TEN CONTEST 2019 - 20 - Entry # 25
Story Name - Un kaiyil ennai koduthen
Author Name - Sasirekha
Debut writer - No
உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா
முன்னுரை
உறவின் பிரிவு என்பது எந்த வயதிலும் நிகழலாம். ஆனால் அந்த உறவை கடைசி வரையில் காப்பாற்ற போராடுவது அந்த போராட்டத்தில் பல இன்னலங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வதுதான் இக்கதையின் கருவாகும்.
நாயகியின் காதலுக்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா இல்லையே என்பதையும் வருடம் தவறாமல் நாயகன் செய்யும் முயற்சியை விளக்கமாக எழுதியுள்ளேன் நன்றி
சென்னை
அன்று 1999 .....
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படையப்பா திரைபடம் ரிலீஸ் ஆன நன்னாளில்
காலை 6 மணிக்கு
”அண்ணா அண்ணா” என ஒரு சலூன் கடை வாசலில் நின்று உரக்க கத்தினான் 12 வயது ஜெய். அவனுடன் அவன் வயது ஒத்த அவனது பள்ளி நண்பர்கள் நால்வரும் நின்றுக் கொண்டிருந்தார்கள். இன்னும் சலூன் கடை திறக்கவில்லை ஆனால் அவர்களோ அந்த கதவை உடைத்து விடும் அளவு தட்டிக் கொண்டிருந்தார்கள்.
”அண்ணா கதவை திறண்ணா” என ஜெய்யின் நண்பன் விக்ரம் கத்தினான். மற்றவனோ அன்று ரிலீசான படையப்பா படத்தில் வந்த பாடலை பாட அதற்கு மற்றவர்கள் தாளம் போட்டார்கள். ஜெய்யும் அவர்களுடன் கலந்துக் கொண்டு பாடி ஆடினான்.
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கலும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கலும் உனக்கொரு படிக்கல்லப்பா
வெற்றிக் கொடி கட்டு
மலைகளின் முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா....
என அந்த 5 சிறுவர்களும் ஒன்றாக பாடி ஆடி உற்சாகமாக இருக்க அந்நேரம் அந்தக் கடை பக்கத்தில் ஒட்டியிருந்த ஓட்டு வீட்டில் இருந்த சலூன் கடை ஓனர் வெளியே வந்தார் அந்த சிறுவர்களின் ஆட்டத்தைக் கண்டு முதலில் ரசித்துவிட்டு
”டேய் என்னங்கடா இது, இங்க வந்து ஆடறீங்க போங்கடா” என விரட்ட அவர் வந்ததும் அவரை சுற்றி 5 பேரும் நின்றுக் கொண்டார்கள்
”அண்ணா அண்ணா எங்களுக்கு தலைவர் ரஜினி ஹேர் ஸ்டைல் வெட்டி விடுங்கண்ணா அண்ணா வெட்டி விடுண்ணா” என ஆளாளுக்கு கேட்க அவர்களின் கண்களில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு
”படிக்கற வயசுல எதுக்குடா இந்த ஸ்டைல் எல்லாம்”
”அண்ணா ப்ளீஸ் அண்ணா வெட்டி விடுண்ணா” என ஆளாளுக்கு கெஞ்ச அவரோ
”வேணாம்டா உங்க வீட்டுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என கண்டிப்பாகச் சொல்லியும் அவர்களது கெஞ்சல் நின்ற பாடில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் கெஞ்சலில் மனம் இறங்கியவர்
”சரிடா சரி வெட்டி விடறேன் போதுமா” என சொன்னதும் அந்த சிறுவர்களும் ஓவென மகிழ்ச்சியில் கூச்சலிட்டுவிட்டு
”கடை திறங்கண்ணா” என கோரஸாக சொல்ல
”இருடா இப்பதானே விடிஞ்சிருக்கு, கொஞ்ச நேரம் கழிச்சி திறக்கிறேன்” என்றார் வேண்டுமென்றே
“அண்ணா இப்பவே வெட்டிவிடுண்ணா”
”என்னடா அவசரம் உங்களுக்கு”
“படையப்பா படத்துக்கு போகனும்”
“ஏன்டா இன்னிக்கு பள்ளிக்கூடம் இல்லையா”
“நாங்க மட்டம் போட்டுட்டோம்” என ஜெய் சொல்ல
“எது மட்டம் போட்டீங்களா இது தப்பு ஜெய், உன் தாத்தாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா”
“தாத்தாதான் எங்களை படத்துக்கே கூட்டிட்டுப் போறாரு. இப்பதான் முதல் ஆட்டம் ஓடிக்கிட்டு இருக்கு, அடுத்த ஆட்டத்துக்குள்ள நாங்க ரெடியாகி போகனும் சீக்கிரமா முடி வெட்டுண்ணா குளிச்சிட்டு புது ட்ரஸ் போட்டுட்டு படம் பார்க்க போகனும்” என ஜெய் சொல்ல அவனது பேச்சைக் கேட்டுச் சிரித்தவர்
”படிப்புல இப்படி ஆர்வம் காட்டினா நல்லாயிருக்கும்ல”
“எல்லாம் நான் நல்லாதான் படிக்கிறேன் அண்ணா, சீக்கிரமா வெட்டி விடுண்ணா நேரம் ஆகுது” என அவரது கையை பிடித்து இழுத்தான் ஜெய்
”இருடா இருடா பொறு பொறு யப்பா உன்னோட முடியலைடா” என அலுப்பாக சொல்லிக் கொண்டே அவனை விட்டு விலகியவர் கடையின் சாவியை வைத்து ஷட்டர் திறந்தார். முதல் ஆளாக ஜெய் கடைக்குள் ஓட அவனது நண்பர்களும் உள்ளே ஓடினார்கள்.
”ப்பா ஓட்டத்தைப் பாரு, அந்த காலத்தில நானும் இவனுங்களை போலதான் எம்ஜிஆர் படம் வந்தாலே துள்ளி குதிச்சி ஓடுவேன், இப்ப இவனுங்க ஓடறாங்க பரவாயில்லை ஆசைப்பட்டு கேட்கறாங்க வெட்டி விடுவோம்” என மனதுள்