கண்ணுக்குள் நீயடி - ராசு
அனைவருக்கும் வணக்கம்.
காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.
பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.
அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ராசு
அத்தியாயம் - 1
"கெட்டிமேளம்.... கெட்டிமேளம்......"
பெரியவர் ஒருவர் உரத்தக் குரல் எழுப்ப, கெட்டி மேளத்துடன் நாதஸ்வர ஓசை சங்கமிக்க, புரோகிதர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதியபடி தாலியை எடுத்து நீட்டினார்.
கல்யாண மாப்பிள்ளை அதை வாங்காமல் வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
"பரத்." தேவிகா அழைக்க சுரணை வரப்பெற்றான்.
நிமிர்ந்து தாயைப் பார்த்தான் ராஜ்பரத்.
அவன் கண்களில் தெரிந்த வலி கண்ட அந்தத் தாய் துடித்துப் போனாள். மகனின் வலியைப் போக்கும் வழி அறியாமல் தவித்துப் போனாள்.
அன்னையின் முகத்தில் தெரிந்த அந்தத் தவிப்பைக் கண்டான். அவளருகே நின்றிருந்த தந்தை ராம்மோகனைப் பார்த்தான்.
அவர் நடந்த எந்தப் பிரச்சினையையும் அறியாதவர். ஒரே மகனின் திருமணம் என்ற மகிழ்ச்சியில் இருந்தார்.
மணமேடை வரை வந்துவிட்ட இந்தத் திருமணத்தை நிறுத்தி அவர்கள் நிம்மதியைக் குலைக்க வேண்டுமா? யாரோ ஒருத்திக்காக அவர்களை ஏன் காயப்படுத்த வேண்டும்?
தேவலோக ரம்பையோ என்று இந்தத் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் எல்லாம் மாய்ந்து போகும் அளவிற்கு அழகுடன் அவனுக்கு மனைவியாவதற்காக பதுமை போல் அருகில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்?
வருங்கால மாமியாரைப் பார்த்தான். சாந்தி பதற்றத்துடன் நின்றிருந்தாள். இந்தத் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற கவலை அவள் முகத்தில் தெரிந்தது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இது இயல்புதானே?
அத்துடன் அவள் அவன் தாய் தேவிகாவின் உயிர்த்தோழி. அவர்கள் நட்பு கெட வேண்டுமா?
தேவிகாவின் விருப்பத்திற்காக அவர்களின் சொந்த பந்தங்களை எல்லாம் கிராமத்திலிருந்து இந்தத் திருமணத்திற்காக அழைத்திருந்தார் ராம்மோகன்.
அவர்கள் கிராமப் பழக்கப்படியே தான் திருமண சடங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கிராமத்தில் மரியாதையோடு தங்களைப் பார்ப்பவர்கள் இந்தத் திருமணம் நின்றால் என்ன நினைப்பார்கள்?
வேறு வழியே இல்லை. தன்னைத் தேற்றிக் கொண்ட ராஜ்பரத் புரோகிதர் நீட்டிய தாலியை சலனமற்று வாங்கினான்.
தாலியைத் தொட்டதும் தானாகவே அவன் மனதில் அவள் முகம் தோன்றியது.
இது அவள் கழுத்தில் ஏற வேண்டிய தாலி அல்லவா? அவளைத்தானே அவன் நேசித்தான். அவளுடன்தானே தன்னுடைய வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள விரும்பினான். ஆனால் அவள் ஒத்து வரவில்லையே. காதலே கூடாது என்று வளர்ந்தவனின் மனதில் காதல் வளர காரணமான அவள் அவனை, அவனுடைய காதலை புறக்கணித்துவிட்டாளே.
அவனை மட்டுமா? அவனுடைய தாய் தேவிகா எப்படிப்பட்டவள்? அவளையும் அல்லவா காயப்படுத்தி அனுப்பினாள். கண்களை மூடினாலே அவள்தானே வந்து நிற்கிறாள்.
கேலியாக அவனைப் பார்த்து சிரித்தாள். பழிப்புக் காட்டினாள். அவன் நிம்மதியைத் தொலைத்து எத்தனை நாட்களாகின்றன?
தலையை உலுக்கி அவள் நினைவை விரட்ட முயன்றான்.
அவள் போக மாட்டேன் என்று குறும்புடன் கண்களை சிமிட்டினாள்.
வேதனையில் கண்களை மூடித் திறந்தான். கண்கள் கலங்கியிருந்தன. பார்ப்போர்க்கு ஓமக்குண்டத்திலிருந்து வரும் புகையினால்தான் அவன் கண்கள் கலங்கியிருக்கின்றன என்று தோன்றும். அவர்களுக்கு அவன் மனம் படும் பாடு பற்றி என்ன தெரியும்?
அவர்களைப் பொறுத்த வரையில் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் கொடி கட்டிப் பறக்கும் ராம்மோகனின் ஒரே வாரிசு அவன். ராஜகுமாரனைப் போன்ற அழகன். உள்நாட்டில் ஓடி ஓடி சம்பாதித்ததுடன் வெளிநாட்டிலும் தங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கி நேரமில்லாமல் வெளிநாடுகளில் பறந்து கொண்டிருந்த ராம்மோகன் இப்போது மகன் திருமணம் என்றுதான் சேர்ந்தாற்போல் சில நாட்கள் உள்நாட்டில் இருக்கிறார்.