யாது வரினும்.. எவ்வாறாயினும் - சாகம்பரி
நித்திலா… பெற்றோரை இழந்திருந்தாலும்… தாத்தாவின் அரவணைப்பில் தாய்வழி உறவுகளின் அன்பில் வளர்ந்தவள். உறவுகளின் அருகாமையையும் அருமையையும் போற்றுபவள்.
சக்திமித்ரன் பெற்றோர் இருந்தும் காலத்தின் கோலத்தால் தனித்து விடப்பட்டவன். உறவுகளில் உண்மை இல்லை என்று நினைப்பவன்.
சக்திமித்ரன்… நித்திலா இருவரும் காதலித்து திருமணத்தில் இணைந்து பின் பிரிந்து விடுகிறார்கள். பின்னாளில் மனைவியின் நிலை புரிந்து அவனுடைய தவறான முடிவுகளால் நித்திலா இழந்த இனிமையான உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறான்.
உறவுகளின் மேன்மை புரிந்து யாருடைய குறுக்கீடும் இன்றி, யாருடைய உதவியும் இன்றி அவன் அவளுக்காக அனைத்து உறவுகளையும் சேர்த்து மாலையாக கோர்த்தெடுக்கப்போகிறான். அந்த முயற்சியில் அவன் வெற்றி பெறுவானா?
அன்புடன்
சாகம்பரி
யாது வரினும்.. எவ்வாறாயினும்-1
வனம் விட்டு வெளி வந்த மான் ஒன்று கலங்கி நிற்குதடி
அது அன்னை பூமி விட்டு வந்து பட்டபாடு ஒரு கோடியடி
வானம் தொலைத்த பறவை ஒன்று தன் உறவு தேடுதடி
அன்பு தொலைத்த நெஞ்சமிங்கு மூச்செடுக்க கலங்குதடி
நாடியது ஓடியது தேடியது கிடைத்திடுமோ என் செல்லமே!
கதிரவனின் ஒளி முற்றிலும் வலுபெறும்முன் பசி கொண்ட பறவைகள் இரைதேடி விரைந்து பறந்தன. செண்டை மேளம் முழங்கி…. மணியொலித்து, அந்த மலையடிவார கோவிலில் காலைநேர ஆரத்தி பூஜை நடைபெறுவதை கோவிலுக்கு வெளியே இருப்பவர்களையும் உணர வைத்தன. கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பூஜை பொருட்களை தரும் கடைகள் வேகம் பெற்றன.
பரபரப்பான அந்த கூட்டத்தை விட்டு, சற்று தள்ளியிருந்த மைதானத்தில், தேவலோகத்திலிருந்து வந்த புஷ்பக விமானம் போல நளினமாக மிதந்து வந்து நின்ற சிவப்பு நிற ஃபெராரியை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. வெகுதூரம் ஓடிவந்த களைப்பு தீர அந்த கார் மர நிழலில் மூச்செடுத்து நின்றது.
என்ன காரணத்தினாலோ காரிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. அதனை ஓட்டிவந்தவன் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு கூரிய பார்வையுடன் அமர்ந்திருந்ததைப் பார்க்கும்போது அவன் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல தோன்றியது..
அவன் சக்திமித்ரன்… மும்பையை சேர்ந்தவன். அவனுடைய தாத்தாவின் பூர்வீகம் தமிழ்நாடுதான். கட்டிடவியல் படித்து மும்பை புறநகர் பகுதியில் டைல்ஸ் மேனுஃபாக்சரிங் தொழிற்சாலை வைத்திருக்கிறான். இங்கே என்ன செய்கிறான்?.
அவன் அவனுடைய வாழ்க்கையை தேடி வந்திருக்கிறான். என்றைக்கோ கையை விட்டுத் தொலைந்து போனதை மீட்க வந்திருக்கிறான். அது அவனும் அவளுமாக வாழ்ந்த காவியம். புலியும் மானுமாகவோ, புலியும் சிங்கமுமாகவோ அல்லது நரியும் முயலுமாகவோ வாழ்ந்த கதையல்ல. மானும் மானும் சேர்ந்து படைத்த அழகிய ஓவியமாகும். எப்பாடு பட்டாவது அந்த வாழ்க்கையை மீட்டெடுத்து உயிர்மூச்செடுத்து வாழப்போகிறான். ஏனெனில் அவனுடைய வாழ்வின் அர்த்தம் அவளிடம்தான் உள்ளது என்பது மிகத்தெளிவாக அவனுக்குப் புரிந்திருந்தது.
நீண்ட காத்திருத்தலினால் மணித்துளிகள் யுகங்களாக மறைந்த போது, பூஜை முடிந்து பக்தர் கூட்டம் வெளியே வர ஆரம்பித்தது. ஓரளவிற்கு கூட்டம் கலைந்து சென்றபின், ஆகாய வண்ண கைத்தறி புடவை அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி வெளியே வருவது தெரிந்தது. மெல்ல அவள் நடை பயின்று நிலத்தில் கவனமாக கால் பதித்து வரும்போது ஒரு விஷயம் எளிதில் புலப்பட்டது.
அவள் ஒரு கர்ப்பிணி!. பின்னிறைவு மாதத்தில் இருந்தாள் என்பதை மேடிட்டிருந்த வயிறு பறைசாற்றியது. காலை வெயிலின் தாக்கத்தால் முகத்தில் பூத்திருந்த வியர்வையை சேலை தலைப்பால் ஒற்றியபடி அவள் நடந்தாள். காலை வெயிலின் மஞ்சள் கதிர்கள் ஒரு தூரிகை போல் பரவி அவளுடைய வெளுத்த மேனியின் மேல் தங்க நிறத்தை தீட்டியது.
திடீரென உயிர் பெற்றது போல ஃபெராரியிலும் அசைவு ஏற்பட்டது. கதவினைத் திறந்து கொண்டு இறங்கிய சக்தி மித்ரன் பிங்க் வண்ணச் சட்டையும் நீலநிற ஜீன்ஸும் அணிந்திருந்தான். தொலைவில் தேர் போல் அசைந்து நடந்து வந்து கொண்டிருந்த அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் கலக்கமும் கண்களில் தெளிவின்மையும் தென்பட்டன. கலங்கிய கண்கள் காட்சியை மறைத்துவிடுமோ என்ற அச்சத்தில் கண்களை விரைவாக மூடிமூடித் திறந்தான். தளர்வடைந்த தோள்களை உயர்த்தி நிமிர்ந்ததில், சராசரிக்கும் அதிகமான அவனது உயரம் மேலும் கூடியது.
நித்திலா! பெருமூச்செடுத்து இதயத்திலிருந்து மெல்லிய குரலில் உச்சரித்தான். அந்த குரலின் சோகம் தென்றலாக சென்று அவளை தொட்டு வருடாதோ?
.அவளைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது?. கண்களில் கரித்து கொண்டிருந்த கண்ணீர் கன்னத்தின் வழியே இறங்கியது. அவனுக்கு ஒரு ஜென்மம் முடிந்து அடுத்த ஜென்மம் வந்ததுபோல் இருந்தது.
அதிலும் அவளின் அந்த கர்ப்பவதி கோலம்… அவளை அழகாக கண்ணிறைத்து காட்டியது. ஒன்பது மாதங்கள் முடிந்து இருக்கும்…. அவன் வாழ்வில் அவன் தவறவிட்ட நாட்கள், யுகங்களாக அவன் அதைக் கடத்தியிருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நொடியும் சந்தோஷ மழையில் நனைந்திருப்பான். அடுத்தடுத்து அவன் செய்த முட்டாள்தனங்களின் விளைவாக விலை மதிக்க முடியாத பலவற்றை இழந்துவிட்டான், பிரிவின் வேதனை பலவற்றை வலிக்க வலிக்க அனுபவித்து விட்டான்.
வினோதமான இந்த வாழ்க்கை பயணத்தில் அவன் இழந்தது அதிகம், அவன்