TEN CONTEST 2019 - 20 - Entry # 21
Story Name - En mel undranukkethanai anbadi
Author Name - Sasirekha
Debut writer - No
என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா
முன்னுரை
தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.
Chillzee Reviews
Check out the En mel undranukkethanai anbadi story reviews from our readers.
மதுரை
2000 பேருக்கு மேலேயே மக்கள் கூடும் அளவு அந்த திருமண மண்டபம் இருந்தது, இன்று இளங்கோவனுக்கும் சம்யுக்தாவிற்கும் திருமணம் என மண்டபத்திற்கு வெளியே இருந்த பெரிய ப்ளக்ஸ் போர்டில் இருவரின் முகத்தையும் தனித்தனியாக வட்டத்திற்குள் வைத்து அலங்காரம் செய்திருந்தனர், இங்ஙனம் என்ற இடத்தில் இளங்கோவனின் தந்தை பெயர் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டாரே திருமணத்தை நடத்துகின்றனர். இளங்கோவனின் சொந்த ஊர் மதுரை என்பதால் பெண்ணின் ஊரான சென்னையில் ரிசப்ஷன் வைத்துக் கொண்டு இங்கே திருமணத்தை ஏற்பாடு செய்தார்கள் இரு வீட்டார்.
சம்யுக்தா சென்னையைச் சேர்ந்தவள் அங்கேயே பிறந்து வளர்ந்து அந்த ஊரின் கலாச்சாரத்தில் வாழ்ந்த நவீன யுவதி. திறமைசாலி, தைரியசாலி, பேரழகி, அவளது தந்தை சிவசங்கரனுக்கு சென்னையில் சொந்தமாக 5 அடுக்கில் சம்யுக்தா ஜவுளிக்கடல் என பெயர் பெற்ற ஜவுளிக்கடை உள்ளது, அதில் வரும் வருமானமே அவர்களுக்கு நிறைவாக உள்ளது. இதில் அவர் வெளிநாடுகளுக்கு கூட துணிகளை ஏற்றுமதி செய்தும் அங்கிருந்து துணிகளை இறக்குமதி செய்தும் நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருந்தார், தொழிலில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நியாயமாக வியாபரம் செய்துவந்தார்.
மகள் படித்து முடித்ததும் தனது வியாபாரத்தை சம்யுக்தாதானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து சிறு வயதில் இருந்து அவள் வளர வளர அடிக்கடி ஜவுளிக்கடைக்கு அழைத்துச் செல்வார்.
அவளும் தந்தையுடன் சேர்ந்து வேலையை கற்றுக் கொண்டாள். திறமைசாலியானவள் என்பதால் அவளுக்கு அனைத்தும் விரைவாக புரிந்தது. வளர வளர அவளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சிவசங்கரனுக்கு இல்லாமல் போனது அவளே தந்தையையும் தாயையும் பத்திரமாக பார்த்துக் கொண்டாள். அந்தளவு அவள் பக்குவப்பட்டுவிட்டாள்.
சிவசங்கரனுக்கு ஊருக்குள் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது, அமைதியானவர், நல்லவர் என பெயர் எடுத்தவர். சம்யுக்தா பள்ளி முடித்து கல்லூரிக்குள் நுழையும் போதே அவளுக்காக திருமண வரன்கள் வீடு தேடி வந்தது, மகளின் படிப்பு முடியட்டும் என ஒத்திவைத்தார்.
அவளின் படிப்பு முடிந்ததும் அவரின் அந்தஸ்துக்கு இணையான மாப்பிள்ளையை தேடினார் அதில் இளங்கோவன் கிடைத்தான். இளங்கோவன் மருத்துவர், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்க்கிறவர், ஊருக்குள் அவருக்கு நல்ல பெயர் உண்டு, அப்பா அம்மா மட்டுமே, பிக்கல் பிடுங்கல் இல்லாத அமைதியான வாழ்க்கை, அங்கு சம்யுக்தா மகாராணி போல வாழ்வாள் என நம்பினார் சிவசங்கரன்
இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக உள்ளது ஆனால் இளங்கோவன் மதுரையில் வாழ்கிறவன், அந்த ஒரு குறை மட்டும் இருந்தாலும் இளங்கோவனை அவருக்கு பிடித்திருந்தது, அழகானவன், அமைதியானவன், பண்பாடு நிறைந்தவன், மக்கள் சேவையில் இருப்பவன், இரக்கமுள்ளவன், அதனால் தன் மகளிடம் ஒரு வார்த்தை கூட கேளாமலே திருமணத்தை ஏற்பாடு செய்தார்.
அவளது தாய் சிவரஞ்சனி மட்டும் திருமணத்தை பற்றி மகளிடம் குறைகூற அவளோ
”அப்பா எந்த முடிவெடுத்தாலும் சரியாதான் இருக்கும்மா, ஏன் டென்ஷன் ஆகற கூல்” என்றாள் இயல்பாக
”சரிடி அதுக்காக மாப்பிள்ளை போட்டோ கூடவா நீ பார்க்க மாட்ட”
“கல்யாணத்தன்னிக்கு மாப்பிள்ளையை நேர்லயே பார்த்துக்கிறேன்மா”
”என்னவோ போ சம்யுக்தா, அப்பா மேல இவ்ளோ பாசமா இருக்கே, கண்ணை மூடி அவரை நம்பறியே இதோ போல உன்னை கல்யாணம் செய்துக்கற மாப்பிள்ளை மேலயும் பாசம் வைப்பியா கண்ணை மூடி நம்புவியா“
”அம்மா அப்பாவுக்கு அடுத்துதான் மத்தவங்களை நான் பார்ப்பேன், கல்யாணம் ஆயிட்டா கணவன்ங்கற உரிமையில அன்பு வைக்கலாம், நல்ல மனசு இருந்தா காதலிக்கலாம், கண்ணை மூடி நம்பற அளவுக்கு அவர் இருந்தா கண்டிப்பா அப்பா இடத்தில அவரை வைச்சி நான் பார்ப்பேன்மா”
”அதுசரி மாப்பிள்ளை பேராவது தெரிஞ்சிக்கனும்னு ஆசையிருக்கா, அதுவும் தேவையில்லையா கல்யாணத்தன்னிக்கு பார்த்துக்கலாம்னு இருக்கியா” என ஆதங்கப்பட சம்யுக்தா குறுநகை புரிந்துக் கொண்டே
”சரிம்மா சொல்லு மாப்பிள்ளை பேர் என்ன“
”இளங்கோவன்”
”நல்லாயிருக்கும்மா”
”சம்யுக்தா உண்மையைச் சொல்லு, உனக்கு பிடிச்சாதான் கல்யாணமே, உன் அப்பா அவசரகதியில இந்த கல்யாண ஏற்பாடுகளை செய்றாரு. பையன் வீடு மதுரையாம் அதனால மதுரையில உனக்கு கல்யாணம் அங்கேயேதான் நீ வாழனும்“