொல்லும் அளவு இரு பக்கமாக திறக்கும் கதவுகளுக்கு இருபக்கமும் தனித்தனியாக தோகை விரித்தாடும் மயிலின் உருவத்தை பொறித்திருந்தார்கள்.

 கதவை மூடும் போது இரு மயில்களின் முகமும் ஒன்றை ஒன்று பார்க்கும் படி அமைத்திருந்தார்கள். அதற்கேற்ப உயிருள்ள மயிலில் இருக்கும் வர்ணங்களையே அந்த கேட்டிற்கும் பெயின்டாக அடித்திருந்தார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் ஏதோ உண்மையிலேயே இரு மயில்கள் அந்த கேட்டில் அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்படும் மயிலின் முகமானது கேட்டின் முன்பக்கம் இருப்பதால் மயிலின் முகத்தில் கையை வைத்தே திறக்குமாறு அமைத்திருப்பது இன்னும் சிறப்பாக இருந்தது. அந்த கேட்டிற்கு இருவர் காவலர்களாக பணியில் கவனமாக இருந்தார்கள்.

 ஒருவன் வலது பக்கம் கேட்டிற்கும் காவல் இன்னொருவன் இடது பக்கம் கேட்டிற்கும் காவல், யாராவது வந்தால் அவரவர்கள் யாரை தேடி வந்தார்கள் என அறிந்து அந்தந்த பக்கத்து கேட் திறக்கப்படும் காவலர்களின் உருவமும் வித்தியாசமே வலது பக்கம் இருந்தவர் சாதாரண பாமரனும் இடது பக்கம் இருப்பவன் வடமொழி பேசும் கூர்க்காவும் இருந்தார்கள்.

கேட்டை திறந்தால் நீளமான நடைபாதை அதன் முடிவு மாளிகையின் வாசலில் சென்று நிற்கும் அதிக பரப்பளவில் உருவாக்கப்பட்ட அழகான மாளிகை பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. அந்த நடைபாதையையே பெரிதாக அகலமாக வைத்திருந்தார்கள்.

ஒரே சமயத்தில் நான்கு சக்கர வண்டிகள் இரண்டு செல்லும் அளவுக்கு அகலம், தரையை சாதாரணமாக அமைக்காமல் அதற்கும் அழகாக டிசைன் செய்யப்பட்டு சிவப்பு நிற சாயத்தை பூசியிருந்தார்கள்.

பார்க்கவே சிவப்பு நிற கம்பளத்தை விரித்தாற் ஃபோன்று தோன்றும் நடைபாதையின் இரு பக்கத்திலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் முதல் அழகுக்காக தரையில் படர்ந்து விரிந்த டேபிள் ரோஸ் வரை பல வண்ண பூக்கள் கொண்ட செடிகளும் கொடிகளும் மரங்களும் பரவி கிடந்தன. இரு பக்கத்திலும் இரண்டு செயற்கை நீர்வீழ்ச்சி வைத்திருந்தார்கள்.

தனித்தனியாக இருந்தாலும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தன. வலது பக்கம் எந்த செடி எந்த கொடி எந்த மரம் எவ்விடத்தில் உள்ளதோ அதே போல இடது பக்கமும் அதே செடி அதே கொடி அதே மரம் அதே இடத்தில் வளர்ந்திருப்பது பார்க்க கண்ணாடியில் வலது பக்க தோட்டமானது இடது பக்கத்திற்கு அதே பிம்பம் தெரிவது போல தோன்றும் ஆனால் உண்மையில் இரண்டு பக்கமுமே அவ்வளவு நேர்த்தியாக தோட்டத்தை அமைத்திருந்தார்கள்.

பசுமை எங்கும் பசுமையான தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களை பறிப்பார் யாரும் இல்லாமல் அதுவே பூத்து அதுவே உதிர்ந்தும் விடும். இவ்விரு தோட்டத்திற்கும் இரு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.

வலது பக்கம் இருந்தவனைப் பார்த்தாலே தெரிந்துக் கொள்ளலாம் அவனது உடையும் முகமும் வேட்டியும் சட்டையும் இதைக் கண்டாலே அக்மார்க் விவசாயி என்று சொல்லிவிடுவார்கள். செடிகளுக்கு தண்ணீர் தெளிக்க அங்கிருந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீரை குடத்தில் மொண்டு கொண்டு வந்து அனைத்து செடிகளுக்கும் ஊற்றிக் கொண்டிருந்தான்.

வலது பக்கம் இருக்கும் தோட்டக்காரனோ சேல்ஸ் ரெப் போல உடையணிந்து பார்ப்பதற்கு படித்த இளைஞனாக இருந்தான். அவன் கையில் ஒரு தண்ணீர் பாய்ச்சும் பைப் இருந்தது. அதை வைத்து ஒரே இடத்தில் நோகாமல் நின்றுக் கொண்டு தண்ணீரை பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

நடைபாதையின் முடிவில் வாசல் இருந்தாலும் வண்டிகள் நிற்பதற்காக இரு பக்கமும் இரண்டு கார் ஷெட்கள் வைக்கப்பட்டுள்ளன. வலது பக்க ஷெட்டில் பழைய அம்பாசிடர் வண்டியும், ஒரு பெரிய ஸ்கார்பியோ வண்டியும், ஒரு மாட்டிவண்டியும், ஒரு ட்ராக்டரும் இருக்கும்

இடது பக்கம் வெள்ளை நிறத்தில் ஒரு ஆடி காரும்,  ஒரு ராயல் என்பீள்டு பைக்கும், ஒரு புது மாடல் ஹோண்டா காரும் நின்றிருந்தது. வேறு கார்கள் நிற்க கூட இடம் காலியாக இருந்தது. இந்த இரு ஷெட்டிற்கும் இரு வேலையாட்கள் ஒருவன் வயதான பாமரன் இன்னொருவன் நவீன இளைஞன்.

வாசலுக்கு வந்தால் மண்ணாலும் அழகான வர்ணங்களாலும் ஆன இரு யானை சிலைகள் அம்பாரியுடன் தும்பிக்கையை தூக்கி காட்டி வரவேற்கும் படி படிக்கட்டுகளின் இரு பக்கத்திலும் வைத்திருந்தார்கள். முன்பெல்லாம் படிக்கட்டுக்கு இரு பக்கமும் திண்ணைகள் இருக்கும் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டும் உறங்கிக்கொண்டும் நேரத்தை ஓட்டுவார்கள்.

இப்போது மக்கள் யாரும் அமர்ந்திடக்கூடாதென இரு பெரிய யானைகளை வைத்துவிட்டார்கள்.