Chillzee KiMo Books - பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1 - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Pandiya Nedunkaviyam - Pagam 1 - Srija Venkatesh

பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1 - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Pandiya Nedunkaviyam - Pagam 1 - Srija Venkatesh
 

பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1 - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி....

நம் தமிழ் நாட்டில் சோழ அரசர்கள் பலரின் வரலாறுகள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவர்களை விட பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டியர்களைப் பற்றி அதிகமான நூல்கள் இல்லை. தகவல் இன்மை ஒரு காரணமாக இருக்கலாம். "பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1" என்ற பெயரோடு முதல் பாகமாக உங்கள் கரங்களில் தவழும் இந்த நாவல் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற ஒரு வீரத் தமிழனின் கற்பனை கலந்த உண்மை வரலாறு.

"தலையாலங்கனத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்" என்ற பெயர் தமிழ் படித்தவர்களுக்கு ஓரளவு நினைவிருக்கலாம். அவனது கதையை அவன் பெற்ற வெற்றியை, அவன் காதலி செண்பகக் குழலியின் தியாகத்தைப் பொற்றும் விதமாக எழுதப்பட்டது தான் பாண்டிய நெடுங்காவியம். இது மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது.

கண்ணகி மதுரையை எரித்த பிறகு, நீதி தவறி விட்டோம் என மன்னன் நெடுஞ்செழியன் மனைவியோடு உயிரை விட்ட பிறகு அவர்களது செல்வன், இளவசரன் அரசனானான். அந்த நிலையில் ஏழு அரசர்கள் சேர்ந்து அவன் மீது படையெடுத்து வந்தனர். அவனோ சிறு பிள்ளை. எழுவர் சேர்ந்து வந்தால் என்ன செய்வான் பாவம்? தலை நகரின் நிலையோ பரிதாபம். வழி காட்ட தந்தை இல்லை. இந்த நிலையில் அவன் மனம் சோர்ந்தனா? நிச்சயம் இல்லை. சங்கப்புலவர்கள் முன்னிலையில் வெஞ்சினம் கூறினான். நான் இந்த அற்பர்களை ஓட ஓட விரட்டாவிட்டால் இனி புலவர்கள் என் நாட்டைப் புகழ்ந்து பாட வேண்டாம் என சூளுரைத்தான்.

அப்படிப்பட்ட 21 வயது இளைஞனின் கதை தான் பாண்டிய நெடுங்காவியம். அவனது காதலி செண்பகக் குழலி, நண்பன் வில்லவன் கோதை என பல கதாபாத்திரங்கள் கற்பனை என்றாலும் வெற்றிவேற் செழியர், அரசர் பட்டத்தரசி போன்றவர்கள் பல காலம் முன்பாக நம்மோடு ஊடாடியவர்கள் தான்.

எந்தச் சதிக்கும் ஆரம்பம் என ஒன்று உண்டு. அதனைத் தொடங்கி வைப்பவன் குவளை மாறன். பாண்டிய நாட்டைச் சேர்ந்த அவன் பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிக்க சபதமிட்டு தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டான். அவனது தந்திரங்கள், கொடூரங்கள் இவற்றை பாண்டிய இளவரசன் முறியடித்தானா? குவளை மாறன் இப்படிப்ப்பட்ட பயங்கரமான சபதம் பூண என்ன காரணம்?

இவற்றை பாண்டிய நெடுங்காவியம் மூன்று பாகங்களும் படித்தால் தெளிவாகப் புரியும். கலைஞர் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயில் அருகே இருக்கும் மாங்குடி என்ற ஊரில் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் என்பவருக்கு நினைவுத்தூண் எழுப்பியிருக்கிறார். அவரே இளவரசன் நெடுஞ்செழியனின் ஆசான் எனக் கொடுத்துள்ளேன். மாங்குடி மருதனார் தான் அப்போதைய தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர். அவரோடு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறை கூவிய புலவர் கணியன் பூங்குன்றனாரும் ஒரு கதாபாத்திரமாக உலாவுகிறார் இந்தக் காவியத்தில். அதோடு அந்நாட்களில் நம் தமிழ் மண்ணில் நடைபெற்ற வியாபாரங்கள், வெளி நாட்டவரின் வருகை, அவர்களின் நடவடிக்கைகள், நம் மக்களின் பண்பு என பல விஷயங்களையும் ஆராய்ந்து தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய காவியம் இது. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே!

 

 

கூடல் மாநகர்ப் படலம்.

 

அத்தியாயம் 1:

 

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழகம் செழித்தோங்கி இருந்த காலகட்டம். பண்பாடு நாகரீகம், மொழி, இலக்கணம் என மற்ற மக்களுக்கு வழிகாட்டியாத் திகழ்ந்தது அன்னை தமிழ்நாடு. பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள் என மூவேந்தர்களும் அவரவர்க்கான பகுதியை ஆண்டுவந்தனர். அது தவிர பல குறு சிறு நாடுகளும் இருந்தன. அவற்றை சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். தமிழ் மொழியே எங்கும் பேசப்பட்டு வந்தது. அன்றைய தமிழகம் வட வேங்கடம் முதல் தென்குமரி வரை பரந்து பட்டிருந்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய தென் மொழிகள் தோன்றியிராத காலத்தில் தொடங்குகிறது நமது காவியம்.

 

மொத்தத்தில் தமிழ் கூறும் நல்லுலகமே வளமையாக இருந்தாலும் பாண்டிய நாடு வணிகத்தில் குறிப்பாக கடல் கடந்த வணிகத்தில் ஓங்கியிருந்தது. அதனால் செல்வம் கொழிக்கும் நாடாக விளங்கியது. செல்வச் செழிப்பும், புகழும் இருந்தால் எதிரிகள் உருவாவது இயற்கை அல்லவா? பாண்டிய மன்னனது புகழும், பாண்டிய நாட்டின் புகழும் கடல் கடந்தும், நமது நாட்டின் வட பகுதியில் இருக்கும் மகத நாடு வரையிலும் பரவியிருந்தன. பெரும் புலவர்கள் பாண்டிய நாட்டின் வளத்தையும், அதன் மக்களின் மாண்பையும், மன்னரின் நீதி தவறாத செங்கோலையும் புகழ்ந்து காலத்தால் அழியாத பாடல்கள் புனைந்தனர். அதனால் பொறாமை கொண்ட மற்ற தமிழ் மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்ற சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் சீரோடும் சிறப்போடும் மக்களின் மேன்மையை கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள்.  கூடல் மா நகர் என்றும் நான்மாடக் கூடல் என்றும் புகழப்பட்ட மதுரையே அவர்களின் தலைநகரமாக இருந்தது. கொற்கை, தொண்டி என்ற இரு துறைமுகங்கள் வெளி நாட்டு வணிகத்துக்குப் பாலம் அமைத்தன. அதிலும் குறிப்பாக கொற்கை முத்துக்கள் அனைத்து நாட்டு மக்களின் மனதையும் கொள்ளை கொண்டது. முத்துக்களை வாங்குவதற்காக யவனம், சீனம், மெசபடோமியா, ரோமாபுரி போன்ற நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் குதிரைகளையும், வாசனை திரவியங்களையும் தாங்கி வந்தன. பாண்டிய நாட்டிலிருந்து முத்துக்கள், சந்தனம், மிளகு, ஏலக்காய், மயிலிறகு, புனுகு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

 

இதனால் பணப்புழக்கமும் பொருளாதார நிலையும் மிகவும் உயர்ந்து காணப்பட்டது பாண்டிய நாட்டில். வளமான நாடு, நிலையான நேர்மையான ஆட்சி, அமைதியான வாழ்வு என்று மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் வீரம் மிகுந்தவன். அதனால் பாண்டிய நாட்டைச் சுற்றியிருந்த சோழ, சேர நாட்டு மன்னர்கள் போர் தொடுக்கத் தயங்கி வாளாயிருந்தனர். மற்ற குறு நில மன்னர்களான திதியன், எருமையூரன், பொருநன், எழினி, இருங்கோ வேண்மான் என்பவர்களும் பாண்டிய நாட்டின் மீதும் பாண்டிய மன்னரின் மீதும் மிகுந்த காழ்ப்புணர்வு கொண்டிருந்தனர். செல்வ வளத்திலும், வீரத்திலும், அறிவாற்றலிலும் சிறந்து விளங்கிய பாண்டிய நாட்டை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதே ஒவ்வொரு நாட்டு மன்னனின் கனவாக இருந்தது.

 

அந்த சூழ்நிலையில் தான் பாண்டிய நாட்டில் ஆண்டுக்கொரு  முறை நடக்கும் பொங்கும் பூநறும்புனல் விழாவும், இறையனார் சொக்கருக்கான திருவாதிரைத் திருநாளும் மிகவும் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. அவற்றைக் காண பெருந்திரளான மக்கள் வெளியூர்களிருந்து வந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்கும் உணவு உண்பதற்கும் வேண்டிய விடுதிகளும், அடிசிற் சாலைகளும் நிறுவப்பட்டிருந்தன. ஆனால் மதுரை வாழ் மக்களின் விருந்தோம்பல் பலரை அடிசிற்சாலைகளை நாட விடாமல் செய்தது. மக்கள் வீடு தோறும் மோர்ப்பந்தலும், தண்ணீர்ப் பந்தலும் அமைத்து வழிப்போக்கர்களின் தாகம் தீர்த்தனர். வெளி நாட்டு வணிகரும் கூட அங்கு வந்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர்.

 

மாலை மயங்கும் நேரம். காற்று சிலு சிலுவென வீசிக் கொண்டிருந்தது. பீடக் கோயில்களில் விளக்கேற்றினர் மகளிர். சிலர் தங்கள் வீட்டு வாசலில் உள்ள விளக்குப் பிறைகளில் கை விளக்குகளை கொண்டு வந்து வைத்தனர். மகிழ்ச்சியும், குதூகலமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்த வேளையில் மதுரை மா நகர வீதிகளில்