நிலவே என்னிடம் நெருங்காதே!! - பத்மினி செல்வராஜ் : Nilave ennidam nerungathe!! - Padmini Selvaraj
 

நிலவே என்னிடம் நெருங்காதே!! - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..

கதையைப் பற்றி??

என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. Happy Reading!!!

********

 

 

அத்தியாயம்-1

கோயம்புத்தூர் டூ மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருந்தது அந்த ஆடி கார்...இல்லை முறுக்கி கொண்டிருந்தான் அந்த நெடியவன்..

இதுவரை அத்தனை வேகம் பறந்ததில்லை அந்த கார்... முதன்முறையாக அவ்வளவு வேகம் செல்லம் அந்த ஆடி கார் கூட தன்னுடைய திறமைக்கு கிடைத்த சவாலாக அவனுக்கு ஒத்துழைத்து அவனுடன் சேர்ந்து பறந்து கொண்டிருந்தது...

யார் இவன்? கார் ரேஸ்க்கு போக மறந்து இங்கே வந்துவிட்டானா? இல்லை ரேஸ்க்காக மக்கள் புழங்கும் இந்த நெடுஞ்சாலையில் பயிற்சி செய்கிறானா? வாருங்கள் பார்க்கலாம்….

இவ்வளவு வேகத்தில் அந்த காரை விரட்டி கொண்டிருப்பவனை உற்று கவனித்தால், திகைத்து போவீர்கள்...

கட்டான உடற்கட்டு.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உருண்டு திரண்டிருந்த தேகம்.. அலை அலையாக அசைந்தாடும் அடர்ந்த கேசம்.. கண்களில் ஒரு வித ஊடுருவும் பார்வை.. அழுத்தமாக மூடியிருந்த உதடுகள்..சூரியனை போன்ற வெம்மையில் தகதகக்கும் முகம்...

நல்ல வேளையாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் வழக்கம் போல சீட் பெல்ட் ஐ இழுத்து மாட்டி இருந்தான்....

இல்லை என்றால் அவன் பறக்கும் வேகத்திற்கு மேல் கூரையை பிய்த்து கொண்டு பறந்திருப்பான்....

ஆனால் அவன் அணிந்திருந்த காஸ்ட்யூம்தான் அவன் பறக்கும் வேகத்திற்கு பொருத்தம் இல்லாமல் ஆக்வாட்(awkward) ஆக இருந்தது....

அந்த விலை உயர்ந்த ஆடி காரில் அத்தனை வேகத்தில் பறப்பவன் டைட்டான ஜீன்ஸ்ம் உடலை ஒட்டி அவன் திடகாத்திரமான பரந்த மார்பும் சிக்ஸ் பேக் தேகமும் அப்படியே திமிறி கொண்டு வெளியில் தெரியுமாறு ஒரு டீசர்ட் ஐ அணிந்திருப்பான் என்று பார்த்தால் அதற்கு முற்றிலும் மாறாக பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தான்...

தோளில் ஒரு துண்டு மட்டும் மிஸ்ஸிங்..

அவனுடைய அடர்த்தியான சிகையின் இடையில் ஆங்காங்கே ஒட்டியிருந்த மஞ்சள் கலந்த ஒன்றிரண்டு அரிசியும், கையில் கட்டியிருந்த கங்கணம், அவன் நீண்ட கழுத்தில் இருந்து வந்த பூமாலை வாசமும், பரந்து விரிந்த தோள்களில் ஒட்டி இருந்த பூவின் சிறு இதழும் நெற்றியில் வைத்திருந்த சந்தனம் மற்றும் குங்குமமாய் அவனை மீண்டும் உற்று பார்க்க, அப்படியே கல்யாண மாப்பிள்ளை போல இருந்தான் அந்த நெடியவன்..

தோற்றம் அப்படியே கல்யாண மாப்பிள்ளையாக இருந்தாலும் கல்யாண மாப்பிள்ளைக்கே உரித்தான அந்த மகிழ்ச்சி, பூரிப்பு, தன் சரி பாதியை கண்டு கொண்டு அவளை தன்னவளாக்கி கொண்ட வெற்றி கழிப்பு என்று எல்லாம் மிஸ்ஸிங்..

மாறாக அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..எதிரில் இருப்பவர்களை துவம்சம் செய்யும் ஆவேசம் அவன் முகத்தில் தெறித்தது... அந்த ஆவேசத்தை எல்லாம் சேர்த்துத்தான் அந்த கார் ஸ்டியரிங் ல் காட்டி அந்த காரை முறுக்கி கொண்டிருந்தான் அவன்..

அந்த கார் அவன் சொல் கேட்டு அடங்கி பறந்து கொண்டிருந்தது.. ஆனால் அவன் மனம் மட்டும் அவன் கட்டளைக்கு அடங்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருந்தது...

எல்லாரையும் ஒரு பார்வையில் அடக்கி விடுபவன் அவன் மனதை மட்டும் அடக்க முடியவில்லை... அது மட்டும் எப்பவுமே வேற ஒருத்தருக்கு மட்டுமே அடங்கி போய் விடுகிறது...

அந்த வேற ஒருத்தர் என்ன சொன்னாலும் நாய் குட்டியாய் வாலை ஆட்டி கொண்டு அடங்கி விடுகிறது...அவனும் எத்தனையோ முறை தன் மனதை அடக்கி அவர் சொல்வதை கேட்காதே என்று ஆணை இட்டிருக்கிறான்.. ஆனால் அதெல்லாம் அதனிடம் பலிக்கவில்லை...

எப்பவும் போல அந்த வேற ஒருவரிடமே வாலை ஆட்டிகொண்டு கையை வாயில் வைத்து சலாம் போட்டு கொண்டு நின்றது அவன் மனம்....

இதுவரை அவன் வாழ்வில் நடந்தது, அந்த வேற ஒருத்தருக்கு அடங்கி போனது எல்லாம் எப்படியோ சகித்து கொள்ளலாம்..

ஆனால் சற்று முன் நடந்தது????

அதை மட்டும் அவனால் சகித்து கொள்ள முடியவில்லை..

அதை சகித்து கொள்ள முடியாது என்று தெரிந்துதான் போர்க் கொடியை உயர்த்தினான்.. ஆனால் அவரின் ஒரு பார்வைக்கு அவன் மனம் அடங்கி போய் உயர்த்திய கொடி உயர்த்திய வேகத்திலயே கீழ வந்துவிட்டது..

அதன்பிறகு அவனும் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அவர் சொன்னதை செய்தான்..எதிலும் யாருக்கும் கட்டுகடங்காமல் திமிறி கொண்டு இருப்பவன், நினைச்சதை சாதிப்பவன் அவர் விசயத்தில் மட்டும் அவன் நினைத்தது எதையுமே சாதிக்க முடியாமல் போனது..