Chillzee KiMo Books - உறவென்று வந்த காதல் - சசிரேகா : Uravendru vantha kadhal - Sasirekha

உறவென்று வந்த காதல் - சசிரேகா : Uravendru vantha kadhal - Sasirekha
 

உறவென்று வந்த காதல் - சசிரேகா

முன்னுரை
தன் தாயின் காதல் திருமணத்தால் பிரிந்து தனித்தனியாக விலகிச் சென்ற தாய் வழி உறவுகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க கதாநாயகி எடுத்த சபதத்தால் அவள் நாயகனுடன் சேர்ந்து அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் அவற்றை எவ்வாறு கடந்து போராடி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறாள் என்பதுமே இக்கதையின் கருவாகும்.
 

மதுரை

ஒரு பாரம்பர்யமான வீட்டின் முன் நின்ற இருவர் அந்த வீட்டைப் பார்த்தபடியே தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

"இங்க பார்த்தியா எப்படி வாழ்ந்த குடும்பம் எப்படியிருந்த வீடு இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கு”

”ஆமாம்பா ஒத்துமைக்கு பேர் போன குடும்பமே இப்படி சிதைஞ்சி ஆளுக்கொரு பக்கமால்ல போயிருக்கு”

”என்ன செய்றது யார் கண் பட்டிச்சோ 25 வருஷமாகியும் இந்த வீட்ல வாழ்ந்தவங்க பிரிஞ்சிதானே இருக்காங்க” என மற்றவன் சொல்ல அதற்கு

“உண்மைதான் 25 வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்ல வாழ்ந்தவங்க எப்படி இருந்தாங்க அண்ணன் தம்பிங்கன்னா இப்படித்தான் வாழனும்னு பேர் எடுத்தாங்க ராம லட்சுமணன் போல நல்லபெருமாள் ஐயாவும் முருகவேல் ஐயாவும் வாழ்ந்தாங்களே”

“அது மட்டுமா பரதன் போலதானே நல்லசிவம் ஐயா இருந்தாரு ஆனா இப்ப இந்த வீட்ல நல்லசிவம் ஐயாவும் அவரோட குடும்பம் மட்டும்தான் இருக்கு அந்த ராமரும்  லட்சுமணரும் இங்க இல்லையே”

“என்ன செய்றது ஆண்டவ மூர்த்தி வம்சம்னாலே இந்த சுத்துப்பட்டு ஊர்க்காரங்களுக்கு பெருமையான அதே சமயம் மரியாதை தரக்கூடிய குடும்பமாச்சே. அவரை தெய்வமால்ல அந்த காலத்தில இருந்த எல்லாரும் பார்த்தாங்க”

”நல்ல பெருமாள் ஐயா மட்டும் என்ன குறைச்சலா, அவரோட நல்ல குணத்துக்கு இரக்க சுபாவத்துக்கு இந்த ஊர்ல எத்தனை குடும்பங்கள் பயனடைஞ்சது”

“ஆமாம் முருகவேல் ஐயாவும் இந்த ஊருக்குள்ளயே இருந்தாலும் இந்த பக்கமே வரலை பாரேன், ஒரு நாள் கிழமைன்னா கூட இந்த வீட்டுக்குள்ள வராம வைராக்கியமா ஒதுங்கி ஓரமா இருக்காரே”

”ஆமாம் அன்னிக்கு நல்லசிவம் ஐயாவும் அப்படி பேசியிருக்க கூடாது”

“அவரா அப்படி பேசினது அவரோட பொண்ணு அப்படி ஒரு காரியம் செய்யாம இருந்திருந்தா இப்படியா இந்த குடும்பம் பிரிஞ்சிருக்கும்”

“இந்த காலத்திலதான் காதல்ங்கறது சர்வ சாதாரணமாயிடுச்சி ஆனா அந்த காலத்தில அது தப்புதானே”

“ஆமாம் அதுக்காக செல்லமா வளர்த்த பொண்ணை விரட்டிட்டாரு, அண்ணன்களோட சண்டை போட்டு அவங்களும் இந்த வீட்ல தங்காம போயிட்டாங்க இது நல்லசிவம் ஐயாவுக்கு தேவையா”

“அவர் தலைமுறையில நடந்த பிரச்சனையை அடுத்த தலைமுறை ஆளுங்களாவது தீர்த்து வைக்காம அவங்களும் விலகிதானே இருக்காங்க”

“இனி நல்லசிவம் ஐயாவோட 3வது தலைமுறையிலாவது இந்த குடும்பம் ஒண்ணு சேருதான்னு பார்க்கலாம்”

“இதப்பாருய்யா இது வருஷக்கணக்கா பிரிஞ்சிருக்கற குடும்பம் யாரால இந்த குடும்பம் பிரிஞ்சதோ அவங்களாலதான் இந்த குடும்பம் ஒண்ணு சேரப்போகுதுன்னு எனக்கு தோணுது”

“யாரைச் சொல்ற நல்லசிவம் ஐயாவோட பொண்ணு வள்ளியைப் பத்தியா உனக்கு புத்தியிருக்காய்யா அந்தம்மாவை அன்னிக்கே விரட்டிட்டாங்க திரும்ப எப்படி வீட்டுக்குள்ள சேர்ப்பாங்க”

”அந்தம்மாவுக்கும் ஏதாவது குழந்தை பிறந்திருக்குமே வாரிசுன்னு ஒண்ணு வந்தா இந்த குடும்பம் ஒண்ணாயிடும்”

“அப்படி ஒரு எண்ணம் அந்த வள்ளி பொண்ணுக்கு இருந்திருந்தா எப்பவோ அவள் தன் குழந்தையோட வந்து இந்த குடும்பத்தை ஒண்ணு சேர்த்திருக்குமே”

“அது அதுக்கு காலம் நேரம் வர வேணாமா அந்த பொண்ணு வள்ளி இந்த வீட்ல மகாராணியா வாழ்ந்த பொண்ணு இப்ப எப்படியெல்லாம் கஷ்டப்படுதோ அதுக்கு எந்த குழந்தை பொறந்துச்சோ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட சிதம்பரம் கதி என்னாச்சின்னு தெரியலை ஊரைவிட்டு ஓடி எந்த ஊர்ல அடைக்கலம் ஆனாங்களோ பாவம் எப்படி கஷ்டப்படறாங்களோ”

”அட இருப்பா இந்த பேச்சு மட்டும் நல்லசிவம் ஐயா காதுல விழுந்தது உன் காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்திப்புடுவாரு. அவரு வள்ளி மேல எந்த அளவுக்கு உசுரா இருந்தாரோ இப்ப அவள் பேரை சொல்றவங்களோட உசுரை எடுக்க கூட தயங்கமாட்டாரு வயசானாலும் இன்னும் அந்த ஆத்திரம் அவரை விட்டு போகலையே”

”நீ சொல்றதும் சரிதான் நமக்கேன் வம்பு எந்த குடும்பம் ஒண்ணு சேர்ந்தா நமக்கென்ன நம்ம ஜோலிய பார்க்கலாம் வாப்பா இந்த வீட்டுக்கு என்னிக்கு நல்லது நடக்கும் யாரால நடக்கும்னு இருக்கோ அவங்களால நடந்துக்கிட்டு போகுது” என அவ்வூரைச் சேர்ந்த இருவர் நல்லசிவத்தின் பரம்பரை வீட்டு முன் நின்றக் கொண்டு பேசிவிட்டு ஒரு முறை அவ்வீட்டை பார்த்தனர்.

”வள்ளி இருந்தப்ப கலகலன்னு இருந்த வீடு இப்ப களை இழந்துப் போயிருச்சி” என