காணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா
முன்னுரை
அநியாயமும் தவறும் நடக்கும் போது அதை சகிக்க முடியாமல் கோபத்தில் பொங்கி எழுந்து அநியாயத்தை சரிசெய்யும் கதாநாயகியால் அவளது குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தர்மம் நியாயம் மற்றும் தனது குணமான கோபத்தையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் வாழ்கிறாள் நாயகி.
அந்த சமயத்தில் எதிர்பாராத தருணத்தில் அவள் இருக்குமிடம் தேடிவரும் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட இரு கதாநாயகர்களுடன் ஏற்படும் இனிப்பும் கசப்புமான நாட்களின் இறுதியில் தனக்கான வாழ்க்கைத் துணையாக இருவரில் எவரை அவள் தேர்ந்தெடுப்பாள் என்பதே இக்கதையாகும்.
பாகம் 1
தஞ்சை
”உங்க பொண்ணோட குணம் இந்த அடக்கம் அமைதி எல்லாமே எங்களுக்கு பிடிச்சிருக்கு பொண்ணோட போட்டோ பார்த்தப்பவே என் பையன் சரின்னு சொல்லிட்டான் அதனாலதான் இன்னிக்கு பொண்ணு பார்க்க கூட அவன் வரலை எங்க மேல அவனுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு அதோட என் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன் பெரும்பாலும் பொண்ணுங்களோட பழகறதில்லை அவன் அம்மாகிட்ட கூட ஒதுங்கி நின்று மரியாதையா பேசுவான் அப்படி வளர்த்திருக்கேன் என் பையனை, ஒரே பையன்ங்கறதால செல்லம் கொடுத்து நான் கெடுக்கவேயில்லை, பொறுப்பும் கடமையும் அவனுக்கு நான் சொல்லி வளர்த்திருக்கேன் அதனாலதானோ என்னவோ இந்த சின்ன வயசில அவனுக்கு பேங்க்ல அசிஸ்டென்ட் மேனேஜர் போஸ்ட் கிடைச்சிருக்குன்னா பாருங்களேன்” என மாணிக்கம் தன் மகன் சேகர் குறித்து பெருமையாக பேச சேகரின் தாய் சுஜாதாவோ
”இதுதான் பொண்ணுன்னு நான் சொன்னா மறுபேச்சு பேசமாட்டான் கிழிச்ச கோடு கூட தாண்டாதவன் என் பையன், இதுவரைக்கும் என் பேச்சை கேட்டு நடந்தான் கல்யாணத்துக்கப்புறம் உங்க பொண்ணு பேச்சுக் கேட்டு நடப்பான் எங்களுக்கு தேவை குடும்பத்துக்கு ஏத்த குத்துவிளக்கு போல ஒரு பொண்ணுதான் உங்க பொண்ணு ஆஹா என் கண்ணே பட்டிடுச்சி துடைச்சி வைச்ச வெள்ளி குத்துவிளக்கா ஜொலிக்கறாளே” என கண்கள் விரிய சிரித்தபடியே சொல்ல எதிரில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த குமரவேலுக்கு பெருமை தாங்கவில்லை.
ஒரு முறை தன் பக்கத்தில் நின்றிருந்த தனது மனைவி வள்ளியை பெருமையாக பார்த்தவர் அவள் பக்கத்தில் தலைகுனிந்து பட்டுப்புடவைக் கட்டி ஒன்றிரண்டு தங்க நகைகளை அணிந்துக் கொண்டு தங்க விக்கிரகம் போல நின்றுக் கொண்டிருந்த தன் மகள் ஆனந்தியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தவர் எதிரில் இருந்தவர்களிடம்
”என் பொண்ணை பத்தி இவ்ளோ தூரம் நீங்க பெருமையா சொன்னது கேட்க எனக்கு சந்தோஷமா இருக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வர என் பொண்ணு பாக்கியம் செஞ்சிருக்கனும் இல்லைன்னா இப்படி உங்களைப் போல பெரிய வரன் என் வீடு தேடி வருமா நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என அவர் சொல்லவும் அவரது மனைவி வள்ளியோ
”ஆமாங்க அப்படியே மாப்பிள்ளையும் வந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருக்கும் போட்டோல பார்த்தோம் குறை சொல்ல முடியாது தங்கத்துக்கு ஒப்பா இருக்காரே இந்த காலத்தில இப்படியொரு மரியாதை தெரிஞ்சவர் கிடைக்க என் பொண்ணு அதிர்ஷ்டம் செஞ்சிருக்கனும். இன்னிக்கே நல்லநாள்தான் பாக்கு வெத்தலை மாத்திக்கலாம்னு சொல்றீங்க ஒரு முறை மாப்பிள்ளையும் வந்தா நல்லாயிருக்குமே” என அவர் சொல்ல அதற்கு சுஜாதாவோ
”அதுக்கென்னங்க தாராளமா வர சொல்லிடறேன் இன்னும் நேரமிருக்கே ஒரு மணி நேரம் கழிச்சிதான் ராகுகாலம் வரும் அதுக்குள்ள ஒப்புத்தாம்பூலம் முடிச்சிடலாம் இப்பவே நான் சேகரை வரசொல்றேன்” என சொல்லியவர் தனது கணவரை பார்த்து தலையாட்ட உடனே அவரும் தன்னிடமிருந்த செல்போன் மூலம் சேகருக்கு போன் செய்து விவரங்கள் கூறி வர சொன்னார்.
”வரானாம் எப்படியும் அரை மணி நேரமாகும்” என மாணிக்கம் சொல்ல அதற்கு சுஜாதாவோ
”பையன் வர்ற வரைக்கும் வீட்டை சுத்திப்பார்க்கலாமே” என கேட்க அதற்கு வள்ளியும்
”தாராளமா வாங்க சுத்திப்பாருங்க எங்க வீடு சின்ன வீடுதானே” என சொல்ல அதற்கு
“சின்ன வீடா இதுவா என்னங்க சொல்றீங்க மெயின் ஏரியால இவ்ளோ பெரிய வீடு இருக்கு அந்த கால கட்டமைப்பு இன்னும் உறுதியா நிக்குதே இந்த மாதிரி வீடுகள் இப்ப ரொம்ப குறைஞ்சிடுச்சி அவங்கவங்க வசதிக்காக வீட்டை இடிச்சிட்டு புதுசா மாடர்னா கட்டிக்கறாங்க ஆனா நீங்க இன்னும் பழமை மாறாம அப்படியே வெச்சிருக்கீங்களே பெரிய விசயம்தான்” என மாணிக்கம் புகழாரம் சூட்ட அதற்கு குமரவேலோ
”அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க இது என் அப்பா காலத்தில கட்டின வீடு அதுக்கு முன்னாடி இது ஓலை குடிசையாதான் இருந்தது என் அப்பாவோட கஷ்டத்தின் பலன்தான் இந்த வீடு அந்த காலத்தில இந்த இடம் பெரிசா மதிப்பு இல்லைங்களே இப்பதானே இந்த ஏரியாவே மெயின் ஏரியாவா மாறிடுச்சி அதனால இங்க இருக்கற வீடுகளுக்கும் நிலங்களுக்கும் மதிப்பு அதிகமாயிருக்கு” என சொல்ல சுஜாதாவோ
”ஆமாம் உங்களுக்கு ஒரே பொண்ணுதானே”
“ஆமாம் ஒரே பொண்ணுதான் எனக்கு எல்லாமே என் பொண்ணு ஆனந்திதான் அவளோட சந்தோஷத்துக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன்”
“தெரியும்ங்களே அக்கம் பக்கம் இருக்கறவங்க உங்களை பத்தி பெருமையா சொல்லப் போய்தானே நாங்களே வந்தோம் இந்த ஏரியால உங்களை பத்தி தெரியாதவங்க யார் இருக்கா சொல்லுங்க யார்கிட்ட போய் உங்க பேரை சொன்னா போதும் கேட்டவங்களை