Chillzee KiMo Books - உன் நேசம் என் சுவாசம் - ராசு : Un nesam en suvasam - RaSu

உன் நேசம் என் சுவாசம் - ராசு : Un nesam en suvasam - RaSu
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 17

Story Name - Un nesam en suvasam

Author Name - RaSu

Debut writer - No


உன் நேசம் என் சுவாசம் - ராசு

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ராசு பகிர்ந்திருக்கும் நாவல்.

 

அத்தியாயம் - 1

"கணபதியே  வருவாய் அருள்வாய்

கணபதியே வருவாய் அருள்வாய்

கணபதியே வருவாய்

மனம் மொழி மெய்யாலே

தினம் உன்னைத் துதிக்க

ஆஆஆஆஆஆ......"

 

      பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் கண் விழித்தார் சந்திரமோகன்.   அதிகாலை நேரம் என்பதால் சத்தம் குறைவாக இருந்தாலும் பாடல் தெளிவாகக் கேட்டது.

     காலையில் அந்தப் பாட்டு மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்க புன்னகையுடனே படுக்கையிலிருந்து எழுந்தார்.

     அவருடய மனைவி வேதவள்ளி  பூஜை செய்து கொண்டிருக்கிறாள். அவள்தான் இந்தப் பாடலைப் போட்டிருக்கிறாள். சாம்பிராணிப் புகை வீடு முழுவதும் மணத்தது.

     வேதவள்ளியை நினைத்து அவருடைய புன்னகை விரிந்தது. அவருக்குப் பிடிக்குமே என்று தான் அவள் இந்தப் பாடலை  வைத்திருக்கிறாள்.

     திருமணம் ஆனதிலிருந்தே இப்படித்தான். அவருக்குப் பிடித்தவற்றையே அவள் தனக்கும் பிடித்தமானதாக மாற்றிக் கொண்டாள். அவளுக்கென்று தனிப்பட்டு எந்த விருப்பமும் கிடையாது.

     அவர் அவளை எதற்குமே  கட்டாயப்படுத்தியதில்லை. அதுவே அவருக்குப் பிடித்தவை அவளுக்கும் பிடிக்க காரணமாயிற்று. அதனாலேயே அவள் மீதான காதல் அவருக்கு அதிகமாயிருக்கிறது.

     அவருக்கு முழுமுதற் கடவுளான கணபதியை மிகவும் பிடிக்கும். எந்த வேலையைச் செய்தாலும் கணபதியை மனதில் நினைத்துக் கொண்டேதான் ஆரம்பிப்பார்.

     அது அவருடைய அன்னை திரவியத்தம்மாள் அவருக்குக் கற்றுக் கொடுத்தது. சிறுவயதிலிருந்து பழகிய பழக்கம். இன்றுவரை அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.

     குளியல் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் புத்துணர்ச்சியுடன் வெளியில் வந்தார். அறையை விட்டு வெளியில் சென்றார். அதற்குள் பூஜையை முடித்திருந்த வேதவள்ளி அவரைக் கண்டதும் புன்னகைத்தாள்.

     "என்னங்க எழுந்துட்டீங்களா?"

     "ஆமாம் வேதா."

     " என்ன இன்னிக்கு சீக்கிரமே எழுந்திட்டீங்க?"

     "நீ எழுந்து வந்த உடனே எனக்கும் விழிப்பு வந்துருச்சு-" என்று சொன்னவர் அவளைப் பார்த்து கண்களை சிமிட்டினார்.

     "போங்க." அழகாய் வெட்கப்பட்டவளைப் பார்த்து ரசித்துச் சிரித்தார்.

     "சரி வாங்க. காபி கலந்து தர்றேன்."

     அவள் செல்ல அவரும் பின்னேயே சென்றார்.

     "என்ன சீக்கிரம் சமையலை ஆரம்பிச்சுட்டியா?"

     "ஆமாங்க. நீங்க இன்னிக்கு சீக்கிரம் போகனும்னு சொன்னீங்க. அதோட கேசரி வேணும்னு சொன்னீங்களே?  இட்லி, பொங்கலும் காலையில் சாப்பிட செய்யப் போறேன்."

     ஆவலுடன் சொன்னாள். அவர் இதுநாள் வரைக்கும் எனக்கு அதை சமைத்துக் கொடு, இதை சமைத்துக் கொடு என்று கேட்டதே இல்லை. முதன் முறையாக கேட்டிருக்கிறார். அதுவே அவளது மகிழ்ச்சிக்குக் காரணம்.

     அதுவும் அவர் சும்மா கேசரி வேண்டும் என்று கேட்டதோடு நிற்கவில்லை. அதை எப்படி செய்ய வேண்டும் என்று செய்முறை விளக்கமும் கொடுத்தாரே. அப்படி அவர் விவரிக்கும்போதே கேட்பவர்களுக்கு கேசரியை சாப்பிட வேண்டும் என்று தோன்றிவிடும்.

     அவளுக்கும் அவர் சொன்ன மாதிரியே செய்து கொடுத்து அதை அவர் சாப்பிடும்போது அவர் முகத்தில் வரும் மகிழ்ச்சியைக் காண ஆவல். அவர் வாய்விட்டு பாராட்ட வேண்டும் என்பதில்லை. அவர் ஆவலுடன் சாப்பிடுவதைப் பார்த்தாலே போதும். அவள் மனம் நிறைந்துவிடும். அதை நினைக்கும் போதே அவள் கண்கள் மலர்ந்தன.

     "சரிம்மா. நான் வாக்கிங் போயிட்டு வந்துடுறேன்." சொல்லிக் கொண்டு