என் இதயம் கவர்ந்த தாமரையே - சசிரேகா
முன்னுரை:
பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது.
நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.
திண்டுக்கல் டவுன்
”வீரா டேய் வீர பாண்டியா இங்க வா” என வீரபாண்டியனின் தந்தை வெங்கடாசலம் அழைக்க அவனும் அவர் முன் வந்து நின்றான்.
பூட்டு வியாபாரம் அவர்களது பரம்பரை தொழில் இன்றும் கடையில் அமர்ந்தபடியே வெங்கடாசலம் கோபமாக இருக்க அவரது மூத்த பையன் மாணிக்கம் கடையின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டே தனது தம்பி வீரபாண்டியனை பார்த்து கண்களால் சைகை செய்தான்.
அதை அவனும் கண்டான் அதற்குள் வெங்கடாசலமே ஆரம்பித்தார்
”இப்படியே நீ இருந்தா வேலைக்காகாது, நீ இன்னும் முன்னேற வேணாமா சொல்லு”
”இப்பவும் வேலை செஞ்சிக்கிட்டுதானே இருக்கேன், சினிமால வர்ற மாதிரி 5 நிமிஷ பாட்டிலேயே ஏழையா இருந்து பணக்காரனா ஆகற வித்தை எனக்கு தெரியாதுப்பா, எப்படியும் நான் பெரியாளா உங்களை போல ஆயிடுவேன் அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்”
”இது நம்ம கடைதானே, இங்கிருந்தே நீ ஆரம்பியேன், அது என்ன தனியா உனக்குன்னு கடையை வைச்சி நடத்தறது இது நல்லாவாயிருக்கு, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க இப்பவே என்கிட்ட சில பேர் வந்து என்ன உங்களுக்கும் உன் பையனுக்கும் சண்டையா, உங்களுக்கே சொந்தமாக கடை இருக்கறப்ப எதுக்கு உங்க சின்ன பையன் தனியா கடை வைச்சி நடத்தனும்னு கேட்கறாங்க, என்னத்த பதில் சொல்றதுன்னு தெரியலை எப்படி சொன்னாலும் அவங்க நம்பமாட்டாங்கடா”
”என் தாத்தா அடிக்கடி சொல்வாரு, பிறக்கறப்ப ஏழையா பிறக்கலாம் ஆனா ஒருத்தன் இறக்கறப்பவும் ஏழையா இருந்தா அது அவனோட முட்டாள்தனம்னு சொல்வாரு நான் முட்டாளா சாக விரும்பலை அப்பா”
”சரிடா அதைச் சொன்னது எங்கப்பா, அவர் அப்ப ஏழையா இருந்தாரு அதனால இப்படியொரு லட்சியத்தை சொன்னாரு, நான் பிறக்கறப்ப ஏழையா பிறந்தேன் வளர்ந்தேன் ஆனா நீ பிறக்கறப்ப ஏழையில்லையே, ஓரளவுக்கு வீடு வசதியாதானே இருந்திச்சி சொந்தமா கடையும் இருந்திச்சே”
”இருக்கலாம் ஆனா அது உங்களோட சொத்து, உங்க உழைப்பு, நீங்க கஷ்டப்பட்டு உழைச்சி உருவாக்கின வீடு, கடை, தொழில் எல்லாம் இதுல நான் எங்க இருக்கேன்” என கேட்க அதற்கு அவரோ
”இப்படி பிரிச்சி பேசாதடா, இதுக்குத்தான் நான் அப்பவே உங்கம்மாகிட்ட சொன்னேன் அவனை ரொம்பவே கண்டிப்பா வளர்க்காத, அப்புறம் நாம சொல்ற பேச்சை கேட்காம போயிடுவான்னு கேட்டாளா இப்ப பாரு, என் முன்னாடியே நீ எப்படி பேசற”
”இப்ப எதுக்கு அம்மாவை திட்டறீங்க, அம்மா எனக்கு நல்லதுதான் சொல்வாங்க, அவங்க வளர்ப்பில நான் நல்லாதானே இருக்கேன், எதுல குறைஞ்சிட்டேன் தனியாளா சொந்தக்கால்ல நின்னு புதுசா கடையை ஆரம்பிச்சி தொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்கனும்னு நினைக்கறது தப்பா”
“தப்பில்லை ஆனாலும்” என அவர் இழுக்க அவனோ
”இதுக்குத்தான் உங்க கிட்ட நான் தொழில் கத்துக்கலை, உங்களுக்கே சொல்லிக் கொடுத்த எங்க தாத்தாகிட்ட கத்துக்கிட்டேன்”
”அவர் உனக்கு சொல்லிக் கொடுத்தாரு ஆனா, என்ன நீ பள்ளிப்படிப்போட நிறுத்திட்டு அவர்ட்ட போய் பூட்டு எப்படி செய்றதுன்னு கத்துக்கிட்ட, அவரும் உனக்கு தொழில்ல இருக்கற நெளிவு சுழிவுகளை எனக்கே சொல்லாத பல விசயங்களையும் நான் தொழில்ல பட்ட கஷ்டங்களையும் சொல்லி உன்னை வளர்த்து அந்த திருப்தியில இறந்தும் போனாரு, நீயும் அவர் பேச்சை நம்பி காலேஜ்க்கு போகாம தனியா உனக்குன்னு உன்கூட படிச்ச 2 பசங்களை வேலைக்கு வைச்சிக்கிட்டு சொந்தமா பூட்டு தயார் செய்ய ஆரம்பிச்சிட்ட, ஆரம்பத்தில நீ ஏதோ ஒரு வேகத்தில வேலை செய்றதா நினைச்சேன் ஆனா, இப்பதானே தெரியுது எனக்கு எதிராவே என் கடைக்கு எதிர்லயே ஒரு கடை திறப்பேன்னு நான் எதிர்பார்க்கலை, இப்பவே சொல்லிடறேன் ஒழுங்கா கேளு திறந்த கடையை மூடிட்டு ஒழுங்கா நம்ம கடையில வந்து வேலை செய்” என சொல்ல அவனோ
”முடியாதுப்பா ஒரே கடையில வேலை செய்றதால உங்களோட எண்ணங்களுக்கும் என்னோட எண்ணங்களுக்கும் வேறுபாடு வரும், ரெண்டு பேருமே வேற விதமா யோசிக்கறவங்க, நான் ஒண்ணு சொன்னா நீங்க ஒண்ணு சொல்வீங்க, நீங்க ஒண்ணு சொன்னா அதை நான் காதுலயே போட்டுக்க மாட்டேன், வீணா நமக்குள்ள சண்டை வரனுமா வேணாமே” என பொறுமையாக அவன் பேச அவருக்கு கஷ்டமாகிப் போனது
”தப்பு என்னோடதுதான், காலா காலத்தில உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சி முடிச்சிருந்தா இந்நேரம் இப்படி நீ என் முன்னாடி நின்னு பேசியிருப்பியா சொல்லு”
”அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், கல்யாணம்தானே இப்ப என்ன அவசரம் போன வாரம்தான் கடையை திறந்தேன், தொழில்ல லாபம் வரட்டும், இப்பவே நான் என் சொந்த கடையில தொழிலாளியா வேலை செய்றேன் எப்ப நான் என் கடைக்கே முதலாளியாகறேனோ அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுவரைக்கும் என்னை நீங்க தொந்தரவு பண்ணாதீங்க” என சொல்ல அவரோ கோபத்தில் அமர்ந்திருந்தவர் எழுந்து நின்று வீரபாண்டியனை