வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 09

Story Name - Vaanamennum veedhiyile....

Author Name - Srija Venkatesh

Debut writer - No


வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்திருக்கும் நாவல்.

 

அத்தியாயம் 1:

 

சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்திருந்த சிவம் என்ற அந்த வீட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் கூடியிருந்தனர் கூடத்தில். தொழிலதிபர் சிவ சிதம்பரத்தின் வீடு அது. நடு நாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு அரசனைப் போல அவர் அமர்ந்திருந்தார். பக்கத்தில் அவரது மனைவி உமாராணி. சுருக்கமாக ராணி. சிவ சிதம்பரம் உமா ராணி தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஆசைக்கு ஒரே ஒரு மகளும் தான். மகள் சுப்ரியாவை மில் அதிபர் ஒருவருக்குக் கட்டிக்கொடுத்து விட்டார்கள். அவளும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து பிறந்த வீட்டில் சீராடிவிட்டு போவாள். முதல் மகனாக சிவ குருநாதனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள். இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். அவரது மனைவி காயத்திரி தேவி உள்ளூர்க் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். தான் படித்தவள் என்ற கர்வம் அவளுக்கு எப்போதுமே உண்டு. இப்போது முக்கியமாக அவர்கள் கூடியிருப்பது மூன்றாவது மகன் சிவராமின் திருமணத்தைக் குறித்துப் பேசத்தான். இரண்டாவது மகனான சிவச் சந்திரனுக்கும் மணமாகவில்லை. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசப் போவதும் இல்லை. அவர்களுக்கு அதைப் பற்றிய கவலையும் இல்லை. காரணம் சிவச் சந்திரன் தான் தனக்கு என்று சொந்தமாக எந்த தொழிலும் செய்யாமல் அண்ணன் தம்பி மற்றும் அப்பாவின் அலுவலகங்களுக்கு போய் வந்து சிலச் சில வேலைகளைச் செய்து வந்தான். அவன் மீது யாருக்கும் அத்தனை மதிப்பு இல்லை. காரணம் அவன் படிப்பிலும் அத்தனை  கெட்டிக்காரனில்லை. வெறும் டிகிரியைக் கூட அவனால் முடிக்க முடியவில்லை. குருவும், ராமனும் வெளி நடு போய் எம் பி ஏ படித்து வந்து சொந்தமாக தொழில் தொடங்கி லாபகரமாக நடத்தியும் வரும் போது இதைப் பற்றிய சிந்தனைகள் எதுவுமே இல்லாதவன் சந்திரன் ஸ்ருக்கமாக சந்துரு.

 

தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார் சிவசிதம்பரம்.

 

"ராமுக்குக் கல்யாணம் கூடி வருது. பொண்ணு யாருன்னா சென்னையில பிரபல துணிக்கடை அதிபரோட ஒரே பொண்ணு. பேரு மானசா. அவளும் நிறையப்படிச்சிருக்கா. ஃபோட்டோ பார்த்துட்டேன். ரொம்ப நல்லா இருக்கா. சம்மதம்னு சொல்லிட்டேன். வர மாசம் 8ஆம் தேதி கல்யாணம்" என்றார்.

 

ராமின் முகம் சுருங்கியது.

 

"பொண்ணைப் பார்க்காமே பேசாமே நான் எப்படி கல்யாணம் செய்துக்கமுடியும்?" என்றான் கோபமான குரலில்.

 

"என்ன தம்பி நீங்க? உங்கண்ணன் என்னை கல்யாணத்தன்னிக்குத்தானே பார்த்தாரு? நாங்க இப்ப நல்லா இல்லையா?" என்றாள் அண்ணி காயத்ரி.

 

"சும்மா பேசாதீங்க அண்ணி. உங்க அக்கா கல்யாணத்துல வெச்சு எங்க எல்லாருக்கும் உங்களைக் காட்டினாரு அப்பா. ஆனா இப்ப பொண்ணு எப்படி என்ன ஏதுன்னு எங்கிட்ட ஒரு விவரமும் சொல்லவே இல்லையே? அதுக்குள்ள கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ணியாச்சு. நான் ஒத்துக்கவே மாட்டேன்" என்றான் ராம் மீண்டும் அழுத்தமாக.

 

"ஏண்டா அவசரப்படுற? நாளைக்கே அந்தப் பொண்ணு ஒரு கான்ஃபிரென்சுக்காக வருது. அப்பப் போயிப் பாரு. பேசு. உன் நம்பர் கொடுத்திருக்கேன். அவளே கூப்பிடுவா. அப்புறம் என்ன?" என்றார் சிவ சிதம்பரம்.

 

சரியாக அதே நேரம் ஃபோன் ஒலிக்க எடுத்துப் பேசியவன் கண்களில் ஆயிரம் ஆசைகள், கனவுகள்.

 

"அப்பா! அந்தப் பொண்ணு தான். நான் என் ரூமுல போயி பேசிட்டு வரேன்" என்று கழன்று கொண்டான். சிரித்தனர் குருவும், காயத்திரியும்.  அவர்களோடு இணைந்து நகைத்தார் சிவ சிதம்பரம். அவரது பார்வை மனவி ராணி மேல் விழுந்தது. சற்றே இறுக்கமாக இருந்தது அந்த முகம்.

 

"என்ன ராணி? மகனுக்குக் கல்யாணம் பேசியிருக்கேன். உன் முகத்துல