Chillzee KiMo Books - தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா : Thabangale... Roobangalaai... - Sasirekha

தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா : Thabangale... Roobangalaai... - Sasirekha
 

தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா

முன்னுரை
முற்பிறவியில் முக்தியடையாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துப் போன பெண் ஆன்மா ஒன்று மறுபிறவியில் பிறந்த நாயகியின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தனது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கவும் செய்யும் போராட்டங்களால் நாயகிக்கு ஏற்பட்ட சோதனைகளும் நாயகன் அடைந்த பிரச்சனைகளும் அதோடு அந்த ஆன்மாவின் நிலைமை என்னவானது மற்றும் நாயகனும் நாயகியும் இறுதியில் என்னவானார்கள் என்பதை சொல்லும் கதையாகும். இக்கதை ஒரு பேய் கதை போன்று இருந்தாலும் இது ஒரு நல்ல ஆன்மாவின் காதல் கதையாகும் முற்பிறவியில் பிரிந்த காதலர்கள் இப்பிறவியில் சேர்ந்தார்களா சேர்ந்த போது ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை கதையாக வடித்துள்ளேன் நன்றி
 

2020

திருச்சி

”சந்துரு, கண்ணு, என் செல்லம்ல, கொஞ்சம் இதைப்பாருப்பா” என சந்திரனின் தாய் சுசித்ரா தன் கை நிறைய மேட்டரிமோனியல் வெப்சைட் மூலம் பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட பெண்களின் ஜாதக குறிப்புகளும் போட்டோக்களும் வைத்துக் கொண்டு வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த தன் மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.  

அவனோ

”அம்மா என்னம்மா நீ? எப்பவும் காலையில வேலைக்கு போறப்பதான் இப்படி செய்வியா என்ன? சாயங்காலம் வந்து பார்க்கிறேனேம்மா”

”சந்துரு இதுல இருந்து ஒரு பொண்ணை மட்டும் நீ செலக்ட் பண்ணிடு போதும், அம்மா நானே மிச்ச எல்லா வேலைகளையும் செய்துடறேன் உன்னை ஒரு தொந்தரவும் செய்ய மாட்டேன், கொஞ்சம் இதை பார்த்து எந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லுப்பா”

”விளையாடாதீங்கம்மா இது என் வாழ்க்கை பிரச்சனை, கிளம்பற அவசரத்தில பொண்ணை செலக்ட் பண்ண சொல்லி கேட்கறீங்க என்னால முடியாதும்மா” என சொல்லியதோடு அவசரமாக பைக் சாவியை தேடிக் கொண்டு அலைந்தான். அவனின் பின்னால் அவனது தாய் சுசித்ராவும் அலைய அதைக் கண்ட அவனது தந்தை குமரனும்

”சந்துரு எதுக்கு இப்ப உன் அம்மாவை இப்படி அலைக்கழிக்கற, பொண்ணு போட்டோவ செலக்ட் பண்ண 2 நிமிஷம் ஆகுமா? சட்டுன்னு ஒரு போட்டோவை எடுத்துக் கொடுத்துட்டு ஆபிசுக்கு போ” என சொல்ல சாவி எங்கே என்று அலைந்துக் கொண்டிருந்தவனின் கவனம் தந்தையின் பக்கம் திரும்பியது.

”2 நிமிஷத்தில செலக்ட் பண்றதா என்ன? இது என் லைப், என்னோட வாழ்க்கை துணைவியை தேர்ந்தெடுக்க நீங்க கொடுக்கற நேரம் வெறும் 2  நிமிஷம்தானா இது அநியாயம்பா”

”அப்படிப்பார்த்தா உன் தாத்தா எனக்கு 2 நிமிஷம் கூட கொடுக்கலையே, கல்யாணத்தன்னிக்குதான் உன் அம்மா முகத்தையே எனக்கு காட்டினாங்க, நான்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தலையா என்ன” என வருத்தமுடன் குமரன் சொல்ல அதற்கு சந்துரு

”நீங்க ஒரு தியாகிப்பா, அதுக்காக நானும் தியாகியாகனுமா சாரிப்பா” என கிண்டலாக சொன்ன சந்துருவின் முதுகில் இரண்டடி போட்டார் அவனது பெரியப்பா

”என்னடா கிண்டலா, நம்ம வீட்ல நடக்கற கல்யாணத்தில எல்லாம் பொண்ணுங்களாகட்டும் பையன்களாகட்டும் யாருமே கல்யாண பொண்ணை தேர்ந்தெடுக்க மாட்டாங்க, எல்லாம் பெரியவங்க கைகாட்டற பொண்ணையோ இல்லை பையனையோதான் கல்யாணம் செய்துக்கனும், ஏதோ உன் மேல எங்களுக்கு பாசம் ஜாஸ்தி, அதனால உன் திருமணத்தை பத்தின முடிவை நீயே எடுத்தா சந்தோஷப்படுவியேன்னு நினைச்சி நாங்க உனக்கு இந்த விசயத்தில சுதந்திரம் கொடுத்தா நீ கேலியும் கிண்டலுமா பண்ணிக்கிட்டு அலையற, இது சரியில்லை சந்துரு”

”சாரி பெரியப்பா, உங்க அளவுக்கு எனக்கு முடிவு எடுக்கறதுல அனுபவம் இல்லையே, என் வாழ்க்கை துணைவி இப்படி இருக்கனும் அப்படியிருக்கனும்னு நான் பல கற்பனைகளை செய்து வைச்சிருக்கேன், அதுக்கு  ஏத்தமாதிரி ஒரு பொண்ணை நான் செலக்ட் செய்யனும்ல, அதுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது புரிஞ்சிக்குங்க பெரியப்பா” என அவரிடம் கெஞ்சியவன் நேராக பெரியம்மாவிடம் சென்றான்

”பெரியம்மா எப்படிதான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தறீங்களோ, எல்லா விசயத்திலயும் கெடுபிடியா இருந்தா எப்படி? என் கல்யாண விசயத்தில அவரை தலையிட வேணாம்னு சொல்லுங்க, இப்படி அவரு எல்லாத்துக்கும் என்கிட்ட கண்டிப்பா நடந்துக்கிட்டா நான் கல்யாணமே பண்ணாம சந்நியாசியா போயிடுவேன் பெரியம்மா பார்த்துக்குங்க” என மிரட்ட அவரோ பயந்துப் போனார்

”சந்துரு அப்படி சொல்லாதப்பா, அவரு பார்க்கத்தான் அப்படி, மனசுல உன் மேல அன்பு அதிகம் வைச்சிருக்காரு, உனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு கோயில் குளம்லாம் சுத்தறவரை பார்த்தா நீ இப்படி பேசற, இது மட்டும் அவரு காதுல விழுந்திருந்தா ரொம்ப வருத்தப்படுவாரு, இனிமேல இப்படி பேசாத” என பேசும் போதே கண்கள் கலங்கிவிட்ட பெரியம்மாவின் தோளில் முகம் சாய்த்த சந்துரு

”பெரியம்மா பெரியம்மா சும்மா சும்மா கண் கலங்கறத நிறுத்துங்க, நான் சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன் போதுமா” என சொல்ல அவரும் சமாதானமாகிப் புன்னகை பூக்க

”சூப்பர் பெரியம்மா இந்த ஸ்மைல் ஒண்ணு போதும், உங்களை இப்படி பார்த்துக்கிட்டே நான் ஆபிஸ் போனா வேலையில எந்த பிரச்சனையும் வராது தெரியுமா”

”ஐஸ் வைச்சது போதும், ஆமா வீடு முழுக்க எதை தேடிக்கிட்டு இருக்க ஆபிஸ் கிளம்பலையா நீ”

”கிளம்பனும் பெரியம்மா பைக் சாவி எங்கன்னு தெரியலை, நீங்க பார்த்தீங்களா”

”ஓ அதுவா அதை உன் சித்தி எடுத்து மறைச்சி வைச்சிருக்கா” என ரகசியமாகச் சொல்ல

”அதை ஏன் மறைச்சி வைச்சிருக்கனும்”