Chillzee KiMo Books - இது தான் காதலா?! - பிந்து வினோத் : Idhu thaan kadhala?! - Bindu Vinod

இது தான் காதலா?! - பிந்து வினோத் : Idhu thaan kadhala?! - Bindu Vinod
 

இது தான் காதலா?! - பிந்து வினோத்

இது ஒரு காதல் கதை ஃபிரென்ட்ஸ்!

என்ன, வித்தியாசமாக திருமணத்திற்குப் பின் வரும் காதலை சொல்லும் கதை!

பலக் கதைகள் எழுதினாலும் சில கதைகள் மனதிற்கு நெருக்கமானவை! அப்படி எனக்கு பிடித்த ஒருக் கதை இந்தக் கதை. படித்து ரொம்ப நாட்கள்... ஹுஹும் வருடங்கள் ஆகி விட்டது...!!!! மீண்டும் படித்தப் போது முதல் முறை எழுதி முடித்தப் போது ஏற்பட்ட அதே ஃபீல்! அதே ஸ்மைல்!

உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-)

 

பீப்! பீப்! பீப்!

அலறிய அலாரம் ஒலியில் தூக்கம் கலைந்து கண் விழித்த வினோதினி, கைகளை நீட்டி அலாரத்தை நிறுத்தினாள். அவளை இருபுறமும் இறுக்க அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த மகள்களின் கைகளை மெல்ல விலக்கி எழுந்தவள், கட்டிலின் ஒரு ஓரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவன் பிரபாகரனை பார்த்தாள்.

தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் முகத்தில் அமைதி இருந்தது. மகள்களுக்கும், அவனுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை அவளுக்கு! அவனும் சிறு குழந்தையாகவே தோன்றினான்... கலைந்து அவனின் நெற்றியில் விழுந்திருந்த அந்த கேசத்தை கலைத்து விளையாட கைகள் பரபரத்தது!

அவளின் பார்வையில் பட்ட கடிகாரம் நேரம் ஐந்தேகால் என காட்டவும், நினைவுகளை ஒதுக்கி தள்ளி விட்டு அவசரமாக கட்டிலை விட்டு எழுந்தாள். அதன் பின் நிற்கவும் அவளுக்கு நேரமில்லை!

  

குளித்து முடித்து, ஒவ்வொருவருக்கும் பிடித்த விதமாக சமைக்க துவங்கினாள்.

நான்கு வயதாகும் கடைக்குட்டி சுஜிக்கு உருளைக்கிழங்கு சின்னது சின்னதாக காரமே இல்லாமல் பொரியல் செய்தால் தான் பிடிக்கும். பெரியவள் விஜிக்கு சிப்ஸ் போல வட்டமாக வெட்டி காரமாக செய்வது தான் பிடிக்கும். பிரபாவிற்கு இரண்டுமே பிடிக்கும்!

ஏழரை மணிக்கு நால்வரும் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம்... பிரபா அதை பல முறை அவளிடம் சொல்லி விட்டான். ஆனால் அவளுக்கு மனம் வந்ததில்லை... கணவனுக்கு, பிள்ளைகளுக்கு இது இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து அவள் செய்வதை போல் வேறு ஒருவரால் செய்ய இயலுமா என்ன?

கைகள் தானாக வேலையில் ஆழ்ந்திருக்க, ஏனோ இன்று அவளின் மனம் அவளையும் மீறி அலை பாய்ந்துக் கொண்டிருந்தது...

மனதின் ஓரம் சின்னதாக வெறுமை தோன்றி இருந்தது...

 

ட்லி, சட்னி, சாம்பார், சாதம், பொரியல் என ஒவ்வொன்றாக தயார் செய்து விட்டு, மகள்களை எழுப்பி பள்ளிக்கு தயாராக்க படுக்கை அறைக்கு வந்தவள், பிரபா தூங்கி எழுந்து மொபைலில் எதோ அழைப்பில் (call) இருப்பதை பார்த்தாள். மனைவியை பார்த்து சின்ன புன்னகையுடன், சைகையில் குட் மார்னிங் என்றான் பிரபா...

பதிலுக்கு புன்னகைத்து விட்டு மகள்கள் பக்கம் போனவளுக்கு, ஏனோ திருமணமான புதிதில் பிரபா, செல்லமாக முத்தமிட்டு சொல்லும் அந்த காலை வணக்கம் நினைவில் வந்து போனது...

அப்போதெல்லாம் அவனுக்கு அவளின் பின்னே சுற்றும் வேலை தான்...

அவனை அடக்கி, ஒருவாறு மிரட்டி, அலுவலகத்திற்கு கிளம்ப வைத்து தானும் கிளம்புவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகி விடும்....

மனம் அதன் பாட்டில் சிந்திக்க, அவளின் கைகளும், உதடுகளும், மகள்கள் இருவரையும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில் முனைந்தது...

  

போர்களமாக மாறிய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு பள்ளி சீருடையில் குழந்தைகளும், அலுவலகத்திற்கு செல்ல மாற்றிய சேலையுடன் அவளும் உணவு மேஜையில் இருந்தார்கள்.

"ஹே ஹே இன்னைக்கும் இட்லியா? ஹும்..."

சிணுங்கிய சுஜியை பார்த்து செல்லமாக முறைத்தவள்,

"ஹேய் வாலு! உனக்காகவே ரொம்ப நாளா இட்லி செய்யவே இல்லை! சும்மா சாப்பிடு" என்றாள்.

"அப்போ இரண்டு நாளுக்கு முன்னாடி செஞ்சதுக்கு பேர் என்ன?"

"அது ரவா இட்லி!"

"டெக்னிக்கலி அதுவும் இட்லி தான்..."

தங்கைக்கு எடுத்துக் கொடுத்த அக்காவை பார்த்து,

"ஆமாம் ஆறு வயசில இவங்க ரொம்ப டெக்னிகல் விஷயம்