இதழில் கதை எழுதும் நேரமிது! - பத்மினி செல்வராஜ்
இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த கதை.
இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
Happy Reading!!!
********
அத்தியாயம்-1
“நூற்றுக்கு முப்பது மார்க்....” என்று கிளுக்கி சிரித்தாள் அவள்...
“ஹே மணு.. ஆள் பார்க்க கொஞ்சம் நல்லாதான் இருக்கான் டி..இன்னும் ஒரு அஞ்சு மார்க் சேர்த்து போட்டு பாஸ் பண்ணி விட்டுடு..” என்று சிரித்தாள் அடுத்தவள்..
“ம்ஹூம்...ஆள் கொஞ்சம் நல்லா இருந்தாலும் இந்த ஆள் பார்வையை பார்.. இவன் பார்வை சரியில்லை.. கள்ளத்தனம் இருக்கு.. அதுக்குனே இவனுக்கு இன்னும் கம்மியா மார்க் போட்டிருக்கணும்... “ என்று முறைத்தாள்..
“ஹ்ம்ம் சரி...சரி... முறைக்காத.. அடுத்தவனுக்கு என்ன மார்க்..? “ என்றாள் ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம் இவன் ஆள் கொஞ்சம் ஹேண்ட்ஸம் ஆ தான் இருக்கான்.. ஆனா மூக்குதான் சப்ப மூக்கு.. சைனாக்காரனாட்டம் இருக்கான்... ஆனால் பார்வை கொஞ்சம் கண்ணியமா இருக்கு.. அதற்காக போனா போகுதுனு ஒரு ஐந்து மார்க் சேர்த்து போட்டு பாஸ் பண்ணி விட்டுடலாம்.. “ என்று மீண்டும் கண்சிமிட்டி சிரித்தாள்..
அடுத்தவளும் இணைந்து சிரிக்க,
“சரி டி.. இவன் எப்படி..? “ என்று அடுத்தவனை காட்ட
“ம்ம்ஹும்.. இவன் உயரம் கம்மி... அடுத்தவன் பூசணிக்கா மாதிரி குண்டாக இருக்கிறான்.. அதற்கு அடுத்தவன் கொத்தவரங்காய் மாதிரி ஒல்லியா இருக்கான்.. அடுத்தவன் கலர் கம்மியா இருக்கான்.. இன்னொருத்தன் ரொம்ப வெள்ளையா இருக்கான்.. மண்டையில் முடி இல்லை..மீசை பெருசா வச்சிருக்கான்.. சிரிக்கவே கூலி கேட்கறான்.. சரியான உம்மனாமூஞ்சி போல ... " என்று ஒவ்வொருவனாக பார்த்து கமெண்ட் பண்ணி கொண்டிருந்தாள் அவள்....
அடுத்தவளும் முதலாமவள் சொல்லிய கமெண்ட் ஐ எல்லாம் கேட்டு சிரித்தாலும் அப்பப்ப நடுவில் முறைத்து கொண்டிருந்தாள்...
“என்ன பாப்பா.... ஒருத்தனாவது தேறினானா? “ என்று சிரித்தவாறே வந்தார் அவர்.. முன் ஐம்பதுகளில் இருந்தாலும் ஒரு தலை முடி கூட நரைக்காமல் முறுக்கி விட்ட மீசையுடன் கம்பீரமாக உள்ளே வந்தார்..
வாக்கிங் சென்று விட்டு வந்த அடையாளமாக ட்ராக் பேண்ட் ம், டீசர்ட்ம் அணிந்திருக்க, முகத்தில் காலை நடைபயணத்தை முடித்து வந்த களைப்பு தெரிந்தது. ஆனாலும் முகத்தில் மிளிர்ந்த புன்னகை அவர் சோர்வை பின்னுக்கு தள்ளி அப்பொழுதும் ப்ரெஸ்ஸாக எடுத்து காட்டியது...
திடீரென்று கேட்ட குரலால் வரவேற்பறையில் இருந்த ஷோபாவில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்து இருந்த பெண்கள் இருவரும் தலையை நிமிர்த்தி பார்த்தனர்...
சற்றுமுன் ஒவ்வொருத்தருக்கும் மார்க் போட்டு கொண்டிருந்த முதலாமவள் பின் இருபதுகளிலும் அவளை அடுத்து அமர்ந்து இருந்தவர் பின் நாற்பதுகளிலும் இருக்க வேண்டும்..
உள்ளே வந்தவரை கண்டதும் இருவர் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டி கொள்ள, தன் கையில் வைத்திருந்த போட்டோ ஆல்பத்தை தூக்கி முன்னால் இருந்த டீப்பாயில் போட்டவள்
“ப்ச்... இல்ல மணி.. எல்லாமே வத்தலும் தொத்தலுமா இருக்கானுங்க...இத்தன நாள் நீ அலஞ்சு திரிஞ்சு இப்படி பட்ட மூஞ்சியத்தான் புடிக்க முடிஞ்சுதா...? நீ வேஸ்ட் மணி... “ என்று செல்லமாக முறைத்தாள்...
அதுவரை அவளுடன் இணைந்து சிரித்து ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து கமெண்ட் பண்ணி கொண்டிருந்த அடுத்தவள் முகம் கடுப்பாக
“அடியேய்...நீ என்ன பெரிய ரதியா...? உன் முகரகட்டைக்கு என் புருஷன் எத்தனை போட்டோ தேடி புடிச்சு கொண்டு வந்து கொடுத்திருக்கார்... நானும் அட்லீஸ்ட் ஒருத்தனையாவது செலக்ட் பண்ணுவனு பார்த்தால் அது நொல்லை இது நொல்லைனு ஒவ்வொன்னுக்கும் நொட்டம் சொல்லி கிட்டிருக்க..
இப்படியே ஒவ்வொன்னா ரிஜெக்ட் பண்ணின , அப்புறம் உனக்கு நேரா அறுபதாம் கல்யாணம்தான்.. அப்பகூட உனக்கு மாப்பிள்ளை செட் ஆகுமோ ஆகாதோ.. “ என்று முதலில் திட்ட ஆரம்பித்து பின் நக்கலாக சிரித்தாள் பெரியவள்..
“மணி.. உன் பொண்டாட்டிக்கு வாய் ஜாஸ்தி ஆய்டுச்சு...இதுவரைக்கும் என் கூட ப்ரெண்ட்லியா உட்கார்ந்து ஒவ்வொருத்தனா பார்த்து மார்க் போட்டு சைட் அடிச்சிட்டு இருந்துட்டு உன்ன பார்த்ததும் அப்படியே ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் அம்மா பாத்திரத்திக்குள் புகுந்துட்டாங்க....
இது சரியில்ல.. கொஞ்சம் அடக்கி வை...” என்று அருகில் அமர்ந்து இருந்தவளை பார்த்து முறைத்தாள்..
“ஹ்ம்ம்ம் நாங்க உன்கூட ப்ரெண்ட் ஆ பழகினதுதான் தப்போனு இப்ப தோணுது டி..அப்பயே மத்த அம்மாக்கள் மாதிரி உன்னை உருட்டி மிரட்டி வளர்த்திருந்தாள் இந்நேரம் நாங்க சொல்றதை நீ கேட்டிருப்ப..
இப்ப பார்.. நீ சொல்றதை நாங்க கேட்கறமாதிரி இருக்கு..எல்லாம் நாங்க உனக்கு கொடுத்த இடம்தான் டி.. “ என்று முறைத்தாள் பெரியவள்..
அதற்குள் அவர்கள் அருகில் வந்தவர் ஷோபாவில் முதலாமவள் அருகில் அமர்ந்து கொள்ள, பெரியவள் எழுந்து சென்று அவருக்கு முகம் துடைக்க துண்டை எடுத்து வர அருகில் இருந்த அறைக்கு உள்ளே சென்றாள்...