தாமரை மேலே நீர்த்துளி போல் - சசிரேகா
முன்னுரை
எதிர்பாராமல் நடைபெறும் திருமணத்தால் தாமரை மேல் நீர்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்கின்றனர். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.
இது முழுக்க முழுக்க கற்பனை கதையாகும். இக்கதையில் வரும் மாந்தர்கள் யாரும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல.
ஸ்ரீரங்கத்தில்
2018 - நவம்பர் -14
ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
என்று அழகாக பாடிக் கொண்டிருந்தார் லட்சுமி. அதை வீட்டில் இருந்த அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர் பாடும் பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களே, பூஜையறையில் பாடி விளக்கேற்றி ஆரத்தி காட்டுவார். இன்றோ அப்படியில்லை. அவரின் மாமனார் நம்பிபெருமாளுக்காக இந்த பாடலை அவர் அருகில் அமர்ந்து பாடினார்.
நம்பி பெருமாள் அந்த அழகான கூட்டுக்குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர். 3 மகன்கள் 3 மருமகள்கள் 3 பேரன்களை எடுத்தவர். 2 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தவரை அந்த குடும்பமே நன்றாக பார்த்துக் கொண்டது. ஆயினும் விதி வலியது என்பது போல் அவர் வாழ்க்கையின் கடைசி நொடிகளில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த பயணத்தின் இறுதி கட்டமாக அவர் விரும்பி கேட்ட பாடலைத்தான் அவரது 2வது மருமகள் லட்சுமி பாடினார். அந்தப் பாடல் வரிகள் அவரது செவி வழியே புகுந்து சிந்தையை மயக்கியது போல அவரின் இதழ்கள் புன்னகை பூத்தது. அதுவே கடைசி புன்னகை அதோடு அவரின் மூச்சும் நின்றது.
அந்த குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர் இன்று கடவுள் ஸ்ரீரங்கனின் பாதத்தை அலங்கரிக்க சொர்க்கத்திற்குச் சென்றார். அவரின் முழுக்குடும்பமே அவரின் இறப்பை நினைத்து அழுதது. அந்த ஊரில் நல்மதிப்பையும் நற்பெயரையும் பெற்றவர் நம்பிபெருமாள். அவரின் இறப்பை நினைத்து அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே கண்கலங்கினார்கள். அவரின் ஆசைப்படி தனக்கு கொள்ளி வைக்கும் உரிமையை தனது 2-வது பேரனான ரங்கராஜனுக்கே ஒப்படைத்திருந்தார். அதன் காரணமாக ரங்கராஜனை அனைவருமே தேடிவிட்டனர். அவனோ பூஜையறையில் இருந்த கடவுள் ஸ்ரீரங்கனின் உருவ சிலைக்கு முன் நின்று கோபமாக பேசிக் கொண்டிருந்தான்.
”இது உனக்கே நியாயமா, ஏன் இப்படி செஞ்ச சின்னப்ப இருந்து என்னை தூக்கி வளர்த்தவரு, அவர் தோள்ல உட்கார்ந்து உலகத்தையே பார்த்தவன் நான், உன் மேல அதிகமா பக்தி வைச்சிருந்தாரு, அவருக்கு இப்படி ஒரு மரணத்தை தர உனக்கு எப்படி மனசு வந்துச்சி. 2 வருஷமா படுத்த படுக்கையா அவரை படுக்க வைச்சி கடைசி நிமிஷம் வரைக்கும் கஷ்டப்பட்டே இறக்கறமாதிரி விதியை ஏன் அவருக்கு கொடுத்த, அவர் உன்னோட பரமபக்தன், உனக்காகவே வாழ்ந்தவர், அவரோட இறுதிநாட்கள்லயாவது சந்தோஷமா வாழ விட்டிருக்கலாமே,
இந்த 2 வருஷமா இந்த வீட்ல யாருமே சந்தோஷமா இருந்ததில்லை. இந்த வீட்டோட ஆணிவேரை சாச்சிட்டியே, உனக்கு கருணையில்லையா நான் ஒத்துக்கறேன் அவருக்கு வயசாயிடுச்சின்னு, அதுக்காக அவர் கஷ்டப்பட்டு இறக்கனுமா, உன் பக்தனுக்கு இப்படித்தான் முடிவு கிடைக்கனுமா” என அவன் தன் துக்கத்தை யாரிடம் காட்டுவது என தெரியாமல் கடவுளிடம் காட்டிக் கொண்டிருக்க அவனை தேடி வந்த அவனது தந்தையோ அறையில் கடவுளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவனை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி அவனை அழைத்துக் கொண்டு முறைப்படி தாத்தாவிற்கு செய்ய வேண்டிய அனைத்து ஈமகாரியங்களையும் ரங்கராஜன் கையால் செய்து முடித்தார் அவரின் தந்தை வைகுந்தன்.
16வது நாள் காரியம் முடிந்த பின்பு அந்த வீடே ஓய்ந்து அமைதியானது. அவரவர்கள் தங்கள் வேலைகளில் மூழ்க ரங்கராஜனுக்கு மட்டும் உலகமே சுழலாமல் நின்று போனது போல உணர்ந்தான். மனம் முழுவதும் கவலை, தன் தந்தையிடம் இருக்கும் நேரத்தை விட அதிகளவு நேரத்தை தாத்தாவிடம் செலவழித்திருந்தான், அவரும் பேரனை நல்ல முறையில் வளர்த்து அவனுடன் பாசமாக இருந்தார். கண் முன்னால் தாத்தாவின் இறப்பைக் கண்டவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. அந்த வேதனையில் அவன் முகமே வாடிவிட்டது, அவனை தேடி வந்த அவனது பாட்டி வடிவழகியோ