Chillzee KiMo Books - கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி : Kadal serum mazhaithuligal - A K. Sakthi

கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி : Kadal serum mazhaithuligal - A K. Sakthi
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 11

Story Name - Kadal serum mazhaithuligal

Author Name - A K. Sakthi

Debut writer - No


கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக A K. சக்தி பகிர்ந்திருக்கும் நாவல்.

 

1.

ஐந்து நிமிடங்களாக ஒரே இடத்தை பார்த்துக்கொண்டு நிற்கும் பாட்டி மஹா லட்சுமியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உமையாள். அவரது மனதிற்குள் என்னென்ன ஓடும் என்பதை அறிந்தவள் அவள்.

கஜா புயலுக்கு முன்பாக இந்த இடம் எவ்வளவு பசுமையாக இருக்கும். வாழையும், தென்னையும், மாவும் பல ஏக்கர்களாக விரிந்திருக்கும். அந்த பசுமைக்குள்தான் அவர்களது வீடிருந்தது.

அந்த சமயத்தில்தான் உமையாள் வேலையில் சேர்ந்திருந்தாள். அம்மா அருணாவும் அவளும் சென்னையில் இருந்தனர். அம்மாவும் ஆசிரியை பணியில் இருந்தார், பாட்டி மஹாலட்சுமியும் அவருக்குத் துணையாக தோட்டத்தில் வேலை செய்யும் இரண்டு குடும்பங்களும் இருந்தன.

எல்லாம் புயல் வரும் வரைக்கும்தான். ஒரு சிறிய சமஸ்தானத்தின் ராணியாக இருந்த பாட்டி தொய்ந்து கிடந்ததை அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அப்பொழுதுதான் பார்த்தாள்.

அவளும், அவளது அம்மாவும் இங்கு வந்தபோது, வீழ்ந்து கிடந்த பெரு மரங்களில் ஒன்றாகத்தான் அவர் கட்டிலில் கிடந்தார். அதுவரை அந்த இடத்தைவிட்டு எங்கும்  நகராதவரை வற்புறுத்தி சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இதோ இரண்டரை வருடங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தவர் ஒவ்வொரு இடமாக உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு வருகிறார்.

சில இடங்களில் வெறித்து நிற்கிறார். சில இடங்களில் கண்கள் கலங்கப் பார்க்கிறார். அதுவும் பேத்தி பார்த்துவிடக் கூடாது என்பதில்  கவனமாக இருப்பவரைக்  கண்ட உமையாளுக்கு  வழக்கம் போல அவரை கேலி செய்யும் ஆசை எழுத்தான் செய்தது.

“ஹாய் மஹா! என்ன கண்ணு வியர்க்குதா?’ என உதடுகளுக்குள் இருந்து வெளி வந்த வார்த்தைகளை அப்படியே உள்ளே தள்ளிக் கொண்டாள்.

பழைய நினைவுகளில், அதன் தாக்கத்தில் சுழன்று கொண்டிருக்கும் பாட்டியை தொல்லை செய்ய விரும்பாமல் சற்று விலகியே  நின்றாள்.

புதிதாக வைக்கப்பட்டிருந்த தென்னம் பிள்ளைகளை தடவிப் பார்த்தார். பாதி வீழ்ந்து விட்ட மாமரங்களின் புதியக் கிளைகளை கண்கள் மலரப் பார்த்தார்.

எல்லாவற்றையும் புதிதாகப் பார்த்துக் கொண்டு மௌனமாக நிற்பவரின் பின்னால் நின்றவளுக்கும்  பழைய நினைவுகள் வரத்தான் செய்தன.

பெரியப் பெரிய மரங்களின் கொம்புகளில் நூல் ஊஞ்சலைக் கட்டி ஆடிய நாட்கள் நினைவுக்கு வந்தன. அதில் தன்னை உட்கார வைத்து ஆட்டிய அப்பா நினைவுக்கு வந்தார்.

உமையாள் என அவர் அழைக்கும் விதமே தனியாகத்தான் இருக்கும். தன்னுடைய முழு அன்பையும் அந்த ஒற்றை அழைப்பிலேயே காண்பித்து விடுவார், எல்லாமே சில வருடங்கள்தான். அந்த பாசமெல்லாம் கனவாகவேப் போய்விட்டது.

அவளது  பதினைந்து வயதில் அப்பா  இறந்துவிட்டார். அவளது தாத்தாவும் அப்படித்தான் சிறிய வயதுலேயே இறந்துவிட்டதாக எல்லோரும் கூறினார்கள்.

அவளது அப்பாவிற்கு பதினைந்து  வயதாக இருந்தபோதுதான் அவரும் இறந்ததாகப் பேசிக் கொண்டார்கள். ஆண்கள் தங்காத வீடு என ஊரே பேசியது. விவரம் தெரிந்த வயதில் அப்படியான பேச்சைக் கேட்டபோது ஆத்திரமாக வந்தது. மற்றவர்கள் பேசுவதை  அம்மாவும், பாட்டியும் கேட்டுவிட்டால் அன்று முழுவதும் வீடு அமைதியாகவே இருக்கும்.  அம்மாவின் கண்களில் அவ்வப்பொழுது  நீர் நிறைந்து கன்னத்தில் வழியும். யாரும் பார்க்காமல் துடைத்துக் கொள்வார்., பாட்டியும்  மௌனமாக தனது கவலையை அடக்கிக் கொள்வார். இதனைப்  பார்த்துப் பார்த்து வளர்ந்தவளுக்கு அனைவரின்  மீதும் அடக்க முடியாத ஒரு கோபம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

இன்னும் கூட அப்படி யாராவது பேசினால் அடித்துவிடும் அளவிற்குக் கோபம் வரும். அதற்கான் தைரியமும். உருவ அமைப்பும் அவளிடம் உண்டு. அவளது உருவத்தைப் பார்த்தால் அனைவருக்குமே சற்று மிரட்சிதான். மற்றவர்களைவிட சற்று உயரம் கூடுதலானவள். பெண்களைவிட மட்டுமல்ல. ஆண்களையும்  விட சற்று உயரம் அதிகமானவள்தான்.

“டேய்.. நெட்டைக் கொக்கு வராடா” பள்ளியில் மாணவர்கள் கேலி செய்தபோது  சொல்லியவன்  தலையில் ஓங்கிக் கொட்டிவிட்டு முதல் நாளே பள்ளியில் பஞ்சாயத்து வைத்தவள்.

பள்ளியிலிருந்து வீட்டிற்குத் தகவல் போனது. வீட்டிலிருந்து பாட்டிதான் வந்து அழைத்துச் சென்றாள்.