சீர்மிகு சித்திரை பிறப்பு - ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஆங்கில ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதத்துக்கு உரிய சிறப்பம்சங்கள், தமிழ்ப்புத்தாண்டு, அட்சய திருதியை மற்றும் சித்திர குப்த விரதம் ஆகியவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகைகள் பிறந்த காரணம், இவற்றை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு பூஜை முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சிகரம் வைத்தாற் போல தமிழ்ப் புத்தாண்டன்று செய்ய வேண்டிய உணவு வகைகள், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகள் எனஆன்மீகப் புத்தகத்தோடு, தெய்வீகமான சமையற்கலையையும் இணைத்து செய்யப்பட்ட முதல் முயற்சி " சீர் மிகு சித்திரை பிறப்பு" புத்தகம் .
ஆண்டுக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்பது நமது முன்னோர்களின் கணக்கு. உலகத்தில் அனைத்து வகையான மக்களும் அதனையே தான் கடைப்பிடிக்கின்றனர். அவர்களுக்கு நமது முன்னோர்கள் தான் முன்னோடி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெறுமே 30 அல்லது 31 நாட்களைக் கொண்ட மாதங்களை அவர்கள் உருவாக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் சூரியனது நகர்வை வைத்து அறிவியல் ரீதியாகக் கணக்கிடப்பட்டது. . ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ அதற்குத் தகுந்தாற் போல நாட்களைக் கணித்தார்கள். முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் நுழையும் மாதமே சித்திரை. அதனாலேயே அதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கில் கொள்ளப்பட்டது.
ஆண்டின் முதல் மாதம் என்பது மட்டுமே சித்திரையின் சிறப்பல்ல. வசந்த காலமும், இளவேனிற்காலமும் கைகோர்க்கும் பருவமே சித்திரை. இந்த மாதத்தில் பூக்களும், கனிகளும் பூத்துக்கனிந்து மணம் வீசும். காய்கறிகளின் விளைச்சலும் மிக நன்றாக இருக்கும். மொத்தத்தில் சொல்லப்போனால் எங்கும் செழுமை எங்கும் மங்கலம் தங்குவதே சித்திரையின் சிறப்பு. சூரியனது ஒளிக்கதிர்களின் பிரகாசம் அதிகமாகும் காலம் சித்திரை மாதம். மகிழ்ச்சியும், பக்தியும் கலந்து போலிவதே நமது இந்து மதத்தின் சிறப்பு. அந்த வகையில் சித்திரை மாதத்தின் சிறப்புக்களைப் பார்ப்போம்.
தமிழ்ப்புத்தாண்டு:
ஆண்டின் தொடக்கமே சித்திரை என்பதை நாம் அறிவோம். சித்திரை ஒன்றாம் தேதியை சித்திரை விஷு என்றும் தமிழ்ப்புத்தாண்டு என்றும் கொண்டாடுகிறோம். வரும் ஆண்டு முழுவதும் நன்மையும் மங்கலமும் தங்கிட இறைவனை வணங்குவது மரபு. அப்படி வணங்கும் போது பஞ்சாங்கம் படிப்பது என்பது ஒரு பழக்கம் இன்னும் சில இடங்களில் உள்ளது. பஞ்சாங்கம் என்பது ஒரு நாளின் ஐந்து அங்கங்களையும் பற்றிச் சொல்வதால் அதற்கு பஞ்சாங்கம் என்று பெயர் வந்தது. இன்றைய காலண்டர்களின் இந்து மத வடிவே பஞ்சாங்கம். வரும் ஆண்டில் என்னென்ன பண்டிகைகள், என்னென்ன விசேஷங்கள், என்னென்ன விரதங்கள் எப்போது வருகின்றன? எந்தக் கிழமைகளில் வருகின்றன? அவற்றால் என்ன பயன் என்பதை கற்றறிந்த பண்டிதர் ஒருவர் வாசித்துச் சொல்வார். பொதுவாக இந்த வைபவம் கோயிலில் வைத்தே தடைபெறும்.
அடுத்தது உணவு.உணவைப்போல மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இல்லை. ஆனால் அந்த உணவே சரியாக இல்லாவிட்டால் விஷமாக மாறிவிடும். ஆரோக்கியமான உணவே ஆரோயக்கியமான உடலுக்கு அடிப்படை. அதனால் தான் எந்த பண்டிகைக்கு என்னென்ன சமைக்க வேண்டும் எப்படி உண்ண வேண்டும் என்பதை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் முனிவர்கள். அதன் படி தமிழ்ப்புத்தாண்டுக்கு வகுத்துக்கொடுக்கப்பட்ட உணவு முறை அறுசுவை உணவு. ஆறு வகையான சுவைகளும் இடம்பெறும் உணவில். இதைத்தான் அறுசுவை விருந்து என்று சொல்கிறார்கள்.
சித்திரை மாதம் வேப்பம்பூ மிகுந்து காணப்படும். இது மிகச்சிறந்த கிருமி நாசினி. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க வல்லது. சித்திரையை அடுத்து வர இருக்கும் கடுங்கோடையில் அம்மை வைசூரி போன்ற நோய்கள் மக்களைத் தாக்காமல் இருக்க உணவில் கசப்புச் சுவையுடன் கூடிய வேப்பம் பூ இடம் பெற வேண்டும் என்று ரிஷிகளும் முனிவர்களும் கருதினார்கள். அதனால் தான் புத்தாண்டு அன்று வேப்பம் பூவைக் கட்டாயமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றனர் அவர்கள். மாங்காய்ப் பச்சடி ( புளிப்பு), வேப்பம் பூ பச்சடி (கசப்பு)அல்லது ரசம், பல காய்களும் சேர்த்து செய்த குழம்பு (காரம்), அவரைக்காய் பொரியல்(துவர்ப்பு), சர்க்கரைப் பொங்கல் (இனிப்பு) என விருந்து தயாரிக்க வேண்டும். அனைத்து உணவுப்பொருட்களிலும் உப்பு இடம் பெறுவதால் அதுவே கரிப்புச் சுவை ஆகும். சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்த உணவுகளை ஒரு தலை வாழை இலையில் பரிமாறி அவரவர் இஷ்ட தெய்வத்துக்கு நிவேதனம் செய்து தூப தீபம் காட்டி வழி பட வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள அங்கத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். அப்படிச் செய்தால் வீட்டில் ஒற்றுமை நிலைக்கும், மங்கலம் தங்கும் என்பது ஐதீகம். விரும்புபவர்கள் புதிய பஞ்சாங்கத்தையும் வைத்து