Chillzee KiMo Books - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி : Monathirukkum moongil vanam - Sagampari

மோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி : Monathirukkum moongil vanam - Sagampari
 

மோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி

மூங்கில் வனத்திற்கு மட்டும் என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!. சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.

ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது… இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?

துரோகத்தாலும் சதியாலும் உயிர் துறந்து மௌனமாக மாறிய ஒரு தேவதையின் கதை இது. நித்திலவல்லி மீண்டும் மானஸாவாக பிறப்பெடுத்தது பழி தீர்க்கவா… வேணுமாறன் மீது விழுந்த பழியை துடைக்கவா?. கதையை படிக்கலாமா?

அன்புடன்

சாகம்பரி

 

மோனத்திருக்கும் மூங்கில் வனம்-1

‘முகுந்தன் கார்மெண்ட்ஸ்’ என்று தன் பெயரை அறிவித்துக் கொண்ட அந்த ஆகாய வண்ண கட்டிடம் உயர்ந்து நின்று விண்ணுடன் கலந்ததுபோல் இருந்தது. பெயரிலிருந்தே  தெரிகிறதே, அது ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம்.   கோயம்புத்தூர் அருகே அமைந்து இருந்தது.

வேணுகௌதம்- அதன்  மேனேஜிங் டைரக்டர், ட்ரேடர்ஸுடன் ஒரு மீட்டிங்கை முடித்து விட்டு குன்னூர் செல்ல அவசரமாக கிளம்பினான், . அவனுக்காக ஒரு கருநீல லான்சர் வாசலில் காத்திருந்தது.

காரில் ஏறியவனின் கண்ணில் அந்த பட்டாம்பூச்சி பட்டது. சிவப்பும் கறுப்பும் கலந்த சற்றே பெரிய வண்ணத்துப் பூச்சி! மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வகை பட்டாம்பூச்சியை அவன் ஒருபோதும் ரசிப்பதேயில்லை. நல்ல செய்திகளின் தூதுவனாக அது வருவதில்லை என்ற ஆழ்மன குறிப்புதான் அவனை கவலைப்பட வைக்கிறது. உண்மையில் அது ஒரு குற்றஉணர்வை அவனுள் கிளப்புவதால் தோன்றும் கவலைதான்…

அது அவனுடைய பள்ளிகாலத்து சம்பவம். ஒரு நாள் மாலை, வகுப்பிலிருந்து வெளிவந்து மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருக்கும்போது அதனை பார்த்தான். மாடியின் கண்ணாடி ஜன்னல் அருகே அது சிறகடித்துக் கொண்டிருந்தது. அதற்கு வெளியே போகும் வழி தெரியவில்லை போலும். மீண்டும் மீண்டும் ஜன்னல் கண்ணாடியில் மோதி விழுந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழியே அதனுடைய பார்வையில் பட்ட மஞ்சள் நிற பூவிற்கும் தனக்கும் இடையில் இருந்த கண்ணாடி தடுப்பை உணராமல் மலரை நோக்கி பறக்க முயற்சித்து மோதி மோதி கீழே விழுந்து கொண்டிருந்தது.

இதனை புரிந்து கொண்ட சிறுவன் கௌதமிற்கு ஒரே வேடிக்கையாக இருந்தது. முட்டாள் பட்டர்ஃப்ளை என்று கூவியழைத்தான். எப்படியாவது வழி கண்டுபிடித்து வெளியேறுமா என்று வேடிக்கை பார்த்தபோது அவனை அழைத்து செல்ல கார் வந்ததால் கிளம்பி விட்டான்.

மறுநாள் பள்ளிக்கு சென்றபோது அந்த ஜன்னலை கவனித்தால்… அது இறந்து கிடந்தது. ஐயோவென்று அவனுக்கு நெஞ்சு படபடத்தது.   நேற்று அதனை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றி இருந்தால் இன்றைக்கு அது உயிருடன் இருந்திருக்குமே… பூக்களின் தேனை குடித்து மகிழ்ந்திருக்கும்… இன்னும் கொஞ்ச நாட்கள் அது வாழ்ந்திருக்குமே… என்று தோன்றியது…

இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றி வலுபெற்று அந்த வண்ணத்து பூச்சியின் மறைவிற்கு அவன்தான் காரணம் என்ற எண்ணம் மனதில் பதிந்து விட்டது. எப்போதெல்லாம் அந்த வகை பட்டர்ஃப்ளை அவன் கண்ணில்படுகிறதோ அது அவனை ஒரு கொலையாளி என்றே குற்றம் சுமத்துவது போல தோன்ற ஆரம்பித்தது.

அதனால் அதற்கு ஒரு ஹூடூ இமேஜ் தந்து விட்டான். அதனுடைய பிரசென்ஸ் அடுத்து அவன் மனதிற்கு விரும்பாத சம்பவம்  ஏதோ ஒன்று நடக்கப் போகிறதென்று ஹிண்ட் எடுத்துக் கொள்வான்.  இப்படித்தான் இந்த வண்ணத்துப் பூச்சி கண்ணில்பட்ட ஒருநாள் அண்ணன் சியாமளப்ரியன் வீட்டை விட்டு வெளியேறினான். ஒன்றுக்கும் உதவாத காதல் என்ற ஒரு கனவை துரத்திக் கொண்டு சொத்துபத்து சொந்தபந்தம் அத்தனையையும் விட்டுவிட்டு போனான்.

இதேபோன்ற ஒரு வண்ணத்துபூச்சியின் பிரவேச நாளில்தான் மோனாவுடனான அவன் திருமணம் ப்ரேக் ஆனது.

 இதேபோன்ற ஒரு வண்ணத்துபூச்சி விசிட் செய்த நாளில்தான்…  அவனுடைய தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவன் நிறுவன பொறுப்பை ஏற்கும்படியாகி விட்டது!

. அக்வாகல்சர் படித்து ஸ்கூபா டைவிங் செய்து கடலடியை ஆராயும் த்ரில்லிங்கை விரும்பிய அவன் பொறுப்புகளை ஏற்று சாதாரண மனிதனாக ஆனான். இப்போது நான்கு வயது ஷாலினிக்கு தந்தையாக இருக்கிறான்… ஜானி ஜானி… யெஸ் பப்பா சொல்லிக் கொண்டு…

 இன்னும் எத்தனையோ..

இப்போது இந்த கருஞ்சிவப்பு பட்டர்ஃப்ளையின் விசிட் என்ன சேதியை கொண்டு வருமோ? மனதிற்கு பிடிக்காத எதுவும் நடக்கக் கூடாது…

காரை விரைவாக ஓட்டினான்…. இன்னும் இரண்டு மணி நேரத்தில்  அவன் குன்னூரில் ஒருவரை சந்திக்க வேண்டும். அவன் அம்மா வாசுகிக்கு உடல் நலமில்லை. மலைப்பிரதேசத்தில் சிறிது காலம் வசித்து இயற்கை காற்றை சுவாசித்து வந்தால் நல்லது என்று மருத்துவர் சொன்னதால், குன்னூரில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கப் போகிறான். அது தொடர்பான பேச்சு வார்த்தைக்காகவே செல்கிறான். அதை நல்லபடியாக முடிக்க வேண்டும்.

மலைப்பிரதேசம் என்றாலும் வளைவுகளில் சீரான வேகத்தில் காரை ஓட்டி திட்டமிட்டபடி குன்னூரை அடைந்து விட்டான். ஆனால் அவனை சந்திப்பதற்காக குறிப்பிட்டிருந்த இடம் ஒரு எஸ்டேட் பங்களா… அதனை தேட வேண்டியதாகி விட்டது. அது ஊருக்கு வெளியே இருந்ததாலும்… மலைப்பாதைகள் பல்வேறு கிளைகளாக பிரிந்து கிரிஸ்டல்மேய்ஸ் போன்ற ஒரு குழப்பத்தை மேப்பில் உருவாகிவிட்டது. வழிகேட்கவும் யாருமில்லாத அத்துவானக் காட்டில் இருள் சூழ ஆரம்பித்த மாலை வேளையில் தனியாக