TEN CONTEST 2019 - 20 - Entry # 20
Story Name - Enaiyaalum kadhal desam nee thaan
Author Name - Sasirekha
Debut writer - No
எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா
முன்னுரை
நாயகனை கண்ட ஒரு நொடியில் காதல் வயப்படும் நாயகி அவனை தேடி சென்று தன் காதலை அவன்மீது பொழிகிறாள். இதில் நாயகனின் காதலுக்காக ஏங்கும் நாயகிக்கு அவளின் காதல் கிடைத்ததா என்பதே இக்கதையின் கருவாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில்
ஒரு நாள் காலையில் நெல்லையப்பர் வீட்டு முன்பு பஞ்சாயத்து கூடிவிட்டது. அந்த பஞ்சாயத்தில் நெல்லையப்பரின் சொந்தங்கள் அக்கம் பக்கத்தவர்கள் ஊர் பெரியவர்கள் என அனைவரும் கூடியிருந்தனர். அங்கு பஞ்சாயத்து தலைவர்கள் நான்கு பேர் தனியாக சேர்களில் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு இடது பக்கம் நெல்லையப்பரும் காந்திமதியும் இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களின் பக்கத்தில் அவர்களது பேரன்கள் வெற்றிவேல் மற்றும் மாறவர்மன் இரண்டு பேரும் கைகட்டி அமைதியாக நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களுக்கு எதிர்பக்கம் நெல்லையப்பரின் 2 மகன்கள் ஜெகநாதன், கணேசன் மற்றும் அவரின் 2 மகள்களான கௌரி மற்றும் சித்ரா ஆகியோருடன் அவர்களின் குடும்பங்களும் இருந்தன.
இருபக்கமும் இருந்த ஆண்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்றிருந்தனர். இவர்களை வேடிக்கைப் பார்க்கவே அங்கிருந்த மக்களும் கூடியிருந்தனர்.
இதில் பஞ்சாயத்தும் ஆரம்பமானது.
முதலில் பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர் நெல்லையப்பரைப் பார்த்துப் பேசினார்
”அண்ணாச்சி நீங்க இந்தப்பக்கம் எவ்ளோ பெரிய ஆளுன்னு இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும், அப்படிப்பட்ட உங்க குடும்பத்திலேயே இப்படி பஞ்சாயத்து நடக்கும்ன்னு அதுக்கு உங்க மேலயே பிராது வந்ததுன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. உங்க குடும்பத்து சண்டைக்கு நாங்க பஞ்சாயத்து செய்றத நினைச்சா எங்களுக்கு கஷ்டமாயிருக்கு.” என அவர் சொல்லவும் அதற்கு நெல்லையப்பர்
”நியாயம் எல்லாருக்கும் ஒண்ணுதான் பெரியாளா இருந்தா என்ன சின்னாளா இருந்தா என்ன, பஞ்சாயத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம்தான். இத்தனை வருஷமும் நான் எல்லாருக்கும் பஞ்சாயத்து செஞ்சி நல்ல தீர்ப்பு சொன்னேன் இன்னிக்கு எனக்கே வந்திருக்கு இதனால எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, நியாயம் என் பக்கம் இருக்கு நீங்க தைரியமா எந்த கஷ்டமும் சங்கடமும் இல்லாம பஞ்சாயத்தை நடத்துங்க” என்றார் உறுதியாக
அதற்கு பஞ்சாயத்து தலைவர்களில் இன்னொரு அங்கத்தினர் ஒருவர் காந்திமதியைப் பார்த்து பேசினார்
”ஆச்சி நீங்களாவது சொல்லி புரிய வைங்க, உங்க வீட்டுப் பிரச்சனையை வீட்டோட வைச்சிக்கிடுங்க பஞ்சாயத்துக்குன்னு வந்தா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க, நியாயமே இருந்தாலும் உங்க வீட்டு மானம் ஊர் வரைக்கும் வந்து நாலு பேர் சிரிக்கிற மாதிரி இருக்கக்கூடாதுல்ல.
எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள வெச்சி பஞ்சாயத்து பண்றது சரி இப்படி வீட்டு முன்னாடி பஞ்சாயத்து பண்ணா நாளைக்கு மக்கள் மனசுல உங்க வீட்டு மதிப்பும் மரியாதையும் போயிடும்.” என்றார் அழுத்தம் திருத்தமாக அதற்கு காந்திமதியும்
”நியாயம் எந்தப் பக்கம்ன்னு எனக்கு தெரியல, ஆனா நான் வணங்கிற நெல்லையப்பரையும் என் கணவரையும் மனசுல வைச்சிக்கிட்டு நான் இந்தப்பக்கம் இருக்கேன், நீங்க பஞ்சாயத்து நடத்துங்க தீர்ப்பு எந்த பக்கம் இருந்தாலும் நஷ்டம் எனக்குதான் எல்லாத்துக்கும் தயாராதான் நான் வந்திருக்கேன்” என்றார்.
பஞ்சாயத்து தலைவர்களில் 3வது நபர் வெற்றிவேலைப் பார்த்து பேசினார்
”ஏப்பா வெற்றி நீ படிச்ச புள்ள வக்கீலுக்கு வேற படிச்சிருக்க சட்டம் திட்டம் உனக்கே நல்லா தெரியும் நீயும் உன் தாத்தாவோட சேர்ந்து இங்க வரலாமா நீயாவது அவங்ககிட்ட பேசி பிரச்சனையை தீர்த்திருக்கலாமே” என்றார்
அதற்கு வெற்றிவேலும்
”ஐயா சட்டம் எல்லாருக்கும் பொதுதான், கோர்ட்டு வரைக்கும் எதுக்கு போகனும்னுதான் இங்கயே முடிக்கலாம்னு முடிவெடுத்தோம், என் தம்பி மாறவர்மன் நல்லவன் அவன் எந்த தப்பும் செய்யமாட்டான், தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கொடுத்திருக்கான், நீதி