உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத் : Un aasai mugam thedi yengugiren... - Bindu Vinod
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத்
இது 'உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்...' நாவலின் இரண்டாம் பதிப்பு.
முதல் பதிப்பில் இருந்து பல விதமான மாற்றங்கள் மற்றும் பல பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி!!
கதையைப் பற்றி:
மிகவும் துடிதுடிப்பான இளைஞனனான சுபாஷ் கல்லூரி முடித்தது முதல் தன கிராமமே உலகம் என்று தன்னை சுருக்கி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு திருமணம் என்ற பேச்சு தொடங்கும் போது வேண்டவே வேண்டாமென்று மறுக்கிறான்.
சுபாஷின் தம்பி மகேஷ் காதலித்து ப்ரியாவை திருமணம் செய்துக் கொள்கிறான். சுபாஷினால் மகேஷும், அவனுடைய அம்மாவும் வருத்தப் படுவதைப் பார்த்து சுபாஷ் எதனால் இப்படி இருக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயல்கிறாள் ப்ரியா.
சுபாஷிற்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என்றும் பிடிவாதம் செய்கிறாள்.
ப்ரியாவின் பிடிவாதம் வென்றதா? சுபாஷின் கல்லூரி வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? அதை மகேஷும், ப்ரியாவும் கண்டுப்பிடித்தார்களா??
தெரிந்துக் கொள்ள இந்த காதல் கதையை படியுங்கள்!!
Prologue
"நான் தப்பு செய்திட்டேன் பாப்பா. உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். உன் அண்ணன் இள ரத்தம் கோபப்பட்டான். நானாவது அவன் பேச்சுக்கு தலை ஆட்டாமல் யோசித்து நடந்திருக்கனும். ராஜாத்தி மாதிரி இருக்க வேண்டிய உன்னை இப்படி கஷ்டப் பட வச்சுட்டேன்..."
அப்பா சொல்வதன் அர்த்தம் புரியாமல் விழித்தாள் லாவண்யா.
எதைப் பற்றி சொல்கிறார்?? அவள் படிப்பைப் பற்றியா???
“பாப்பா, அப்பா தூங்கட்டும்... நீயும் போய் படு...” என்று அன்புடன் சொன்னாள் லாவண்யாவின் அம்மா.
மறுக்க முடியாமல் அதே அறையின் ஓரத்தில் இருந்த கட்டிலில் படுத்தாள் லாவண்யா...
தூக்கம் தான் வரவில்லை...
எப்போதும் போல கண்ணை மூடினால் அவனின் முகம் தான் கண் முன் வந்து நின்றது...!
மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லி ஏமாற்றியவனை நினைத்து நினைத்து உருகுகிறாளே... லாவண்யாவிற்கு அவள் மீதே கோபமாக வந்தது...!!!!
ஆனாலும் அவனின் உருவம் கண்ணை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்து நின்றது...
திடீரென,
“என்னங்க, என்ன பண்ணுது???” என்று அலறிய அம்மாவின் அலறலில் திடுக்கிட்டு எழுந்தாள் லாவண்யா.
“பாப்பா, அப்பாவைப் பாரு... எனக்கு பயமா இருக்கு... அண்ணன் டாக்டரை கூப்பிட போயிருக்கான்...”
லாவண்யா அப்பாவின் அருகே சென்ற போது, அவளை கவனித்த அவரின் கண்கள் கலங்கியது...
எதுவோ சொல்ல விரும்புவது போல் அவரின் உதடுகள் துடித்தன... ஆனால் அவரால் பேச இயலவில்லை....
என்ன என்று புரியாவிட்டாலும், கலங்கி இருந்த அவரின் கண்களை துடைத்தவள், அவரருகிலேயே இருந்தாள்...
இரண்டே நிமிடம்...
அவளைப் பார்த்தப் படியே அப்பாவின் கண்கள் மெல்ல மூடியது...!
அப்பா என்ன சொல்ல வந்தார்??? அவள் படிப்பை பற்றி தான் வருத்தப் பட்டாரா??? பதில் தெரியாமல் குழப்பத்துடனே நின்றாள் லாவண்யா...
அத்தியாயம் 1
குமாரமங்கலம், பார்க்கும் திசையெங்கும் பச்சை பசலேன பசுமையாக கண்ணை கவர்ந்தது! மலைத் தொடரின் அருகில் அமைந்திருந்த அந்த அழகான ஊரில், கம்பீரமாக நின்றிருந்த வீட்டின் முன் வேகமாக வந்து நின்றது அந்த பென்ஸ் கார். அதற்காகவே காத்திருந்தது போல் ராஜேஸ்வரி அவசரமாக வெளியே வந்தாள். காதோரம் மின்னிய வெள்ளி மின்னல்கள் அவளின் வயதை பறைசாற்றின. வாசலில் நின்ற கார் அவள் எதிர்பார்த்தவர்கள் வந்துவிட்டதை கூற அவளின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.
“செல்லம்மா, கனகம், மகேஷும், ப்ரியாவும் வந்தாச்சு... சீக்கிரம் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வாங்க...”
ராஜேஸ்வரியின் குரலுக்காகவே காத்திருந்தது போல் அடுத்த வினாடியே செல்லம்மாவும், கனகமும், ஆரத்தி தட்டுடன் அவசரமாக வந்தார்கள்.
வீட்டினுள் இருந்து வெளியில் வந்த மூவரையும் பார்த்து புன்னகைத்த படியே மகேஷும், ப்ரியாவும் காரில் இருந்து இறங்கினார்கள். ராஜேஸ்வரியை பார்த்து சந்தோஷமாக கை அசைத்த ப்ரியாவின் முகத்தில் மின்னிய வெட்கம் கலந்த புன்னகையும், அவளின் கழுத்தில் பளிச்சென்று மின்னிய தாலியும் அவள் புது மணப்பெண் என்பதை தண்டோரா போட்டு அறிவித்தன. பிரம்மனின் படைப்பில் மாஸ்டர்பீஸ் என்று நினைக்க வைக்கும் அழகு தேவதையாக மின்னினாள் அவள்.
அவளின் அருகில் நின்றிருந்த மகேஷும் ஆணழகனாகவே தோன்றினான். இயல்பாகவே அவன் முகத்தில் இருந்த கம்பீரத்துடன் கூடவே அந்த அழகு தேவதையை மனைவியாக அடைந்து விட்டு பெருமையும் இருந்தது.
செல்லம்மாவும், கனகாவும் ஆரத்தி எடுத்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ப்ரியா, அவர்கள் ஆரத்தி தட்டுடன் நகரவும், அருகில் நின்றிருந்த ராஜேஸ்வரியின் காலில் விழுந்து வணங்கினாள்.
“என்னம்மா ப்ரியா இது? எதுக்கு இதெல்லாம்? நல்லா இரும்மா, எழுந்திரு...”
“வந்த உடனேயே உங்க கிட்ட தான் ஆசிர்வாதம் வாங்கனும்னு நினைச்சேன்...