இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - சசிரேகா
முன்னுரை
நிறைய வீடுகள்ல பெண் குழந்தைங்க சின்ன வயசா இருக்கறப்பவே இவன்தான் உன் மாமன் இவனைதான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றதும், பையன்கள் கிட்ட இவள்தான் உன் பொண்டாட்டி, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வளர்ப்பாங்க, அதே போல பெண் வயதுக்கு வந்தால் அவளுக்கு முறை செய்பவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வைப்பாங்க
இதை கேட்டு கேட்டு வளர்ற குழந்தைங்க மனசுல ஆழமா அந்த எண்ணம் பதிஞ்சிடுது, முதல்ல இப்படி சொல்லாம பெரியவங்க வளர்த்திருக்கனும், இல்லைன்னா குழந்தைகள் பெரியவங்களான பின்னாடி பெரிய பிரச்சனைகள் ஏற்படும், இதனால் எத்தனையோ பேர் அவமானப்படறாங்க, சொந்தங்களில் பிளவு ஏற்படுது, அப்படியொரு நிகழ்வினால் உருவாக்கப்பட்ட கற்பனை கதையே இக்கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இக்கதைக்களம் முழுக்க முழுக்க கற்பனையானது. இக்கதை யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை.
வருடம் 2012...
கும்பகோணம்
ஆறுமுகம் வீட்டில்
"12 வருஷம் முன்னாடி நம்ம பொண்ணு காயத்ரிக்கு மொட்டையடிச்சி காது குத்தின விழால எவ்ளோ பிரச்சனையாச்சின்னு உங்களுக்கே தெரியும், இந்த முறை எந்த பிரச்சனையும் வராம இந்த விசேஷம் நல்லபடியா முடியனும்ங்க” என ஆறுமுகத்தின் மனைவி சகுந்தலா தனது கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு அவரும் ஆம் என்பது போல் யோசனையுடன் தலையாட்டினார்.
”நீ சொல்றதும் சரிதான் சகுந்தலா ஆனா, நம்ம பக்கம் ஆளுங்க இருக்காங்களே எது எதுக்கு பிரச்சனை பண்றாங்கன்னே தெரியலை, காது குத்தற விழால சாப்பாட்டுல கோழிக்கறியை கொஞ்சமா வைச்சதுக்கு என் பங்காளி பண்ண பிரச்சனை இருக்கே, எப்பா அவனை சரிகட்டறதுக்குள்ள நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்”
“நான் அதை சொல்லலைங்க, போன முறையே காயத்ரிக்கு முறை செய்றது யாருன்னு பெரிய பிரச்சனை வந்துச்சி மறந்துட்டீங்களா, அவளுக்கு ரெண்டு பக்கமும் சொந்தங்கள் இருக்கு, என் வழியிலயும் முறை செய்ய ஆளுங்க இருக்காங்க, உங்க வழியிலயும் முறை செய்ய ஆளுங்க இருக்காங்க, எங்க வீட்டு ஆளுங்களால என்னிக்குமே பிரச்சனை வந்ததில்ல, எல்லாம் உங்க பக்க ஆளுங்களாலதான், இந்த வீட்ல எந்த விசேஷம் நடந்தாலும் சின்ன விசயத்தை ஊதி பெரிசாக்கி அதை பெரிய பிரச்சனையாக்கிட்டு நம்ம மானத்தையும் வாங்கிட்டு போயிடறாங்க” என்றார் சகுந்தலா வேதனையுடன்
”போதும் நிறுத்து, எதுக்கெடுத்தாலும் எங்க பக்க ஆளுங்க மேலயே தப்பு சொல்லிக்கிட்டு இருப்ப, சரி ஒத்துக்கறேன் எங்காளுங்க கொஞ்சம் முன் கோபிங்க, அதுக்காக உங்க பக்க ஆளுங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்து போனா என்னவாம்” என்றார் ஆறுமுகம் கோபமுடன்
“இது நல்லாயிருக்கே எங்க பக்க ஆளுங்க அமைதியா இருந்தாலும் உங்க சொந்தம் அதான் உங்க பங்காளி சண்முகம் இருக்காரே அவரோட பையன் கதிரவன் இருக்கானே அவன் ஆரம்பத்திலேயே எகத்தாளமா பேசி சண்டையை மூட்டி விடறானே என்னத்த செய்றது”
“யாரு கதிரவனா, சே சே அவன் நல்லவன், தானா வம்பு சண்டைக்கு போறதில்லை ஆனா, வந்த சண்டையை விடறதில்லை அது அவனோட குணம், அவனை வம்பு இழுக்கறது யாரு உங்க பக்கம் ஆளுங்கதானே, அதான் உன் ஒண்ணு விட்ட பெரியப்பா பையன் இருக்காரே அந்த வெங்கடேசனும் அவர் பெத்த 2 புள்ளைங்களாலதானே ஒவ்வொரு முறை நம்ம வீட்டு விசேஷத்திலயும் பிரச்சனை பண்றாங்க, அதை கதிரவனால தாங்க முடியாம சண்டைக்கு நிக்கறான் இதுல கதிரவனை தப்பு சொல்லாத”
“என் அண்ணன் பசங்க உங்களை எதுவுமே சொன்னதில்லை, அவங்க கேட்டது என்ன உரிமையைதானே, அதை கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவீங்க, நியாயமா பார்த்தா காயத்ரிக்கு என் அண்ணன் பசங்கதான் எல்லாத்துக்கும் உரிமை செய்யனும் ஆனா, இந்த வீட்லதான் எல்லாம் தலைகீழா நடக்குது, ஊருக்கு ஒரு சட்டம்னா இந்த வீட்ல மட்டும்தான் தனி சட்டமால இருக்கு” என அலுத்துக் கொண்ட சகுந்தலாவிடம் ஆறுமுகமோ கோபத்துடன்
“இதப்பாருடி எனக்கு ஒண்ணும் உன் அண்ணன் வெங்கடேசன் மேல வெறுப்பு கிடையாது, அவர் மேல எனக்கு தனி மரியாதை இருக்கு ஆனா, என் பங்காளி சண்முகம் இருக்காரே அவரை என்னால விட்டுக் கொடுக்க முடியாது, ஏன்னா நாம இந்தளவுக்கு பெரிய அளவில இருக்கறதுக்கு அவரு செஞ்ச உதவிகள்தான் காரணம், என்னதான் காயத்ரி பிறந்த பின்னாடி அவள் அதிர்ஷ்டத்தில நாம பெரிய பணக்காரங்களா ஆனாலும், அவள் பிறக்கறதுக்கு முன்னாடி நம்மளை யார் பார்த்துக்கிட்டது சண்முகம்தானே”
“எங்க அண்ணன்கூட நமக்கு உதவி செஞ்சாரே அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா”
”தெரியுது ஆனா, சண்முகம் அளவுக்கு இல்லை” என ஆறுமுகம் சொல்ல அதற்கு சகுந்தலா
“என்ன செய்றது, அந்நேரம் எங்கண்ணன் குடும்பத்துல வியாபாரத்தில நஷ்டம் வந்துச்சி ஆனாலும் நமக்கு உதவி செஞ்சாங்க, அதை மறந்துட்டு நாக்குல நரம்பில்லாம பேசாதீங்க, ஊருக்கே தெரியும் நடந்த விசயம் என்னன்னு”
”சரி சரி இப்ப என்ன சொல்ல வர்ற அதைச் சொல்லு” என ஆறுமுகம் ஓய்ந்துப் போய் கேட்க அதற்கு சகுந்தலாவோ
“போன முறை காயத்ரிக்கு காது குத்தின விசேஷத்தில கதிரவன் முறை செஞ்சான் ஆனா, இந்த முறை அவளோட மஞ்சள் நீராட்டு விழால என் அண்ணன் பசங்கதான் முறை செய்யனும் சொல்லிட்டேன்” என சகுந்தலா கண்டிப்பாக சொல்ல அவரோ ஆடிப்போய்விட்டார்
”ஆஆ இது சரியா வராது, இந்த விசயம் கதிரவனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்”
”ஒத்த பொண்ணை பெத்து வைச்சிருக்கோம், அவளுக்கு செய்ய வேண்டிய விழால பங்கு