மும்பை
மும்பை மாநகரமே விநாயகர் சதுர்த்திக்காக விழாக்கோலம் பூண்டது. எங்கும் மக்கள் கூட்டமே அவர்களின் மகிழ்ச்சி கூச்சல் வானை எட்டியது. மேள தாளங்கள் இசைக்கருவிகள் போல பல வாத்தியங்களின் ஒலிகள் காதை பிளக்க வைத்தது அந்த மாநகரில் உள்ள அனைவருக்குமே இன்று விநாயகர்தான் ஹீரோ, அவரை பல அழகான வடிவங்களில் சிலையாக மாற்றி ஊர்வலமாக ஊரெங்கும் உலா வந்து இறுதியில் கடலில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.
விடிகாலையில் தொடர்ந்த இந்த ஊர்வலம் மாலையாகியும் முடியவில்லை அந்நேரம் மக்களின் ஊர்வலத்தைக்கண்டு கோபமாக முதலாளியின் பி.எம்.டபுள்யூ காரை சிரமத்துடன் ஓட்டியபடியே டிரைவர் சென்றுக் கொண்டிருக்க பின்சீட்டில் அமர்ந்திருந்த தி கிரேட் பிசினஸ்மேன் விக்னேஷ்வரன் சுற்றிலும் நடப்பதை கண்டுக் கொள்ளாமல் கையில் லேப்டாப்பை வைத்துக் கொண்டு தன் ஸ்டீல் கம்பெனி பற்றிய அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு தேவைப்படும் ஐடியாக்களை யோசித்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் சிதறவில்லை ஏசி கார் என்பதால் வெளியில் இருக்கும் சத்தம் அதிகமாக உள்ளே கேட்கவில்லை ஆனாலும் கேட்டது அது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது.
அவனால் சரியாக தன் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போக எரிச்சலுடன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான் சுமார் 20 அடி உயரத்தில் இருந்த விநாயகரின் சிலையை வண்டியில் ஏற்றிவைத்து சிலர் அதை இழுத்துக் கொண்டும் மற்ற மக்கள் பக்தியுடன் விநாயகரின் திருநாமத்தை கத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றார்கள்.
அவர்களின் இந்த பக்தி செயல்கள் விக்னேஷ்வரனுக்கு கோபத்தையே அளித்தது. சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு டிரைவரை பார்த்தான். டிரைவரோ அவன் ஏதாவது திட்டுவிடுவானோ என்ற பயத்தில் முகம் வெளிறி இருக்க
”வேற ரூட் கிடைக்கலையா உனக்கு” என கத்தினான் விக்னேஷ்வரன் அதற்கு டிரைவரோ பயந்துக் கொண்டே
”சார் இன்னிக்கு மும்பை முழுக்க இப்படித்தான் இருக்கும் சார்” என குரல் நடுங்க சொல்ல அதற்கு விக்னேஷ்வரன்
”இன்னும் வீட்டுக்கு போக எவ்ளோ நேரம் ஆகும்”
”இதோ சார் இந்த தெருவை கடந்துட்டா அப்புறம் 5 நிமிஷத்தில வீட்டுக்கு போயிடலாம் சார்”
”ஓகே சீக்கிரம்” என சொல்லிவிட்டு தன் கையில் அணிந்திருந்த உயர்ரக கடிகாரத்தின் நேரத்தைப் பார்த்தான் அது மதியம் மணி 3 என காட்டியது. அதோடு தனது லேப்டாப்பில் கம்பெனி பிரசன்டேஷன் வேலையை பார்க்கலானான்.
டிரைவர் சொன்னது போல அந்த தெருவை வெகு விரைவில் கடக்க முடியவில்லை 1 மணி நேரம் தேவைப்பட்டது அடுத்து தெருவை கடந்ததும் 5 நிமிடத்தில் வீட்டின் முன் கார் நின்றது. கார் நிற்கவும் விக்னேஷ் கைகடிகாரத்தை பார்த்து அதிர்ந்தான்
”யூ இடியட் 1 மணி நேரத்துக்கு மேல ஆச்சி இதான் நீ கார் ஓட்டற லட்சணமா” என விக்னேஷ்வரன் கத்த டிரைவரோ பதில் சொல்ல முடியாமல் பயத்தில் வண்டியை விட்டு இறங்கி பின்புற கதவை வேறு திறந்துவிட்டான்
”சாரி சார்”
”முதல்ல உன்னை வேலையை விட்டு தூக்கனும்” என திட்டிக் கொண்டே வீட்டிற்குள் கோபமாக பிரவேசித்தான்.
அவனது வீடானது பெரிய பங்களா போல அமைப்பு அந்த பங்களாவிலும் அன்று அவனது பாட்டி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார் சற்றே பெரிய அளவு விநாயகர் சிலையை ஹாலின் மத்தியில் வைத்து அதன் முன்பு ஒரு புரோகிதர் விநாயகரின் வரலாறை சொல்லிக் கொண்டிருந்தார்.
அதை எதிரில் இருந்த அனைவரும் பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்தவர்களில் கால் பங்கு நபர்கள் விக்னேஷின் குடும்பத்தினர் மற்றவர்கள் அக்கம் பக்கம் வீடுகளைச் சேர்ந்தவர்கள் ஹால் முழுக்க நிறைந்திருந்தார்கள் அந்த புரோகிதரும் விநாயகரின் வரலாறை சிரத்தையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
விநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.
பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான்.